மாவீரன் அலெக்ஸாண்டரும்
மாமுனிவர் அருணகிரியாரும்
எழுதியவர் உமா பாலசுப்பிரமணியன்
கி.மு. 356 ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மாஸிடோனியாவில் மன்னர் பிலிப்ஸிற்கு மகனாகப் பிறந்த மாவீரன் அலெக்ஸாண்டரை – இரும்புப் பறவை – என்று சொல்வார்கள். அவன் பிறந்த போதே, அறிவுக் கூர்மையும் வீரமும் நிறைந்து இந்த உலகைக் கட்டியாள்வான் என்று சோதிட வல்லுனர்கள் யாவரும் உறுதி மொழி அளித்தனர். சிறுவயதிலேயே யாவருக்கும் அடிபணியாத ஃபுஸிபேலஸ் என்னும் குதிரையை, அது தன் நிழலை நினைத்து மருளுகிறது எனக் கண்டு பிடித்து, அதை அடக்கித் தன் புத்தி சாதுர்யத்தைத் தெரியப்படுத்தினான் மாவீரன். ஒட்டுமொத்த உலகையும் வெல்ல நினைத்துப் பல வெற்றிகளைக் குவித்து, அதோடு உயர் பண்புகளையும், நல்ல நெறிமுறைகளையும் கடைப்பிடித்து வந்த அவனுக்கு முப்பத்து மூன்றாம் (33) வயதிலேயே மரணம் தழுவியது.
அதே போன்று 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரும் தன் இளமை வயதில் தகாத செயலினால் சலனமடைந்தும், கொடியநோயினால் தளர்ந்தும் வாழ்க்கையை வெறுத்து, திருவண்ணாமலையிலுள்ள வல்லாளர் கோபுரத்தினின்றும் கீழேவீழ்ந்தார். அத்தருணம் சுரபாஸ்கரனான முருகன் அவரைத்தாங்கிப் பிடித்து, அவருக்கு உபதேசம் செய்து, ‘முத்தைத்தரு’ என்ற திருப்புகழ் பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்து, பின் பல பாடல்கள் நமக்குக் கிடைக்கப் பெரும் உதவி புரிந்தார். முருகன் இல்லையேல் அருணகிரி நாதரும் அலெக்ஸாண்டர் போல் சிறுவயதிலேயே உயிர் நீத்திருக்க வேண்டும். ஆனால் அடியார்கள் செய்த புண்ணியத்தினால், முருகன் அவ்வாறு அருள் செய்து, திருப்புகழை உலகுக்குக்கொண்டுவந்திருக்க வேண்டும். எது எப்படியோ அதனால் நாம் பயனுள்ளவர்களாகத் திகழ்கின்றோம்.
இப்பொழுது நம் மனதில் “அது சரி, மாவீரனான அலெக்ஸாண்டருக்கும், முருகன் அருள் பெற்ற அருணகிரிநாதருக்கும் என்ன சம்பந்தம்?” என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அந்தச் சந்தேகத்தைத் தீர்த்து விடை கிடைக்க இப்பொழுது விரிவாக ஆராய்ச்சி செய்வோம்.
“பக்தர்கணப்ரிய நிர்த்த நடித்திடு பக்ஷி நடத்திய குகா பூர்வ
பட்சிம தக்ஷிண உத்தர திக்குள பக்தர்கள் அற்புதம் என வோதும்
சித்ர கவித்துவ சத்த மிகுத்த திருப்புகழைச் சிறிதடியேனும்
செப்பென வைத் துலகிற்பரவ தரிசித்த அனுக்ரகம் மறவேனே”
Arunagirinathar
(திருப்புகழ்) என்று கூறிய அருணகிரிநாதரின் தத்துவமும், மாவீரன் அலெக்ஸாண்டர் தன் இறுதி நாட்களில் கூறிய சொற்களும். வாழ்க்கைக்கு ஏற்ற முக்கியமான தத்துவமாக விளங்குவதைக் காணலாம்.
மாவீரன் அலெக்ஸாண்டர் எண்ணற்ற நாடுகளைக் கைப்பற்றி வெற்றி கொண்டு, பொன்னும் பொருளும் சேமித்து வைத்து, பெரும் அரசனாகத் திகழ்ந்தான். இருந்தாலும் அதை அநுபவிக்க முடியாதபடி இளமையிலேயே அவனுக்கு விதிப்படி மரணம் ஏற்பட்டது. உலகிலுள்ள பல சிறந்த மருத்துவர்கள் அவனுக்குச் சிகிச்சை அளித்தும் பலனில்லாது போயின. மரணப் படுக்கையில் இருந்த அலெக்ஸாண்டர் தன் தளபதியையும், மற்ற உயர் அதிகாரிகளையும் அழைத்து,
“உங்களிடம் நம்பிக்கை வைத்து நான் கடைசியாக மூன்று ஆணைகள் இடுகிறேன். அதை நீங்கள் யாவரும் முன்னின்று நிறைவேற்ற வேண்டும்,” என்றான்.
