படித்து வியந்த செய்தி …” மணி …தங்க மணி ” !!!

தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகில் உள்ள கீழ்தும்பலஹள்ளி கிராமத்து சாலையில் சென்று கொண்டிருந்தோர், அங்கே நடப்பதை பார்த்து, சில நிமிடம் நின்று, ரசித்து, வியந்தபடி சென்றனர்.
அப்படி என்ன சாலையில் நடந்தது… மலர்களால் வேயப்பட்ட சிறிய வண்டி ஒன்றை இழுத்தபடி சென்றது ஒரு நாய். வண்டியின் மேல் மாவிளக்கு வைக்கப்பட்டிருந்தது.
‘மெள்ள வா ராசா…’ என்று அதை, அன்புடன் வழி நடத்தி, அழைத்துச் சென்றார் ஒருவர். அவரிடம் இது குறித்து விசாரித்த போது, நெகிழ்ச்சியுடன், மகிழ்ச்சியாக அவர் பகிர்ந்து கொண்ட அன்பின் கதையிது:
என் பெயர் தங்கவேலுங்க; அந்தக் காலத்து 10ம் வகுப்பு. மனைவி பெயர் கோவிந்தம்மாள். தமிழ் மொழி மீது இருக்கும் பற்று, பாசத்தால், என் ரெண்டு பொம்பளப் பிள்ளைகளுக்கும், இலக்கியா, குறளரசி என்று பேர் வைச்சுருக்கேன்.
வீட்டில் நாலு மாடுக இருக்கு; பால் கறந்து சொசைட்டிக்கு ஊற்றி, அதன் மூலம் வரக்கூடிய வருமானத்தில் வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு.
ஒருமுறை, சந்தைக்கு போயிருந்த போது, இவன் சின்னக்குட்டியா இங்கேயும், அங்கேயுமா ஓடிட்டு இருந்தான். பார்த்ததுமே பிடிச்சுப் போச்சு. வீட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டேன். ஏற்கனவே எனக்கு ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க இருக்கிறதாலே, இவனுக்கு, மணின்னு பேர் வச்சு, பையனா நினைச்சு வளர்த்துட்டு வர்றேன். எங்க குடும்பத்துல ரொம்ப முக்கியமான ஆளு இவன்.
எனக்கு மணியும், மணிக்கு நானுமா இருந்தா போதும்; வேறே எதுவும் வேணாம். எங்களுக்குள்ள அப்படி ஒரு பாசம் ஏற்பட்டு போச்சு. அவன் இல்லாம எனக்கு பொழுது விடியவே செய்யாது.
வீட்டுலயிருந்து பால் கேனை தூக்கிட்டு, 1 கி.மீ., தூரத்திலுள்ள சொசைட்டிக்கு நடந்து போவேன். அப்ப, மணியும் கூடவே வருவான். நான் பால் கேன் தூக்கிட்டு சிரமப்பட்டு நடக்கிறேன்னு நினைச்சானோ என்னவோ… என்னை தூக்க விடாம, அவன் வாயில் கவ்வி நடக்க ஆரம்பிச்சான். என்ன சொன்னாலும், கேனை தர மாட்டான். ஆனா, அவனாலும் கேனை தூக்கிட்டு நடக்க முடியாம, கேன் தரையில் தட்டுச்சு. அப்புறம் தான், 1,500 ரூபாய் செலவு செய்து, ஒரு சின்ன வண்டி தயார் செய்து, அதுல பால் கேனை வச்சதும், உற்சாகமாக இழுத்துட்டு நடக்க ஆரம்பிச்சான்.
ஒரு கட்டத்துல, கேனை வண்டியில வச்சுட்டா போதும், கரெக்டா கொண்டு போய், சொசைட்டியில சேர்த்துருவான். நான் போக வேண்டிய தேவையே இல்ல. அவங்க பாலை எடுத்துட்டு காலி கேனை வச்சதும், பத்திரமா திரும்ப கொண்டு வந்துடுவான்.
எம் புள்ளைகள யாரும் நெருங்க முடியாது. ஒரு உறுமல்லயே ஓட வச்சுருவான். ஆறு மாசத்திற்கு முன் கொஞ்சமும் எதிர்பாராம அந்த விபத்து நடந்து போச்சு.

