படித்து ரசித்தது …” குட்டி பறவைக்கு வந்த தைரியம்!”

 

கடற்கரையோர மணல் பரப்பில் தவ்வித் தவ்வி ஓடிக்கொண்டிருக்கின்றன சில அலை உள்ளான் பறவைகள் (Sanderlings). மணலுக்குள் தன் அலகைச் செருகி இரை கிடைக்குமா என்று கிளறிப் பார்க்கின்றன. அலை பக்கத்தில் வந்தால் கரைக்கு ஓடுகின்றன; உள்வாங்கினால் போன வேகத்தில் திரும்பவும் வந்து மணலைக் கிளறுகின்றன. பெரிய அலை வந்தால் விருட்டெனப் பறந்து கரைக்கே வந்துவிடுகின்றன. இதெல்லாம் செய்யத் தெரியாத ஒரு குஞ்சு ‘அலை உள்ளான்’ கடலைக் கண்டாலே நடுநடுங்கித் தன் அம்மாவிடம் பதுங்கிக்கொள்கிறது.

தன்னுடைய அம்மா, இரையை எடுத்துவந்து ஊட்டிவிடும் என நினைத்து வாயைத் திறந்து பசியோடு காத்திருக்கிறது அந்தக் குஞ்சு. ஆனால், அம்மா ஊட்டிவிடுவதாக இல்லை. இரையைக் குஞ்சே தேட வேண்டும் என்று அம்மா நினைக்கிறது. இப்படி அம்மா-குஞ்சு பறவையிடயே நடக்கும் செல்ல சேட்டைகள்தான் ‘பைப்பர்’ என்ற அனிமேஷன் குறும்படம்.

குழந்தைகள் பயத்தை விட்டு ஒவ்வொரு செயலையும் கற்றுக்கொள்வது எப்படி என்பதைச் சுவாரசியமாகக் குஞ்சுப் பறவை மூலமாக இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்கள். ஒரு காட்சியில், குட்டி நண்டைப் பின்தொடர்ந்து செல்கிறது குஞ்சு. அப்படிப் போகும்போது அலை பாய்ந்து வருகிறது. அலையைப் பார்த்ததும், மணலுக்குள் தன்னைப் புதைத்துக்கொள்கிறது குட்டி நண்டு. இதைப் பார்த்துத் தன் உடலையும் மணலில் புதைத்துக்கொள்கிறது குஞ்சுப் பறவை. ஆனால், பயத்தில் தன்னுடைய கண்களை இறுகப் பொத்திக்கொள்கிறது.

அப்போது அந்தப் பறவையின் அலகைத் தன்னுடைய கொடுக்கால் தட்டுகிறது நண்டு. கண்களைத் திறக்கும் பறவைக்கு நீருக்குள் இருக்கும் அழகு அற்புதக் காட்சியாகத் தெரிகிறது. அந்த நொடிப் பொழுதில் அதனிடமிருந்து பயம் விட்டு விலகிப்போகிறது. உடனே ஓடியாடி குதிக்கிறது. பெரிய அலை வந்தால்கூட தைரியமாகப் போய் இரையை எடுத்து வருகிறது குஞ்சு பறவை.

ஒரு விஷயம் தெரியாதவரைதான் பயம். அது என்னவென்று தெரிந்துகொண்டுவிட்டால் அச்சம் எல்லாம் போயே போச்சு என்பதை அழகாகப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

சுமார் 6 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தை உங்களுக்குப் பார்க்க ஆசையா?

https://youtu.be/bOpExod4r2Y

வழக்கமான அனிமேஷன் படங்களைப் போல அல்லாமல் பறவைகள் பறவைகளாகவே நடந்துகொள்வதுதான் ‘பைப்பர்’ குறும்படத்தின் தனிச் சிறப்பு! சாண்டர்லிங்க்ஸ் என்றழைக்கப்படும் ‘அலை உள்ளான்’களின் இயல்பை ஆராய இப்படத்தின் குழுவினர் வாரக் கணக்கில் கலிபோர்னியாவின் கடற்கரைகளில் அப்பறவைகளைப் பின்தொடர்ந்தார்கள். அவற்றின் இயல்பை அருகிலேயே இருந்து கவனித்து அதற்குப் பிறகுதான் அனிமேஷன் செய்திருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் ஆலம் பரிலரோ மூன்றாண்டுகள் இப்படத்துக்காக செலவழித்திருக்கிறார்.

ம.சுசித்ரா in http://www.tamil.thehindu.com

Natarajan

Leave a comment