“முதலாவதாக நான் இறந்த பிறகு என் சடலம் இருக்கும் சவப்பெட்டியை, எனக்கு கடைசிவரை மருத்துவம் பார்த்த சிறந்த மருத்துவர்கள்தான் சுமந்து செல்ல வேண்டும்.”
“இரண்டாவதாக, நான் வெற்றி கண்டு சேமித்து வைத்த வைரம், பொன்மணிகள் போன்ற விலையுயர்ந்த. பொருட்களை, என்னைக் கொண்டு செல்லும் பாதையில் இரைத்துக் கொண்டே செல்ல வேண்டும்.”
“கடைசியாக, சவப்பெட்டியின் மேலே இரண்டு துளைகள் இட்டு, என் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி மேலே தூக்கியபடி பொருத்த வேண்டும்,” என்றான்.
மற்றவர்கள் இதன் பொருள் தெரியாது விழித்ததைக் கண்டு, தானே அதன் உட்பொருளை உணர்த்துவதாகக் கூறினான் மன்னன்.
“மனிதர்களாகிய நாம் எவ்வளவு சிறந்த வைத்தியர்களை அழைத்து வந்து வைத்தியம் பார்த்தாலும் அதையும் மீறி அவன் இறந்துபடுகிறான் என்பதை உணர்த்தவே நான் மருத்துவர்கள்தான் சவப்பெட்டியை சுமந்து வரவேண்டும் என்றேன்,” என்றான்.
இதையே “தலைமயிர் கொக்குக்கு” என்ற பழமுதிர் சோலை திருப்புகழில், அருணகிரிநாதரும்.”
கக்கல் பெருத்திட்டு
அசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச்
சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் பலகாலும்
திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத்
திரிபலை சுக்குத் திப்பிலி இட்டு
தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் டுயிர்போமுன்.
திருப்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித்
திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச்
செனனம மருக்கைக் குப்பர முத்திக் கருள்தாராய்.
என்று கூறியிருக்கிறார்.
உண்ட உணவு உள்ளே போகாமல் கக்கலும் விக்கலும் மிகுத்து உடலின் சக்தி போய், சளியும், பித்தமும் முற்றி, உடம்பில் எரிச்சல் ஏற்பட்டு, அதைத் தீர்க்கத் தைலத்தை தேய்த்து விட்டுக்கொண்டும் அடங்காது, கடுக்காய், தான்றிக்காய், நல்லி வற்றல் (திரிபலை) இவைகள் மூன்றுடன், சுக்கும், திப்பிலியும் சேர்த்துக் கசாயம் இட்டு, அதைத் தெளியவைத்து,வடிகட்டி, பருகினாலும் உடல் மடிந்து உயிர்போய் விடுகிறது. அங்ஙனம் உயிர் போவதற்கு முன் திருப்புகழைக் கற்று,அதில் உள்ள சொற்களையெல்லாம் நன்றாகப் பயின்று, உன் திருவடியைப் பற்றிக் கொண்டு, உன் புகழை ஏத்தி, பிறவிநோய் அகற்றும் பரமுத்தியை அருள்வாய் “என்று முருகனை வேண்டுகிறார்.
