திருமுருக கிருபானந்த வாரியாரின் “குமுதம் வினா விடை” தொகுப்பில் இருந்து ரசித்தவை)
தெய்வங்கள் மக்களை காப்பாற்றும் என்று கூறுகிறார்கள். ஆனால் தெய்வங்களின் சிலைகளைத் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். அவ்வாறு தங்களையே காத்துக் கொள்ள முடியாத தெய்வங்கள் மக்களை எப்படி காப்பாற்றும் ?
சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு. மூர்த்திமான் வேறு. மூர்த்தி என்பது சிலை. மூர்த்திமான் அந்தச் சிலையில் நாம் ஆவாகனம் செய்கின்ற தெய்வம்..மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு. பல்பில் ஷாக் அடிப்பதில்லை. ஆகவே பல்புகளை திருடும் போது ஏன் ஷாக் அடிப்பதில்லை என்று கேட்பதை போலிருக்கிறது இந்த வினா. சிலைகளைத் திருடுகின்றபோது, ஆண்டவன் ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை என்ற வினா எழக்கூடும்.
கடவுள் கருணைக்கடல். தாய், திருடுகின்ற மகனிடத்தும் அன்பு பாராட்டுவது போல், கடவுள் கள்ளனுக்கும் கருணை காட்டுவார். “நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு” என்கின்றார் இராமலிங்க வள்ளலார்.

‘கொன்றார் பாவம் தின்றாரோடு’ என்று கசாப்பு கடைக்காரர் சொல்லுகின்றார். ‘தின்றார் பாவம் கொன்றாரோடு’ என்று புலால் உண்பவர் கூறுகின்றார். இதில் எது சரி? இதன் மூலம் இரு சாரார்களுமே பாவத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்களா?
‘கொன்றால் பாவம் தின்றால் தீரும்’ என்ற பழமொழிக்கு மற்றவர்கள் சொல்கின்ற பொருள் பிழையானது. கொல்லுகின்றவன், விலை கொடுத்து வாங்கித் தின்பவனுக்காகவே செய்கின்றான். ஆகவே அப்பாவம் முழுதும் அவனையே சேராது.
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல்
– திருவள்ளுவர் (அதிகாரம்: புலால் மறுத்தல்).
ஆகவே, உயிர்களைக் கொன்ற பாவம், தின்பதனால் போகும் என்பது ஒரு சிறிதும் பொருந்தாது. ஒரு சிலர், ‘நான் கொல்வதில்லை, கடையில் இருந்து வாங்கித் தின்கின்றேன்” என்பார்கள்’ இதுவும் பிழையான கருத்தாகும். வாங்குவார் பொருட்டே விற்பவன் கொல்கின்றான். திருவள்ளுவர் ‘கொல்லாமை’ என்று ஒரு அதிகாரமும் ‘புலால் மறுத்தல்’ என்று ஒரு அதிகாரமும் தனித்தனியே கூறியிருக்கின்றார்.
கொல்லாமல் கொன்றதை தின்னாமல் சூத்திரம் கோள்களவு
கல்லாமல் கைதவரோடு இனங்காமல் கனவிலும் பொய்
சொல்லாமல் …………………தோகையர் மாயையிலே
செல்லாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே
— பட்டினத்தார்.
இவ்வாறு எத்தனை பிரகாரங்களாகப் பார்த்தாலும் ஊன் உண்பது பெரிய பாவமாகும்.
கங்கையில் படிந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்
சங்கையில்லாத ஞான சாத்திரம் உணர்ந்திட்டாலும்
மங்கு போல் கோடி தானம் வள்ளலாய் வழங்கிட்டாலும்
பொங்குறு புலால் புசிப்போன் போய் நரகு அடைவன் அன்றே!!!
–இராமலிங்க வள்ளலாளர்
இனி, கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பதற்கு சரியான உரை கீழ்வருமாறு.
புலால் உண்டவர்களை இறந்த பின் இருள் உலகத்தில் (நரகத்தில்) நிறுத்தி அவர்கள் உடல் தசையை அறுத்து அறுத்து அவர்கள் வாயில் வைத்து ஊட்டுவார்கள். அதை உண்டால் தான் அவர்கள் கொன்ற பாவம் போகும். இந்தக் கருத்தை அருணகிரிநாதர், ‘புவனத்தொரு’ என்று தொடங்குகின்ற திருசிராப்பள்ளி திருப்புகழில், ‘இறைச்சி அறுத்து அயில்வித்து’ என்று குறிப்பிட்டு இருக்கின்றார். எனவே, கொன்ற பாவமும் தின்ற பாவமும் தன் உடம்பைத் தானே தின்றால் தான் போகும்.
(திருமுருக கிருபானந்த வாரியாரின் “அது போல” தொகுப்பில் இருந்து)
மாடி மேல் ஏறுவதற்கு ஒரு கருவி ஏணி. மாடி மீது ஏறுவதற்கு என அமைந்த ஏணி மீதே பல மணி நேரம் நின்று கொண்டு இருக்க ஒருவன் விரும்புவானா ?. விரும்ப மாட்டான்.
—அது போல—
பிறவாமயைப் பெற நமக்கு அளிக்கப்பட்ட ஏணி போன்ற இவ்வுடம்பிலேயே (பிறந்தும் இறந்தும்) நின்று கொண்டிருப்பது அறிவுடமை ஆகாது. மதி நலமுடையோர் விரைவாக ஏணி மீது ஏறி மாடிக்கு செல்வது போல், இந்த உடம்பைக் கொண்டு பிறவாமயைப் பெற முயல்வார்கள்
கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.
வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”
அவர்கள் இருவரும் “இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.
வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.
ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை… உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?” என்றார்.