மனதைத் தொட்ட கவிதை …”நான் கடலுக்கே போகிறேன் …”

நெஞ்சுருகி குமுறியதால் தானே வந்தேன்
பஞ்சம் என்று கதறியதால் தானே வந்தேன்
கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன்,
உனக்காக கீழ் இறங்கினேன்.
கொஞ்சமும் நினைவு இல்லையா?
வஞ்சனை செய்கிறாயே
என்னை அழைத்து விட்டு ..

வறண்ட என் நிலக் காதலி
நான் முத்தமிட ஈர்த்திருப்பாள்
சுரண்டி அவள் மேனியெல்லாம்
சிமெண்டாலே போர்த்தி வைத்தாய்
நனைத்து அணைப்பதாலே
உடல் குளிர சுகம் கொள்வாள்
அனைத்தும் நிராகரித்து
கடல் சேரவே வழி செய்தாய்

குளம் குட்டை ஏரியென
அங்கங்கே தங்கியிருந்தேன்
வளம் கொளித்த அத்தனைக்கும்
பங்கம் செய்யவே வாழ்ந்திருந்தாய்

உனக்கு வழி வேண்டி
சாலைகள் நீட்டினாய்,

தொழிற்சாலைகள் கட்டினாய்,
காண்கிரீட் கட்டடமாய்
நிலமெல்லாம் நிரப்பினாய்.
நான் செல்லும் வழியடைத்து
திட்டமிட்டு துரத்தினாய்.
பூமித்தாய் மூச்சி விட திணறுகிறாள்!
மண் பார்க்க முடியாமல்
அவள் முகமெல்லாம்
மறைத்து விட்டாய்.

எனக்கென்று இருந்த சின்னஞ் சிறு
உறவுகள் தானே குளமும் குட்டையும்.
கண்மூடித்தனமாக
மண் போட்டு மூடி விட்டாய்.
என்னையே நம்பியிருந்த
கடைசி உறவுகளையும்
கொள்ளளவு ஏற்றியே உடைப்பெடுத்து
கொல்ல வைத்தாய்.

பள்ளம், குழி, சிறு தாழ்வு இருந்தாலே
வெள்ளமாய் தங்கி வாழ்வு தருவேனே?
உள்ளம் என்று இருந்திருந்தால்
கள்வன் போல் வசப்படுத்தி
கல் மண் கொட்டி குப்பை நிரப்பி
நீ மட்டும் தங்கும் தப்பை நினைப்பாயா?

என்னை வந்த வேகத்திலே
விரட்டி விட்டு
மண்ணை துளையிட்டு
நானூறு அடியில் என்ன தேடுகிறாய்?
நாற்பது அடியில்
கிணற்றின் மடியில்
நாளும் சுரந்தேனே !
ஊற்று, கால் என்றெல்லாம் நீ
முகர்ந்து குடிக்க மகிழ்ந்தேனே!
நினைவில்லையா?

எனக்கான இடத்தை நீ
உனக்காக வளைத்த மடத்தை
செய்யாமல் இருந்திருந்தால்
உன் கால் சுற்றி
கட்டிய வீட்டை சுற்றி
தேங்கி கிடக்கும் மடமையை
நானா செய்திருப்பேன்?

அவமானம் வேறு
வெகுமானமாக தருகிறாய்.
நீர் வடியும் இடமெல்லாம்
நீயாக அடைத்து விட்டு
பேரிடர் என்கிறாய்,
வெள்ளப்பெருக்கு என்கிறாய்,
மக்கள் அவதி என்கிறாய்,
இயல்பு வாழ்க்கை பாதிப்பென்கிறாய்.

அலுவலகம் செல்வதற்கு,
தொழில் நிற்காமல் நடப்பதற்கு,
மழை நிற்க வேண்டுகிறாய்.
பிழையாக குழி
நீ உனக்கே தோண்டுகிறாய்

உன் வாழ்வாதாரம் வேண்டியே
உன்னைத் தேடி நான் வந்தேன்.
உனக்கே வேண்டாம் என்ற போது
நான் கடலுக்கே போகிறேன்.
இனியாவது நீ திருந்துவாயா
உனக்காக நான் வந்தால் ?

Source….Jayaraj Mani….

natarajan

4 thoughts on “மனதைத் தொட்ட கவிதை …”நான் கடலுக்கே போகிறேன் …”

    • Natarajan's avatar natarajan December 1, 2015 / 5:57 am

      Thanks Mr. Jayaraj Mani…. I have since edited my post with due credit for your name .. Thanks once again for visiting my site

  1. Jayaraj Mani's avatar Jayaraj Mani December 4, 2015 / 8:56 pm

    Thanks a lot for making the change. I am so happy about it !!!!

    • Natarajan's avatar natarajan December 4, 2015 / 10:22 pm

      It is my duty Mr.Mani ..

Leave a comment