படித்ததில் பிடித்தது …” திருவல்லிக்கேணி அப்பவும் இப்பவும் …” !!!

 

திருவல்லிக்கேணி அப்பவும் இப்பவும்……

பன்னிரண்டு மணி வெயில். நடக்கும்போது தார் உருகிய ரோடு காலைக் கொப்புளிக்க வைக்கிறதே. கண்களில் நீர் மல்குகிறது. ஏன்? வெயில் அனலாய் சுட்டெரிக்கும்போது கண் கூசுகிறதே அதனால் தான். அந்த காலத்தில் குடை ரொம்ப பேர் உபயோகிக்க மாட்டார்கள். மேல்துண்டை தலையில் சுற்றிக்கொண்டு வெயிலில் நடப்போம். தலைப்பாகை அல்லது தலப்பா என்று சொல்வோமே அது. இப்போது வெயிலில் தலையில் தலப்பா இல்லே. கடைகள் தான் ”தலப்பா கட்டி” க் கொண்டிருக்கிறது. மரமே கிடையாது. நிழலே கிடையாது. நடக்கவே இடம் இல்லையே. டீசல் பெட்ரோல் மணம் மூச்சு விடமுடியாமல் திக்கு முக்காடச் செய்ய, அரை அங்குலத்தில் ஒரு லாரி, பேருந்து மேலே பட்டு நசுக்காமல் தப்பி, எதிரில் வருவோரை இடித்து, நகர்வது ரொம்ப வழக்கமாகிவிட்டதே.

வெயிலுக்கு ஒரு குளிர்ந்த சோடா குடிக்க ஒரு கடையில் நின்ற போது ஒரு புத்தகம் தலைக்கு மேல் தொங்கி விற்பனைக்கு காத்திருந்தது. சோடாவின் விலைக்காக நூறு ரூபாய்த்தாளை நீட்டினபோது கடைக்காரர் அளித்த விரோத பார்வை மேலே தாக்கியதால், தொங்கிய புத்தகம், சில்லறை மாற்ற, கை மாறியது. அந்த புத்தகம் ஒரு சில ஆலய விவரங்களை உள்ளே கொண்டிருந்தது. அவற்றில் கண் செல்லும்போது என்ன ஆச்சர்யம், சில்லறை மாற்ற வாங்கிய புத்தகத்தின் பக்கங்கள் என் மனத்தையே மாற்ற, ”பக்கம்” என்னை பக்குவப்படுத்தியதே!!.

நான் இப்போது நிற்கும் திருவல்லிக்கேணி இப்படியா இருந்தது ஒருகாலத்தில் என்று அறிந்தேன். புத்தகம் அப்படி என்ன சொல்லியது?

”வயோதிக வைஷ்ணவர் ஒருவர் திருவல்லிக்கேணி எல்லாம் ஒரு தரம் சுற்றி தான் என்ன பார்த்தேன் என்று ஒரு டயரி எழுதிவைத்தது அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தில் கண்ணில் பட்டது.

யாரோ ஒருவர் அவரைக் கேட்டிருப்பார் போலும்

”சுவாமி, திருவல்லிக்கேணிக்கு புதிதா?”

”ஆமாம், பல தேசங்களை சென்று பார்த்து வருகிறேன். இந்த புண்ய திவ்ய தேசம் மனதிற்கு ரொம்ப பிடித்திருக்கிறது””

” எப்படி அய்யா இருக்கிறது எங்கள் திருவல்லிக்கேணி, இங்கு என்ன பார்த்தீர்? உமது அபிப்ராயத்தை சொல்லும்”:

”1. அந்த பெரிய கம்சன் வில்லை ஓடித்தவனை, அவன் கொல்ல அனுப்பிய பெரிய மத யானையை கொன்றவனை,, மல்லர்களை அழித்தவனை, அர்ஜுனனுக்கு தேர் ஒட்டிய மகாராஜா பார்த்தனுக்கு சாரதியாக காட்சி தந்ததையும், சிற்றன்னை சொன்ன வாக்கை தட்டாது முடி துறந்த தந்தை சொல் தவறாத ராமனையும் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

