மரச்செக்கரைத்து எண்ணெய் எடுக்கும் பட்டதாரிகள்….

e_1474005951

நம் முந்தைய தலைமுறை வரை, மரச்செக்கில் அரைத்து எடுத்த எண்ணெயால் சமைத்த உணவுகளை உண்டு, ஆரோக்கியமாக இருந்தனர். ஆனால், இன்றோ, எண்ணெய் என்று எழுதியதை படித்தாலே, ஏகப்பட்ட நோய்க்கு ஆளாகி விடுகிறோம்.
‘சுத்திகரிக்கப்பட்டது’ என்ற பெயருடன் வரும் எண்ணைகள் எல்லாம், உண்மையில், மனித ஆயுளை குறைக்கும் அல்லது குலைக்கும் எண்ணெய்களே!
இதனாலேயே, ‘செக்கு எண்ணெய் உபயோகியுங்கள்…’ என்று பொத்தாம் பொதுவாக சொல்லி வருகின்றனர். செக்கு எண்ணெய்க்கும், மரச்செக்கு எண்ணெய்க்கும் பெரிய வித்தியாசம் உண்டு.
இரும்புச்செக்கில், 350 டிகிரி வெப்பத்தில் அரைத்து, தானியத்திலுள்ள உயிர்ச்சத்துக்கள் அனைத்தையும் கொலை செய்து, ஒரு மோசமான திரவமாக பிழிந்து எடுப்பதை தான், செக்கு எண்ணெய் என்று கூறி, விற்கின்றனர், பலர். இது, நம் உடல் நலத்திற்கு உதவாது.
மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும் போது, அதிகபட்சம், 35 டிகிரி வெப்பம் மட்டுமே இருக்கும். இதில், உயிர்ச்சத்துக்கள் அதன் தன்மையை இழப்பதில்லை. இதுவே நம் உடலுக்கும், உயிருக்கும் முழு நன்மை வழங்கும் எண்ணெய்.
மரத்தாலான செக்கை பயன்படுத்தி, பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரித்து, விற்பனை செய்கின்றனர், திருச்சியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர்.
திருச்சி, தாராநல்லூர், எஸ்.வி.ஆர்., கார்டன் பகுதியில், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட சிறிய கட்டடத்தில், மரத்தினாலான செக்கு வைத்துள்ளனர், எஸ்.அகஸ்டின் ராஜா மற்றும் எஸ்.ஜான்பால் ராஜிவ்.
பட்டதாரிகளான இவர்கள், சமையல் எண்ணெய் கலப்படம் தொடர்பான செய்திகளை படித்து, ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்காத சமையல் எண்ணெயை நாமே உற்பத்தி செய்வோம் என, முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து, சிறிய கட்டடத்தில் மரச்செக்கு அமைத்து, எள், தேங்காய் மற்றும் கடலையை செக்கில் தனித் தனியே ஆட்டிப் பிழிந்து, எண்ணெய் எடுத்து, வியாபாரம் செய்து வருகின்றனர்.
சந்தையில் விற்பனையாகும், பிற சமையல் எண்ணெய்களின் விலையை விட, இதன் விலை கூடுதலாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து அகஸ்டின் ராஜா கூறுகையில், ‘நம் முன்னோர் செக்கில் பிழிந்தெடுக்கும் எண்ணெயை, அப்படியே பயன்படுத்தினர். உடற்பயிற்சி முடிந்ததும், ஒரு கிண்ணம் நல்ல எண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் கடைப்பிடித்தனர். உணவுக்கு மட்டுமின்றி, குளியலுக்கும், மசாஜ் செய்யவும் நல்லெண்ணெய் பயன்படுத்தியதால், மூட்டுவலி பிரச்னையின்றி வாழ்ந்தனர். அதனாலேயே, எள் எண்ணெய் என்பதற்கு பதிலாக, நல்ல எண்ணெய் என்று குறிப்பிட்டனர்.
‘அதனால் தான், நாங்களும் பாரம்பரியத்தை காக்கும் வகையில், மரத்தாலான செக்கு அமைக்க முடிவு செய்தோம். வேம்பு மரத்தில் உலக்கையும், வாகை மரத்தில் உரலும் கொண்ட செக்கு அமைத்து, மின்மோட்டார் உதவியுடன், செக்கை இயக்குகிறோம்.
‘முதலீட்டுக்கு ஏற்ப, சொற்ப லாபத்தில், விற்பனை செய்கிறோம். இயந்திரத்தில் எண்ணெய் பிழியும் போது, அது மூலப்பொருளை நன்றாகப் பிழிந்து விடுவதால், அதில் கிடைக்கும் புண்ணாக்கில், உயிர்ச் சத்துகள் மிஞ்சாது. ஆனால், மரச்செக்கில், மெதுவாக எண்ணெய் பிழிவதால், 80 சதவீதம் மட்டுமே எண்ணெய் கிடைக்கிறது. இதனால், பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும். மேலும், அதில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் அதிகமிருக்கும். இதில் கிடைக்கும் புண்ணாக்கிலும், உயிர்ச்சத்துகள் எஞ்சியுள்ளதால், அதை உண்ணும் கால்நடைகளுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
‘மரத்தாலான செக்கை பயன்படுத்தி, எண்ணெய் ஆட்டும் முறை குறித்து, இலவசமாக கற்றுத் தருகிறோம்…’ என்றார்.
சகோதரர்கள் இருவரின் உடலிருந்தும் வழிவது வியர்வையா, எண்ணெயா என்று தெரியாத அளவிற்கு, கடுமையாக உழைக்கும் இவர்களது உழைப்பிற்கு பின் இருக்கும் லட்சியமும், சமூக அக்கறையும், இவர்களை நிச்சயம் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்!
இவர்களை வாழ்த்த நினைத்தால், தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 96777 90080.

Source….
எல்.முருகராஜ்  in http://www.dinamalar.com

natarajan

Leave a comment