கோவையைச் சேர்ந்தவர் நா.முத்து. டீக் கடைக்காரர். கவிஞர். சாகித்ய அகாதெமி சார்பில், சிறந்த 100 ஹைக்கூ கவிதை தொகுப்புகளை தேர்ந்தெடுத்ததில் இவரது கவிதைத் தொகுப்பும் ஒன்று.

நா.முத்து 8-ஆம் வகுப்பு வரைதான் படித்தார். படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தன் அப்பாவுடன் டீக்கடைப் பணியில் சேர்ந்துவிட்டார். ஏன்? படிக்கவில்லை என்று
கேட்டபோது, “”எவ்வளவு புத்தகங்களை வேண்டுமானலும் வாசிப்பேன். ஆனால், மனப்பாடம் செய்து எழுதுவது எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அதனால் தான் படிக்கவில்லை.
ஆனால், படிக்காதது இப்போது வருத்தமாக உள்ளது” என்கிறார்.
“தலைவர் எழுச்சியுரை, உற்சாகம் தந்தார் சுக்குக் காப்பிக்காரர்’
“நேரம் சரியில்லை கடிகாரக் கடை’ என்பது போன்ற நகைச்சுவை ஹைக்கூ கவிதைகளை அள்ளி வீசுகிறார்.
நகைச்சுவை ஹைக்கூக் கவிதைகளை மட்டுமே மையமாக வைத்து எழுதாமல், சமூக நோக்கிலும் பல ஹைக்கூக் கவிதைகளை எழுதியுள்ளார்.
“ஆயிரம் மரங்கள் மரணம்
ஆறுவழிச் சாலை ஜனனம்
அதில் ஆயிரம் வாகனங்கள் பயணம்
ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு வசனம்
மரம் நடுவோம், மழை பெறுவோம்’
என்கிற கவிதையை கோவை, அவிநாசி சாலையை மையமாக வைத்து எழுதியுள்ளார்.
ஹைக்கூ கவிதையில் ஆர்வம் வரக் காரணம் என்னவென்று கேட்டோம்:
“”நாம் பார்ப்பதெல்லாம் ஹைக்கூ தான். எதைப் பார்த்தாலும் எதாவது சொல்ல வேண்டும் என்கிற முனைப்பு தான் ஹைக்கூ கவிதை எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்தது. எனவே, நான் பார்ப்பதை, யோசிப்பதை தெளிவாக சொல்ல வழிவகுத்தது ஹைக்கூ கவிதை தான்.
இதுவரை இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளேன். அதில், “இருக்கு’ என்கிற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, சூழல் சார்ந்த கவிதைப் புத்தகம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. “எடை குறைவாய்’ என்கிற கவிதைத் தொகுப்பை எழுதி வருகிறேன்.
குறும்படங்கள், வீதி நாடகங்கள், கோவை வானொலியில் கவிதைகள் வாசிப்பது, புகைப்படக் கலை, இலக்கியக் கூட்டங்களில் பேசுவது என தற்போது வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
பாரதியார் கவிதைகள் மிகவும் பிடிக்கும். “உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்பது என் மனதுக்குப் பிடித்த கவிதை. பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போதே உற்சாகமும், தைரியமும் பிறக்கும். எனவே, அவரது கவிதைகளை அதிகம் வாசிப்பேன்.
“நம் பிறப்பு சாதாரணமானதாக இருக்கலாம் ஆனால், நம் இறப்பு ஒரு சரித்திரமாக மாற வேண்டும்’ என்ற வரிகளுக்கேற்ப எவ்வளவு சாதாரணமானவராக இருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். அதைக் கண்டறிந்து செயல்படுத்துவதே அறிவுடைமையாகும் என்பதற்கு சான்று டீக்கடை முத்து.
Source:::::www.dinamani.com
Natarajan