படித்ததில் பிடித்தது ….” மறந்து போன மனித நேயம் உன் ஜனன தேதியில் மட்டும் தலை காட்டும்” ….

அமைதி ஆயுதம் போதும்!

உலகம் போற்றும்
உத்தமனே
உன்னால்தானே
உரிமை பெற்றோம்!

நாங்கள்
உயரப் பறக்க
சிறகுகள் தந்து
உன் உயிர் சிறகை
உதிர்த்துக் கொண்டாயே!

அன்னையின்
அடிமைச்சங்கிலி உடைக்க
அர்ஜுனனைப் போல
அஸ்திரம் ஏந்தவில்லை!

சச்சரவுகள் தீர்க்க
வாசுதேவனைப் போல
சாவகாசமாக வந்து
சர்க்கரை பேச்சு பேசி
சமரச முயற்சியும்
மேற்கொள்ளவில்லை!

ஆயுதம் எடுக்கவில்லை
அறைகூவல் விடுக்கவில்லை
அடிமைச்சங்கிலியை
எப்படி அடக்கம் செய்தாய்?

அமைதிப்பிரியனே…
உன் மவுன யுத்தத்தின்
உச்சி தவத்தால் தான்
எத்தனை மகத்துவம்!

மறந்து போன மனித நேயம்
உன் ஜனன தேதியில் மட்டும்
மறுமுளை விட்டு
மறுபடியும்
மறைந்து கொள்கிறது!

ஆனாலும்
மகாத்மா என்ற சகாப்தத்தின்
தலைமகன் நாமம் மட்டும்
மறந்து போவதே இல்லை
கருவறையிலிருந்து கல்லறை
செல்லும் வரை!

நீ அழைத்துச் செல்ல மறந்த
அகிம்சையென்னும்
அமைதி ஆயுதம் ஒன்று போதும்
இந்த உலகம் உயர்ந்து நிற்கும்
உன் பேர் என்றும் நிலைத்து நிற்கும்!

க.அழகர்சாமி, கொச்சி.

Source….www.dinamalar.com

Natarajan

Leave a comment