உணவுப்பொருட்களின் விலையுயர்வால், ஹோட்டல்களில் உணவு வகைகளின் விலைகள் விண்ணைத்தொடும் அளவிற்கு அதிகரித்துள்ள நிலையில், உப்புமா 20 காசு ; பில்டர் காபி 15 காசு என்ற விலை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை, சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தாய்வீடாக இயங்கி வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க மும்பை மாநகரில், தென்னிந்தியாவை சேர்ந்த ஹோட்டல் நிறுவனம், 1940ம் ஆண்டு மும்பையில் “கபே மெட்ராஸ்” என்ற பெயரில் ஹோட்டலை துவக்கி, தற்போதும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
தென்னிந்திய உணவுவகைகளை சிறப்பாக விநியோகித்து வந்த கபே மெட்ராஸ் ஹோட்டல் துவங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி, நேற்று (24ம் தேதி) காலை சிலமணி நேரங்களுக்கு, ஹோட்டல் துவங்கப்பட்டபோது இருந்த விலையிலேயே உணவு வகைகளை விற்க திட்டமிட்டனர். அதன்படி..
ரச வடை – 50 காசு
உப்புமா – 20 காசு
பில்டர் காபி – 15 காசு என்ற அளவில் விற்கப்பட்டது.
நாட்டின் வடபகுதி மக்களுக்கு ஏற்கனவே தென்னிந்திய உணவு வகைகளின் மீது அலாதியான பிரியம் இருக்கும் நிலையில், 1940ம் ஆண்டு விலையிலேயே உணவுகள் விற்கப்பட்டது. கபே மெட்ராஸ் வாடிக்கையாளர்களை மேலும் உற்சாகத்திற்குள்ளாக்கியது.
தற்போது அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் தவழ்ந்துவரும் நிலையில், நேற்று கபே மெட்ராஸ் ஹோட்டலில், உணவு சாப்பிட்டவர்கள், தாங்கள் சாப்பிட்ட உணவு வகைகள் மற்றும் பில்லை, தங்களது ஸ்மார்ட்போனில் போட்டோ எடுத்து உடனுக்குடன் சமூகவலை தளங்களிலும் பதிவேற்றினர்.

Source….www.dinamalar.com
Natarajan