தண்ணீருக்கு இரத்தம் ….
………………..
என் நதி ஓட்டம் ! … இந்த மண்ணுக்கே உயிர் ஓட்டம் ! …என்
நீர் இந்த மண்ணுக்கும் மண்ணில் உள்ள எல்லா உயிருக்கும்
சொந்தம் ! இந்த பால பாடம் தெரியாதா உனக்கு ?
நீர் இது “எனக்கு” மட்டும் சொந்தம் என்று உரிமைக்குரல்
எழுப்பும் உனக்கு ஒரு நதி மூலம் என்னவென்று தெரியுமா ?
இந்த மண்ணுக்கும் மண்ணில் உள்ள நீருக்கும் சொந்தம்
கொண்டாடும் நீ … விண்ணுக்கும், விண்ணில் உள்ள
நிலவுக்கும், பகலவனுக்கும் ,மழை மேகத்துக்கும் தனி உரிமை
கோர முடியுமா சொல்லு ?
விதி விலக்கு எதுவும் இல்லை நதி எனக்கு இந்த மண்ணில்
என் வழி நான் செல்ல ! நான் ஒரு விலை கேட்டேனா உன்னை
நான் கொடுக்கும் நீருக்கு ? பதில் சொல்லு நீ! …வைத்து
விட்டாயே நீ என் நீருக்கு ஒரு விலை …தண்ணீருக்கு
விலை செந்நீரா ?… எல்லையே இல்லையா உன் மமதைக்கு ?
அன்று உன் முன்னோர் சிந்திய ரத்தத்தால் நீ சுவாசிப்பது இன்று சுதந்திர
காற்றை !..மறந்து விடாதே அதை ! இன்று தண்ணீருக்கு நீ சிந்த வைக்கும் இரத்தம்
உன் சந்ததியர் , சகோதரர் , நல்லிணக்க நல் வாழ்வைக் குலைத்து தொலைத்திட
நீ போட்டிருக்கும் ஒரு சிவப்புக் கோடு !.. விவரம் அறியா பிஞ்சு நெஞ்சில் நீ விதைத்து
விட்டிருக்கும் ஒரு நஞ்சு வித்து ! …நீ போட்ட சிவப்புக் கோட்டை அழித்து விடு நீயே !
பிஞ்சு நெஞ்சில் நீ விதைத்திருக்கும் வித்தையும் களை எடுத்து நசுக்கி விடு நீயே..அந்த
வித்து ஒரு நச்சு மரமாக வளரும் முன்னே !
இதை நீ கட்டாயம் செய்ய வேண்டும் மனிதா … நதி என் கண்ணீர்
செந்நீராக உருமாறும் முன்னே !
Natarajan
20th sep 2016