மகா பெரியவா சரணம்.
நேற்றைய தினம் (8.10.2016 சனி) முகநூல் நண்பர்கள் சிலருடன் தீபாவளியை ஒட்டி வேத பாடசாலை மாணவர்களுக்கும் வாத்தியார்களுக்கும் வஸ்திர தானம் செய்தவதற்காகச் சென்றிருந்தேன்.
அப்போது குரோம்பேட்டை சங்கர்லால் ஜெயின் தெருவில் இருக்கும் ஒரு பாடசாலைக்குச் சென்றிருந்தேன். அங்கு சுமார் 50 மாணவர்கள் வேதம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்செயலாக ஒரு வேதக் குழந்தையைப் பார்த்தேன். பால் மணம் மாறாத பருவமோ என்று பிரமிக்க வைத்தது. தன் கல்மிஷம் இல்லாத முகத்துடன் பார்த்தவுடனே அனைவரையும் கவர்ந்து விட்டான் அந்த சுட்டிப் பையன். அவன் பெயர் – கபிலானந்த். வயது 6.
பாடசாலை வாத்தியார் ஸ்ரீ சிவகுமார் மாமாவிடம் கேட்டேன், ‘‘என்ன மாமா… இவ்ளோ சின்னவனா இருக்கானே… இவனோட அப்பாம்மா எங்கே இருக்கா?’’
‘‘இங்கே மெட்ராஸ்ல மாம்பலத்துலதான் இருக்கா?’’ என்றார்.
உடனே, ‘இந்தக் குழந்தை என்ன காரணத்துக்காக இங்கே அனுப்பப்பட்டிருப்பான்?’ என்று எல்லோரும் நினைப்பது போன்ற எண்ணங்களே என் மனதில் ஓடியது.
ஸ்ரீ சிவகுமார் சொன்னார்: ‘‘கபிலானந்தோட அப்பா பிஸினஸ் பண்றார். அவா ஃபேமிலி ரொம்ப நன்னாவே இருக்கு.’’
எனக்குப் பிரமிப்பு. ‘‘அப்படீன்னா அவா ஏன் வேதம் படிக்க பையனை அனுப்பணும்? நல்ல கான்வென்ட், இங்கிலீஷ் எஜுகேஷன்னு இவனை அனுப்பலாமே?’’ என்று கேட்டேன்.
‘‘இந்தக் குழந்தையோட அப்பா கல்யாணம் ஆன பிறகு ஒரு சங்கல்பம் பண்ணிண்டாராம். ‘எனக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையா பொறந்தா அதை வேதத்துக்குக் கொடுத்துடணும்’னு ஒரு சங்கல்பம் எடுத்துண்டாராம். மகா பெரியவா ஆசைப்படி அவருக்கு மொத குழந்தை ஆணாகவே அமைஞ்சுடுத்து. உடனே வேதத்துக்குக் கொடுத்துட்டார்’’ என்றார் ஸ்ரீ சிவகுமார்.
என்னையும் அறியாமல் என் கண்கள் பனித்து விட்டன.
வேதத்துக்கு என்று குழந்தைகளைக் கொடுப்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். மகா பெரியவா பட்ட பாடு வீண் போகவில்லை. வேதம் செழித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த வேத விருட்சம் நன்றாக வளர, நாமெல்லாம் நீர் ஊற்ற வேண்டும். உரமிட வேண்டும். இவர்களைக் காக்க வேண்டும் என்கிற சங்கல்பம் எடுத்துக் கொண்டாலே போதும்.
தேசத்துக்காக ஒரு மகனைத் தருவதும், வேதத்துக்காக ஒரு குழந்தையைத் தருவதும் – என்னைப் பொறுத்தவரை இரண்டுமே தியாகம்தான்!
நாட்டு எல்லையை பார்டரில் இருந்து கொண்டு ஒரு வீரன் துஷ்டப் படையிடம் இருந்து காப்பாற்றுகிறானே… அதுபோல் ஊருக்குள்ளே இருந்து கொண்டு வேதம் படித்த ஒருவன் துஷ்ட சக்திகளிடம் இருந்து நம்மைக் காப்பாற்றுகிறான்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
Source….Input from my friend Shri Swaminathan thro mail
Natarajan
