கேரள மாநிலம் பாலக்காடு வைத்தியநாதபுரத்தில் இரண்டு ரூபாய் சம்பளம் பெற்ற ஆசிரியர் ராமய்யரின் எளிய குடும்பத்தில் பிறந்து, நாட்டின் ராஜதந்திரியாக, சட்ட அமைச்சராக, ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி இன்றும் எளிய மனிதராக, மக்களுடன் மக்களாக வாழும் ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் நூறாவது பிறந்த நாள் இன்று (நவ.,15).

இந்தியாவின் கடைக்கோடி மனிதனுக்கும் நீதியின் பலன் கிடைக்க வேண்டும் என தள்ளாத வயதிலும், தளராமல் பணிபுரிபவர் கிருஷ்ணய்யர். நூறாவது வயதிலும் புத்தகங்களுக்கு முன்னுரை எழுதுவது, பொது நிகழ்வுகளில் பங்கெடுப்பது, ஊடகத்தின் மூலம் சமூகத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிப்பது என ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து, அயராமல் அரும்பணியாற்றும் கிருஷ்ணய்யரின் வரலாறு, இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டு.
காந்திஜியிடம் கற்றது:
அண்ணாமலை பல்கலையில் 1933 பிப்.,16ல் இளங்கலை மாணவராக கிருஷ்ணய்யர் படித்த போது, காந்திஜி வந்திருந்தார். அவரது தேசப்பற்றை தூண்டும் எழுச்சியுரை கிருஷ்ணய்யரை ஈர்த்தது. காந்திஜியின் எளிய தோற்றம், உடை மற்றும் செயல்பாடுகள் கிருஷ்ணய்யரின் எளிமை வாழ்க்கைக்கு காரணமாயின. ஒன்றுபட்ட சென்னை மாநில சட்டசபை உறுப்பினர், கேரள மாநில சட்ட அமைச்சர், ஐகோர்ட் மற்றும் சுப்ரீம்கோர்ட் நீதிபதி, சட்ட கமிஷன் உறுப்பினர் என அவர் ஏற்ற அத்தனை பணிகளிலும் சாதனைகளை செய்து, அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார்.
அனாதை குழந்தைகளுக்காக ஓய்வூதியம்:
சென்னை சட்டசபை, கேரள சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியில் ஈடுபட்ட கிருஷ்ணய்யரின் ஓய்வு சம்பளம் மாதம் தோறும் அவருடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஓய்வூதியத்தில் ஒரு பைசாவை கூட கிருஷ்ணய்யர் சொந்த தேவைகளுக்கு செலவிடுவது இல்லை. அதில் வரவு ரூ.ஒரு லட்சமாக உயர்ந்ததும், அனாதை குழந்தைகளின் கல்விக்காகவும், வளர்ச்சிக்காகவும் தொண்டு அமைப்புகளுக்கு அனுப்பி விடும் தர்ம சிந்தனையாளராக திகழ்கிறார்.
இன்றும் உதவிடும் தீர்ப்புகள்:
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இவர் வழங்கிய தீர்ப்புகள், வறியவர், எளியவர், பெண்கள், சிறார்கள், சிறைப்பட்டோர் என சமூகத்தின் கடைக்கோடி மக்களின் உரிமைகளை கோர்ட் மூலம் வென்றெடுக்க இன்றும் உதவுகின்றன. கேரள ஐகோர்ட் நீதிபதியிலிருந்து டில்லி சட்டகமிஷன் உறுப்பினராக பணிபுரிய சென்ற போது, எர்ணாகுளத்திலுள்ள சொந்த வீட்டை வருமான வரி தீர்ப்பாயத்திற்கு வாடகைக்கு விட்டார். 1980ல் சுப்ரீம் கோர்ட்டிலிருந்து ஓய்வு பெற்று திரும்பிய போது, அவரது வீட்டை காலி செய்ய மறுத்த வரி தீர்ப்பாயம், ‘கிருஷ்ணய்யர் ஒண்டிக்கட்டை தானே. மனைவியும் இறந்து விட்டார். மகன்களும் வெளி நாட்டில் வசிக்கின்றனர். இவருக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு’ என்றது. சொந்த வீட்டின் வாடகைதாரர்களை காலி செய்ய கிருஷ்ணய்யர் உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, ஐந்தாண்டுகள் போராடி வெற்றி பெற்றார். வாடகைதாரர்களை காலி செய்ய, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து குறுக்கு வழியில் செல்லாமல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது அவரது நேர்மைக்கும், சட்ட நடவடிக்கைகள் மீது அவருக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டு.
