” முப்பாட்டன் முண்டாசு கவிஞன் பாரதிக்கு …”

முப்பாட்டன் முண்டாசுக்காரனுக்கு!

‘தனியொரு மனிதனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்’
என்று மிரட்டினாய்
அரசு பயந்து அமைத்தது
அம்மா உணவகம்!

‘ஓடி விளையாடு பாப்பா’ என்றாய்
ஓயாமல் விளையாடுகிறோம்
வீடியோ கேம்!

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்றாய்
ஜாதிகள் இல்லாமல் போகவே செய்கிறோம்
கவுரவக் கொலைகளால்!

‘ஆடுவோமே
பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோமென்று’என்றாய்
ஆட்டமாய் ஆடி
பாடாய் படுத்துகின்றனர்
ஆட்சி, அதிகாரத்திலிருப்பவர்கள்!

‘மனதில் உறுதி வேண்டும்’ என்றாய்
நான்கு குவார்ட்டர் அடித்தாலும்
தள்ளாடாமல் நிற்பதற்கு தான்
டாஸ்மாக்கில் பயிற்சி எடுக்கிறோம்!

காணி நிலம் வேண்டும்’ என்று
ஆசை படச் சொன்னாய்…
புறம்போக்கு நிலங்களையும்
வளைத்து விட்டோம்!

‘சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்’
என்றதை செய்து பார்த்து
சேது சமுத்திரத் திட்டத்தில்
பைசா பார்த்து விட்டோம்!

‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று
பாடத் தான் முடிகிறது
பாலியல் வன்முறைகளைப் பார்த்து!

‘சொல்லடி சிவசக்தி…
எனை சுடர் விடும்
அறிவுடன்
ஏன் படைத்தாய்’ என்று
உன்னோடு சேர்ந்து
பாடி அழத் தான் முடிகிறது
வேறு வழியற்று!

அ. யாழினி பர்வதம்,
சென்னை.

Source…www.dinamalar.com

Natarajan

Leave a comment