அதே போன்று உரையும் சென்றது – என்று தொடங்கும் திருப்புகழிலும்
உரையும் சென்றது, நாவும் உலர்ந்தது,
விழியும் பஞ்சுபோல் ஆனது கண்டயல்
உழலும் சிந்துறு பால் கடை நின்றது கடைவாயால்
ஒழுகும் சஞ்சல மேனி குளிர்ந்தது
முறிமுன் கண்டு கைகால்கள் நிமிர்ந்தது
உடலும் தொந்தியும் ஓடி வடிந்தது பரிகாரி
வர ஒன்றும் பலியாதினி என்றன் பின்
உறவும் பெண்டிரும் மோதி விழுந்தழ
மறல் வந்து இங்கு எனதாவி கொளும்தினம்…
அதாவது பேச்சு நின்று, நாக்கு உலர்ந்து, விழியும் பஞ்சுபோல் ஆகி, கடைவாயில் பால் ஒழுகி நின்று, எப்பொழுதும் அலைந்துகொண்டிருக்கும் உடம்பு குளிர்ந்து, அவயவங்கள் எல்லாம் செயலிழந்து போகும் தருணத்தில், சிறந்த மருத்துவரைக் கூப்பிட்டு வைத்தியம் பார்த்தாலும். பலனளிக்காது, இனி பயன் இல்லை பிழைக்கமாட்டார் என்று மருத்துவர் கூறியவுடன், அருகிலுள்ள உறவினர்கள், பெண்கள் யாவரும் மோதிக்கொண்டு அழத் தொடங்கும் நேரத்தில், எல்லாவற்றையும் மீறிக் கொண்டு இயமன் வந்து என் உயிரை எடுப்பான் அந்தவேளையில் மயிலும், செங்கைகள் ஆறிரு திண்புயத்துடனும், வனமின் குஞ்சரிமாருடன் எந்தன் முன் காட்சி தரவேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார்.
எவ்வளவுதான் மருத்துவம் செய்திடினும் உடலினின்றும் உயிர் போகும் தருணத்தை யாராலும் மாற்றமுடியாது என்ற தத்துவத்தை அருணகிரிநாதரும், அலெக்ஸாண்டரும் அவரவர்கள் பாணியில் விளக்கியிருக்கிறார்கள்.
இரண்டாவதாக – தான் வெற்றிகண்டு சேமித்து வைத்த பொருட்களை வீதியில் இரைக்கவேண்டும் என்பதன் கருத்து என்னவென்றால் எவ்வளவுதான் செல்வங்களைச் சேமித்து வைத்தாலும் அது கடைசியில் நம்முடன் கூட வராது, இடுகாடுவரைதான் வரும். அவைகள் பூமியிலேயே தங்கிவிடும். அதனால் அதை இரைத்தால் மற்றவற்களுக்காகவாவது பயன்படும், என்பதாகப் புரியவைக்கிறான்.
இந்தக் கருத்தை கந்தர் அலங்காரப் பாடல்களில் அழகாக எடுத்துரைக்கின்றார் வாக்கிற்கு அருணகிரி.
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்குஎன்றும்
நொய்யில் பிளவள வேனும் பகிர்மின்கள் நுங்கட்கு இங்கண்
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போற்
கையில் பொருளும் உதவாது காணும் கடை வழிக்கே (கந்தர் அலங்காரம் – 18 )
ஒளி பொருந்திய வேலை ஏந்திய முருகனை வாழ்த்தி, ஏழை எளியோர்களுக்கு நொய்யில் சிறிது அளவேனும் பகிர்ந்து உண்ணுங்கள். இறந்து போனபின், நாம் செல்லும்கடைசி பிரயாணத்திற்குக் கூட, எப்படி நம் உடலின் நிழலே நமக்கு உதவாதோ, அப்படியே கையில் சேர்த்து வைத்திருக்கும் பொருளும் கடை வழிக்கு உதவாது. அதனால் நம் உடலில் உயிர் இருக்கும் பொழுதே நம் செல்வத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழப் பழக வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார் அருணகிரிநாதர். இக் கருத்தையேதான் மாவீரனும் அமைதியாகக் கூறினான்.
அதே போன்று மற்றொரு அலங்காரத்தில்
கோழிக் கொடியன் அடி பணியாமல் குவலயத்தே
வாழக் கருதும் மதியிலிகாள் உங்கள் வல்வினை நோய்
ஊழிற் பெருவலி உண்ண ஒட்டாது உங்கள் அத்தமெல்லாம்
ஆழப் புதைத்து வைத்தால் வருமோ நும் மடிப் பிறகே
(கந்தர் அலங்காரம் – 20)
கோழியைக் கொடியாகத் தாங்கிய முருகனின் பாதகமலங்களைத் தொழாது வாழுபவர்களே! உங்கள் தீவினை நோயாகிய விதி, நீங்கள் சேமித்தபொருளை அனுபவிக்க விடாது, அப்படிப்பட்ட உங்கள் பொருள் எல்லாவற்றையும் நிலத்தில் ஆழமாகப் புதைத்துவைத்தால் அவை நீங்கள் இறந்தபிறகு உங்களைப் பின்பற்றிவருமா?– வராது என்ற பொருளில் கூறுகிறார் அருணகிரிநாதர். (ஆழப் புதைத்து வைக்காமல் வேண்டியவர்களுக்குக் கொடுங்கள்)
மூன்றாவதும் கடைசியுமாகத் தன் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கிப் பொருத்துமாறு கூறியதன் விளக்கம், தான் கடைசி பிரயாணம் செல்லும்போது எதுவும் கையில் எடுத்துச் செல்லவில்லை என்பதைக் குறிப்பதற்கேவாகும்.