வழக்கம் போல வண்டியில போய் பாலைக் கொடுத்துட்டு, திரும்ப வரும் போது, தாறுமாறா வந்த டெம்போ வாகனம் மணி மேலே மோதிருச்சு. ரத்த வெள்ளத்துல கிடந்தவனை பார்த்துட்டு, எனக்கு தகவல் கொடுத்தாங்க. அழுது, அடுச்சு புடிச்சு ஓடிப் போய் பார்த்தேன். வலியில எழுந்திருக்க முடியாம முனகிக்கிட்டே படுத்திருந்தான்.
அவனை அள்ளித் தூக்கிட்டு கால்நடை ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். அவனுக்கு முதலுதவி செஞ்ச டாக்டர், ‘இடுப்பு எலும்பு முறிஞ்சு போச்சு. பிழைக்கிறது கஷ்டம்; அப்படியே பிழைச்சாலும் நடக்கிறது சிரமம். போற வழியில குப்பையில வீசிட்டுப் போ’ன்னு சொல்லிட்டார்.
என் மணியைப் பார்த்து, டாக்டரு இப்படி சொல்லிட்டாரேன்னு எனக்கு மனசே ஆறலை. ஆனாலும் அவனுக்கு எதுவும் நடக்காதுன்னு என் மனசு சொல்லிட்டே இருந்துச்சு. வர்ற வழியில தண்ணி தொட்டியில இறக்கி விட்டேன். கொஞ்சம் சிரமப்பட்டாலும், அவனால காலை உதைச்சு, நீந்த முடிஞ்சது.
இதைப் பார்த்ததும், இனி மணியை காப்பாத்திடலாம்ன்னு எனக்குள்ளே நம்பிக்கை வந்து, வேற டாக்டரை போய் பார்த்தேன். அவர், ‘நாயை காப்பாத்திடலாம்; ஆனா, கொஞ்சம் செலவாகும்’ன்னு சொன்னார்.
‘பரவாயில்ல… என் மணிக்காக நான் எதுவும் செய்வேன்…’ என்றதும், ‘ஒரு நாளைக்கு மூணு முறை வெந்நீரால் மெதுவாக நீவி, குளிப்பாட்டணும். தினமும் ரெண்டு ஊசி போடணும்; ஊசி விலை கொஞ்சம் கூடுதல். நிக்க, நடக்க பொறுமையா பயிற்சி கொடுக்கணும். நேரத்துக்கு மருந்து மாத்திரை கொடுக்கணும். பச்சைக்குழந்தையை பாத்துக்கிறது மாதிரி பாத்துக்கணும்…’ என்று கூறி மருந்து, மாத்திரை எழுதி கொடுத்தார்.
டாக்டர் சொன்னபடியெல்லாம் செய்தேன். அதோட, எங்க ஊர் மாரியம்மனிடம், ‘என் மணி பழையபடி நடந்தா, அவனே நடந்து வந்து மாவிளக்கு போடுவான்’னு வேண்டிகிட்டேன்.
மூணு மாசம் மணியை கண்ணும் கருத்துமா பாத்துக்கிட்டதன் பலன், இப்போ, மணி, பழையபடி கம்பீரமாக வலம் வர்றான்.
மாரியம்மன் கோவில் திருவிழா அன்று, பக்தர்கள் எல்லாம் அம்மனுக்கு மாவிளக்கு போட ஊர்வலமாக சென்ற போது, அந்த ஊர்வலத்தில மணியும் ஒரு பக்தனாக தன் வண்டியில் மாவிளக்கு எடுத்துப் போய், அம்மன் காலடியில் வைத்தான். இதைப் பார்த்து நிறைய பேர் பாராட்டினர்.
‘என் புள்ளைய காப்பத்தறது என் கடமைங்க; இதுக்கு எதுக்குங்க எனக்கு பாராட்டு…’ என்றார் தங்கவேல் அடக்கமாக!
வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நாய் என்று சில இடங்களில் கூறியுள்ளேன். ஆனால், தங்கவேல் பேசும் போது, ‘எம் பையன் மணி…’ என்று குறிப்பிட்டாரே தவிர, நாய் என்ற வார்த்தையே அவரிடம் இருந்து வரவில்லை.
அத்துடன், அவரிடம் நாம் போனில் பேசினால் கூட, ‘ஒரு வார்த்தை மணிகிட்டேயும் பேசிருங்க…’ என்று போனை அதன் வாயருகே கொண்டு செல்வார். அதுவும் பெரிய மனுஷன் மாதிரி, அதன் மொழியில் நம்மை நலம் விசாரிக்கும்.
இருவரிடமும் பேச ஆசையா? 98423 48790 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்!

Source…..Hariharan in http://www.dinamalar.com

Natarajan

Leave a comment