புதுமை பொங்கல்
…………….
தை பிறந்தால் நல் வழி பிறக்கும் …வாழ்வு சிறக்கும் !
பிறக்கும் தை மாதமதை நாம் கை தட்டி வரவேற்போம் !
இரு கரம் கூப்பி தை தாய்க்கு வந்தனமும் செய்வோம்
நம் வாழ்வு சிறக்க .. நாடு செழிக்க வேண்டி !
புதுப் பானையில் மஞ்சள் கொத்துடன் ,செங்கரும்பு சூழ
நம் வீட்டில் பொங்கல் பொங்கும் நேரம்
நமக்கு பொன்னான நேரம் !…நாம் தொடுவதெல்லாம்
பொன்னாக மாற இதுவே அச்சாரம் !
பொங்கலுடன் சேர்ந்து மங்களமும் பொங்கட்டும் …பொங்கும்
மங்களம் தங்கட்டும் நம் எல்லோர் இல்லத்திலும் உள்ளத்திலும் !
பொங்கல் வாழ்த்து பிறருக்கு நாம் சொல்லும் அதே நேரம்
மறக்காமல் சொல்லவேண்டும் பல்லாயிரம் நன்றி …
புத்தரிசி கொடுத்த பெருமகன் , வேளாண் குடிமகன் அவனுக்கு !
சேற்றில் கால் வைக்க அவன் மறுத்தால் , பொங்கல் சோற்றில்
கை வைக்க முடியுமா நம்மால் ? மறுக்க முடியாது இந்த உண்மையை !
உன்ன உணவு கொடுக்க உழைக்கும் உழவனவன் இறைவனே நமக்கு!
வரும் தை பொங்கல் நன்னாளில் நம் வீட்டு பொங்கலை உழவர்
குடும்பம் ஒன்றுடன் சேர்ந்து அமர்ந்து பகிர்ந்து நாம் உண்ணும்
தருணம் நம் வீட்டு பொங்கலுக்கு பெருமை சேர்க்கும் !
தித்திக்கும் பொங்கல் நன்னாளில் புதுமை இதை
நாம் செய்தால் நம் வீட்டு பொங்கலின் தித்திப்பு மேலும் கூடும் !
Credit……. My kavithai published in http://www.dinamani.com on 18 Jan 2016
natarajan