அலையின் தாகங்கள்
……………….
உன் அப்பாவின் கை பிடித்து கரையில் நின்ற உன் பிஞ்சு பாதங்களை
முத்தமிட்டு சென்ற அலை நானேதான் அன்று! …இன்றும் ..இன்னும்
ஓயவில்லை நான் ! கரை தொட்டு பிஞ்சு பாதம்
முத்தமிடும் தாகம் தீரவில்லை இன்னும் எனக்கு !
கடற்கரையில் மணல் வீடு கட்டி குதூகலிக்கும் குழந்தையின்
கும்மாள சிரிப்பு கேட்கும் தாகமும் தணியவில்லையே எனக்கு !
உன் மனதை தொட்டு நீ சொல் இப்போது… உன் பிள்ளையின்
பிஞ்சு பாதத்தை என்னை தொட விட்டாயா நீ ? கேட்டால்
சொல்வாய் “எனக்கு எங்கே நேரம் கடற்கரை செல்ல” என்று !
உனக்கு இல்லை நேரம் என்னைப் பார்க்க! …உன் பிள்ளைக்கோ
நான் யார் என்றே தெரியாது!
ஆனால் நான் மறக்காமல் தினமும் கரை தொட்டு செல்கிறேன் உன்
பிள்ளையின் பிஞ்சு பாதம் தேடி …ஓடி வருகிறேன் நாளும் உன்
பிள்ளையின் சிரிப்பை நாடி !
அஞ்சுகிறேன் நான் இப்போது … கரையில் தினம் தினம் முளைக்கும்
புதுப்புது அடுக்கு மாடி கட்டிங்கள் பார்த்து ! இப்படியே விட்டால்
கடல் கரையே ஒருநாள் காணாமல் போய் விடுமோ ? …
கடல்கரை என் கண் முன்னால் மறையும் முன்னே கூட்டி வா உன்
பிள்ளையை கடற்கரைக்கு ஒரு நாள்.. உன் கை பேசிக்கும் , மடிக்
கணினிக்கும் சற்று நேரம் ஓய்வு கொடுத்து !
வருவாயா நீ உன் பிள்ளையுடன் ஒருநாள் என்னைப் பார்க்க ?
தீர்ப்பாயா என் தீராத தாகத்தை சீக்கிரமே ?
My kavithai in http://www.dinamani.com published on 20 june 2016
Natarajan