2. மாட மாளிகை கூட கோபுரங்கள் உள்ள, ஒப்புமை இல்லாத அழகிய மாதர்கள் வாழும் மயிலாப்பூரில் இருக்கும் திருவல்லிக்கேணியில் என் நந்தகோபன் குமரனைக்கண்டேன்

3. மாய உருவெடுத்த அரக்கி பூதனை ஒரு தாயாக உருவெடுத்து பாலூட்ட வந்தபோது பாலோடு அவள் உயிர் குடித்த பாலக்ரிஷ்ணனை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

4.இந்திர விழாவில் தனக்கு மரியாதை செய்யாத ஆயர்குடி மக்கள் மேல் கோபம் கொண்டு இந்திரன் பெரும் வெள்ளம் மழை இடி மின்னல் அனுப்பி அவர்களை எல்லாம் தாக்கச்செய்தபோது மலையைக் குடையாய் பிடித்து காத்த கண்ணனை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

5. பாண்டவர்க்கு தூது சென்ற துவாரகை மன்னன், லக்ஷ்மி மணாளன் நாராயணனான கிருஷ்ணன், என் தந்தை, அம்மான் அவனைத் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

6. கண்ணிழந்த திருதராஷ்ட்ரன் மகன் துச்சாதனன் அபலை திரௌபதியை துகிலுரித்து, அவள் ஆபத் பாந்தவா என்று தீனமாக வேண்ட அவளைக் காத்தவனை, அந்த 100 பேரை இழந்து அவர்கள் மனைவியர்கள் வாட, அவர்கள் பாண்டவர்க்கு இழைத்த தீமைக்கு யுத்தத்தில அர்ச்சுனன் கணக்கு தீர்க்க அந்த அர்ஜுனனின் தேர்ப்பாகனாய் வந்த பார்த்த சாரதியை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

7.பரதன் சத்ருக்னன் லக்ஷ்மணன் என்று தம்பிகளோடு, ராவணனை வதம் செய்த பிறகு, சீதையோடு பட்டாபிஷேகம் செய்த ராமனை, சூர்ய வம்ச ராஜாராமனை, சூரியனின் கதிர்கள் கூட நுழையமுடியாதபடி மரங்கள், இலைகள் கவிந்து பரவி குளிர்ச்சியாக இருக்கும் தோப்பும் துரவுமாக பச்சை பசேலென்று காட்சியளிக்கும் திருவல்லிக்கேணியை கண்டேன்.

8. எங்கேடா பிரஹலாதா உன் நாராயணன் என்று வெகுண்டு வாளுடன் தூணைச் சிதைத்த இரணியன் முன் நரசிங்கமாக தோன்றிய அழகிய தெள்ளிய சிங்கனைத் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

9. நாராயணனுக்கு நதியிலிருந்து அழகிய தாமரை மலரைப்பறித்து சூட்ட ஆற்றில் இறங்கிய யானையின் காலை ஒரு முதலை பிடித்து அதைக்கொல்ல முயற்சி செய்ய, ஆதிமூலமே என்று நாராயணனை வேண்டி அந்த யானை கதற, உடனே கருடாரூடனாக வந்து சுதர்சனச்சக்ரம் ஏவி அந்த முதலையை கொன்று காட்சி தரும், தேன் சொட்டும் மலர்கள் நிரம்பி வழியும், சோலை மிகுந்த, மாட கூட கோபுரங்கள் உயர்ந்த திருவல்லிக்கேணியைக் கண்டேன்.

10 தெளிந்த நீரோடை, தாமரைக் குளங்கள், உயர்ந்த மதில் சுவர்கள் கொண்ட மண்டபங்கள், மாளிகைகள், தொண்டை மண்டல ராஜா அழகுற நிர்மாணித்த மயிலாப்பூர் சேர்ந்த திருவல்லிக்கேணியை கண்ணாறக்கண்டேன் ”

அந்த வைணவர் எழதிய ” டூர் டைரி” பாடல்கள் :
1068:
வில் பெரு விழவும், கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழச்
செற்றவன் தன்னை, புரம் எரி செய்த
சிவன் உறுதுயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானை
திருவல்லிக் கேணி கண்டேனே.