இதையேதான் அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில்
மலையாறுகூறெழ வேல்வாங்கினானை வணங்கி அன்பின்
நிலையான மாதவம் செய்குமினோ நும்மை நேடிவரும்
தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையும் கண்டீர்
இலையாயினும் வெந்தது ஏதாகினும் பகிர்ந்து ஏற்றவர்க்கே.
கிரௌஞ்சமலை ஆறு துண்டுகளாகப் போவதற்காக, வேலை ஏவிய முருகனை வணங்கி, அன்புடன் இலைகளாகிய கீரையானாலும்,வெந்த உணவுப் பொருள் எதுவாக இருந்தாலும், இரந்தவர்களுக்கு இல்லை என்னாது உணவின் ஒரு பகுதியை அளித்துப் பெரிய தவத்தைச் செய்யுங்கள்! அங்ஙனம் செய்வதனால் உண்டாகும் புண்ணியம், உம்மைத் தேடிப் பின்னாலே வர இருக்கும் நீண்ட வழிக்குக் கட்டுச் சோறும், நெருங்கிய துணையுமாகும். இதை உணர்ந்து செயல்படுங்கள், என்கிறார் கந்தர் அநுபூதி பாடிய அருணகிரிநாதர்.
அதே போன்று
கூர் கொண்ட வேலனைப் போற்றாமல் ஏற்றங்கொண்டு ஆடுவீர்காள்
போர்கொண்ட காலன் உமைக்கொண்டு போம் அன்று பூண்பனவும்
தார் கொண்ட மாதரும் மாளிகை யும் பணச் சாளிகையும்
ஆர்கொண்டு போவர் ஐயோ கெடுவீர் நும் அறிவின்மையே
(கந்தர் அலங்காரம்—78)
கூர் வேலை ஆயுதமாகக் கொண்ட வேலாயுதனை வழிபடாது, நாம் ஏற்றமாக இருக்கிறோம் என்று தம்மைத்தாமே பாராட்டிக் கொண்டு திரியும் மக்களே! போர்க்கோலத்தைக் கொண்ட யமன் உம் உயிரை உடலினின்றும் பிரித்துக் கொண்டுபோகும் அந்நாளில்,நீங்கள் அணியும் ஆடை ஆபரணங்களையும், மாலை அணிந்த மனைவியரையும், மாளிகையையும்,சேர்த்து வைத்த பணப்பையையும், ஆர் கொண்டு போவார்கள்? (யாரோ கொண்டு போகப் போகிறார்கள் உங்களுடன் கூட வராது, விரித்த கையுடன் தான் செல்ல வேண்டும்) ஐயோ! கெட்டுப்போகின்றவர்களே! உம் அறிவின்மை இருந்தவாறு என்னே! என்று அருணகிரிநாதர் அங்கலாய்க்கிறார். (அதற்கு முன்னே அதைப் பகிர்ந்து கொடுங்கள் என்பது கருத்து.)
இதிலிருந்து நாம் யாவரும் ஒன்று நன்கு தெரிந்து கொள்ள வேண்டும், மா வீரன் அலெக்சாண்டராய் இருந்தால் என்ன? அல்லது அருளாளர் அருணகிரிநாதராய் இருந்தால்தான் என்ன? எம்மதமும் சம்மதம் என்ற மனத்தோடு அவர்கள் கூறிய வார்த்தைகளில் எவ்வளவு ஆழ்ந்த தத்துவங்கள் (உண்மைகள்) நிரம்பியிருக்கின்றன என்பதனை நாம் உணர்ந்துகொண்டு, காலம் தாழ்த்தாது அதன்படி செயல்படுவோமேயானால், நாம் உலகத்தில் வாழும் பொழுதே பக்குவப்பட்டு, கவலைகளும், துன்பங்களும் வந்தாலும் அதை எதிர்க்கும் சக்தி நிரம்பியவர்களாகத் திகழ்ந்து பரிமளிப்போம் என்பது திண்ணம்! அதற்கு இறைவன் அருள்பாலிக்கட்டும்! முருகன் நாமம் வாழ்க! அவனை இன்றே நன்கு ஏத்தத் துவங்குவோம்!
source:::: Uma Balasubramanian in Murugan Bhakthi Newsletter
natarajan