நீதித்துறையின் பொற்காலம்:
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக 1972 முதல் 1979 வரை கிருஷ்ணய்யர் பணிபுரிந்த காலம், நீதித்துறை பொற்காலம். பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், கோர்ட் கதவுகளை தட்டலாம் என்ற நம்பிக்கை விதை, மக்கள் மனதில் கிருஷ்ணய்யரின் தீர்ப்புகளால் விதைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் மட்டுமே கோர்ட்டில் குறைகளை களைய வழக்கு தாக்கல் செய்ய முடியும். விதி விலக்காக பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்த ஒரு குடிமகனும் வழக்கு தொடுப்பது பொது நல வழக்காடுதல் என்பர். பொது நல வழக்காடுதலை இந்திய நீதித்துறையில் பரவலாக அறிய செய்தவர் கிருஷ்ணய்யர். கோர்ட்டிற்கு வரும் கடிதங்கள், தந்திகளில் பிரச்னைகளின் முக்கியத்துவம் கருதி ரிட் மனுக்களாக ஏற்று உரிய உத்தரவுகளை பிறப்பித்தார். இவரது முற்போக்கான தீர்ப்புகளின் தொடர்ச்சியாக தான் இன்று தினமலர் உட்பட நாளிதழ் செய்திகள் கோர்ட்களில் தன்னிச்சையாக பொது நல வழக்குகளாக ஏற்கப்பட்டு, அரசுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
மக்களை நோக்கி கோர்ட்:
‘கோர்ட்களை நோக்கி மக்கள் செல்வதை விட, மக்களை நோக்கி கோர்ட் செல்ல வேண்டும்’ என வலியுறுத்துபவர். வழக்கு செலவுத் தொகை இல்லாத வறியவர்களுக்கு உதவ, மாவட்டங்கள் தோறும் இலவச சட்ட உதவி மையங்கள் உருவாக வித்திட்டு நீதித்துறையின் துருவ நட்சத்திரமாக திகழ்பவர் கிருஷ்ணய்யர். ‘கடவுள் கொடுத்த உயிரை மனிதன் பறிக்க அதிகாரமில்லை’ என மரணதண்டனைக்கு எதிராக ‘அரிஜன்’ இதழில் காந்திஜி கூறிய கருத்துக்களால் கவரப்பட்ட கிருஷ்ணய்யர், மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை விட சீர்திருத்தப்பட வேண்டும் என்ற கொள்கை உடையவர். பாதிக்கப்பட்டோரின் உரிமைகள், பெண்கள் மற்றும் சிறார்களின் உரிமைகள், சிறைவாசிகளின் உரிமைகள் குறித்து, இவர் வழங்கிய தீர்ப்புகளால் ‘மனித உரிமை சட்டவியலின் பிதாமகன்’ என அறியப்படுகிறார்.
மகன் வழக்காட தடை:
மகன் பரமேஷ்வர் சட்டப்படிப்பு முடித்து இளம் வக்கீலாக தொழிலை துவங்கிய போது, கிருஷ்ணய்யர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்தார். தான் உயர் பதவியில் இருக்கும் போது, மகன் கோர்ட்டில் வழக்காடி உத்தரவுகளை பெற்றால் தவறாக பேசப்படும் எனக்கருதிய கிருஷ்ணய்யர், ‘பதவி காலம் முடியும் வரை மகன் பரமேஷ்வர் எந்த கோர்ட்டிலும் வழக்காட வேண்டாம்’ என தடை போட்டு, நீதித்துறை வாழ்வில் உயர் அறநெறிகளை கடைபிடித்தவர். மேற்கத்திய மோகத்தை அறவே வெறுத்தவர். சென்னை கிரிக்கெட் கிளப் வளாகத்தில் நடந்த விருந்தில் சிறப்பு அழைப்பாளராக வேட்டி சட்டை அணிந்து சென்ற கிருஷ்ணய்யர், வாயிற்காவலர்களால் தடுக்கப்பட்டார். கோட், சூட் அணிந்து வந்தால் தான் உள்ளே நுழைய முடியும் என்ற விதிகளை ஏற்க மறுத்து, அங்கிருந்த வருகை பதிவேட்டில் கண்டனத்தை பதிவு செய்த பிறகு, நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியேறினார். மனிதாபிமானமே சட்டத்தின் அடிப்படை என தீர்ப்புகளை வழங்கியவர். பல்வேறு நன்னெறி கோட்பாடுகளுடனும், உயர்ந்த அறத்துடனும் நம் முன்னே நடமாடும் சாட்சியாக, வாழும் வரலாற்று நாயகராக கிருஷ்ணய்யர் திகழ்கிறார்.
– ஆர்.காந்தி,
ஐகோர்ட் வக்கீல்,
98421 55509,
gandhiadvocate@ymail.com in http://www.dinamalar.com
Natarajan