1069:
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
விழுமிய முனிவர் விழுங்கும்
கோதில் இன் கனியை நந்தனார் களிற்றை
குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை
அப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும், மாட மா மயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே 2.3.2

1070:
வஞ்சனை செய்யத் தாய் உருவாகி
வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலையோடு உயிர் செக உண்ட
நாதனை தானவர் கூற்றை ,
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்து
துதி செய்யப் பெண் உருவாகி
அம சுவை அமுத அன்று அளித்தானை
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.3

1071:
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழாவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எந்தம்மோடு இன ஆநிரை தளராமல்
எம்பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை
திருவ அல்லிக்கேணி கண்டேனே 2.3.4

1072:
இன்துணை பதுமத்து அலர்மகள் தனக்கும்
இன்பன் நல் புவி தனக்கு இறைவன் ,
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை
தனக்கு இறை, மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி
வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை
திருவல்லிக் கேணிக் கண்டேனே. 2.3.5

1073:
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு
இளையவன் அணி இழையைச் சென்று ,
எந்தமக்கு உரிமை செய் என, தரியாது
எம்பெருமான்! அருள்! என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூலிழப்ப ,
இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றவனை
திருவல்லிக்கேணிக் கண்டேனே . 2.3.6

1074:
பரதனும் தம்பி சத்ருக்கனும்
இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற
ராவணாந்தகனை, எம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு ,
குயிலொடு மயில்கள் நின்று ஆல
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்,
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.7

1075:
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
வாயில் ஓராயிரம் நாமம்,
ஒள்ளிய ஆகிப் போத, ஆங்கு, அதனுக்கு ,
ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி,
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய் ,
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை —
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.8

1076:
மீன அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்று இழிந்த ,
கான் அமர் வேழம் கையெடுத்து அலற,
கரா அதன் காலினைக் கதுவ,
ஆணையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து
சென்று நின்று ஆழி தொட்டானை,
தென் அமர் சோலை மாட மா மயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே 2.3.9

1077:
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்
மாட மாளிகையும் மண்டபமும்,
தென்னன் தொண்டையர் கோன் செய்ட நல் மயிலைத்
திருவல்லிக்கேணி நின்றானை,
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்
காமரு சீர்க்கலிகன்றி,
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார்
சுகமினிது ஆள்வர் உலகே 2.3.10

கேள்வி கேட்டவர் யாரென்று தெரிய அவசியமில்லை. பதில் சொன்னவர் நமக்குத்தெரிந்த திருமங்கை ஆழ்வார்.'(நாலாயிர திவ்ய பிரபந்தந்தில் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழியில் 1068-1077 (பத்து) பாசுரங்கள் நான் படித்து மகிழ்ந்தவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த திருவல்லிக்கேணி மாறி ட்ரிப்ளிகேன் ஆகி, மாட மாளிகைகள், கோபுரங்கள் அடுக்கு வீடுகளாகவும், சோலை, மயில், குளம், மரம் செடி கொடி எல்லாம் காணாமல் போய்விட்டது. நல்லவேளை பார்த்தசாரதி ஆலயம் தன்னைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பிக்கொண்டதோ தப்பியதோ. யாரோ யாருக்கோ அதை விற்றிருப்பார்கள். திருமங்கை மன்னன் அவர் வர்ணனை எல்லாம் வெறும் ஏட்டில் தான். அதாவது மிஞ்சியதே.

 

  

 

  

 

 


Some Rare Photographs  of the Parthasarathi Temple, at Madras (Chennai), Tamil Nadu, taken by Frederick Fiebig in c.1851. The photograph is one of a series of hand-coloured salt prints by Fiebig. The temple is one of two large temple complexes in Madras and is situated in Triplicane. It dates from the 17th century and is a celebrated sanctuary dedicated to the worship of Vishnu as Parthasarathi, the principal Hindu deity. The temple has two enclosures, which are entered through gopuras on the east and west sides. A gopura is a gateway surmounted by an elaborately carved tower and is found in south Indian temple architecture. This is a view of the west gopura. Little seems to be known about Frederick Fiebig. He was probably born in Germany and became a lithographer (and possibly was also a piano teacher  

 

source:::: Input from a friend of mine & Blog site on Vishnu Temples …divyadesamyatra.blogspot.com/

natarajan

Leave a comment