“எங்கே, அந்த பெல்காம்….இருக்கானா?”
என்கிறது நெய்-மிளகாய்க் குரல்.
மிளகாயை விட்டு விட்டு!.
“இதோ இருக்கேன்” என்று தண்டம்
ஸமர்ப்பிக்கிறார் பெல்காம்…..
“நான் இந்த மஹாராஷ்ட்வாவிலே சுத்த
ஆரம்பிச்சதிலேருந்து நீ எத்தனை தடவை
என்னைப் பார்க்க ஓடி வந்திருப்பே?”
மிளகாயே அறியாத சுத்த நெய் தன் உள்ளே
வர்ஷிப்பதாக உணர்ந்த பெல்காம்….தான் அடிக்கடி
பெரியவாள் தர்ஸனத்துக்கு வந்திருப்பதை இன்று
அவரே எல்லோருக்கும் தெரியப்படுத்துவதில்
உற்ற பெருமிதம். அவர் ‘இத்தனாம் தடவை’ என்று
சொன்ன குரலிலே பிரதிபலிக்கிறது.
“ஆமாம், உன்னாலே எப்படி இத்தனை தடவை
வர முடியறது?”
“எனக்கு ரயில்வே உத்யோகமோல்லியோ?
‘பாஸ்’லே வரேன்.
“ஓஹோ! ஸரி! உன் பாஸை இங்கே வை”
என்று தமக்கு முன் தரையைத் தட்டிக்
காட்டுகிறார் ஸ்ரீ பெரியவர்.
பெரியவாள் பணித்த வண்ணமே அந்த பக்தர் செய்கிறார்.
இருள் பிரியாத அந்த இளம் பொழுதிலே பெரியவரின்
திருக்கர அழுத்தலில் பக்கத்தில் இருந்த டார்ச்
அந்த ரயில்வே பாஸ் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது.
பெரியவர் பாஸை உன்னிப்பாகக் கவனிக்கிறார். பேசத்
தொடங்குகிறார். நெய்யிலே மிளகாய் வறுபடுகிறது.
“பாஸ்லே எக்ஸாமினர் கையெழுத்தே ஆகல்லே.
எனக்குத் தெரியும், ரயில்வேக்காராளுக்குப் பாஸ்
இருந்தாலும் இத்தனை ட்ரிப்தான் போகலாம்னு கணக்கு
உண்டுன்னு. இதிலேயானா நீ இத்தனை தடவை வந்ததுக்குக்
கணக்கா ஒரு கையெழுத்துக்கூட காணும்! நீ என்ன
பண்ணணும் தெரியுமா? முதல் காரியமா இந்தப் பாஸைக்
கொண்டு போய் ‘ஸரன்டர்’ பண்ணணும். இனிமேல் உன்
கைக்காசைச் செலவழிச்சுண்டு வர முடியும்னாலே
என்னைப் பாக்க வரணும்.!”
ஹர ஹர சங்கரர் அறநெறிச் சங்கரராக ஜ்வாலை விட்டு
அனைவரையும் பிரமிக்கச் செய்கிறார்.
இந்த அயனான சந்தர்ப்பத்திலே சென்னையைச்
சேர்ந்த சிஷ்ய பிரமுகர் ஒருவர் ஆயிரம் ரூபாய்
காணிக்கை பெரியவாளுக்குச் செலுத்த முன் வருகிறார்.
இதற்குப் பதினோராண்டுகளுக்கு முன் முனிவர்
ஸ்ரீ மடத்தை விட்டு வெளிவந்த அன்றிலிருந்து
பணக்காணிக்கையைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை
என்று இவர் நன்கு அறிந்தவர்தான்.ஆயினும் பெரியவாளின்
திருவுளக்கருத்தின்படியே செலவழிக்கப்பட வேண்டுமென்று
அந்தரங்க பக்தியுடன் ஒதுக்கப்பட்ட தொகையாதலாலே
இந்த ஆயிரத்தைச் செலுத்துகிறார்.
பெரியவர் புரிந்து கொள்ளாமல் போவாரா?
“எங்கே பெல்காம்…….?” என்கிறார்.
திருணமாக வந்து நிற்கிறார் அந்த நபர்.
நெய்யிலே இப்பொழுது முந்திரியாக்கும் வறுபடுகிறது!
பெல்காமில்……நிறைவேற்றி வரும் ஆசாரிய ஸேவைத்
திட்டங்களைப் பற்றி ஏகமாக ச்லாகிக்கிறார் பெரியவர்.
இடித்த மேகமே இன்மழை கொட்டுகிறது.
அதில் ஒரு பணிக்கே இந்த ஆயிரம் ரூபாயைப்
பயன்படுத்துமாறு அருளாணை பிறக்கிறது.
“பணத்தை எப்படிக் கொண்டுபோவே?”
“பத்ரமா எடுத்துண்டு போறேன்” என்கிறார் பெல்காம்…
பொறுப்புணர்ச்சியின் நிறைவுடனும் அபார உலகியல்
அறிவுடனும் முனிவர் சொல்கிறார்;
“அதெல்லாம் ஸரியில்லை. தொலைஞ்சு போச்சுன்னா
நீயோ அவனோ (கொடுத்தவரோ) ஜவாப் இல்லை.
நான்தான் ஜவாப். (கொடுத்த பிரமுகரைப் பார்த்து)
நீ இந்தத் தொகைக்கு அவன் பேரிலே ‘டிராஃப்ட்’
வாங்கிக் குடுத்துடு.”
அறம் என்ன, அன்பு என்ன, பொறுப்பு என்ன,
ஸமயோசிதம் என்ன என்பதற்கெல்லாம் அன்றன்றும்
இப்படி அற்புத முன்னுதாரணம் தருவதே முனிவரின்
இயல்பாயிருக்கிறது.
SOURCE::::: http://www.periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/thread/8685/#ixzz3Sq964Nh5
