Source: DInamalar dated 11 Nov-14

ஒரு சமயம், மகாபெரியவர் காஞ்சிபுரம் அருகிலுள்ள தேனம்பாக்கத்தில் முகாமிட்டுஇருந்தார். பெரியவருக்கு நெருக்கமான தொண்டர்களான திருவட்டீஸ்வரன் பேட்டை வெங்கட்ராம அய்யர், பாணாம்பட்டு கண்ணன் ஆகியோர் அருகில் இருந்தனர்.
அன்று மகாபெரியவரின் ஜெயந்தி (பிறந்த நாள்). பெரியவர் அன்று காலையில், அனுஷ்டானம், ஸ்நானம் முடித்துக் கொண்டு பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க வெளியே வந்தார். ஏராளமான கூட்டம் இருந்தது.
எத்தனையோ ஊர்களில் இருந்து பெரியவருக்காக ஹோமம் செய்து கொண்டு வரப்பட்ட பிரசாதங்கள், ஹோம பஸ்மா, கோயில் தண்டு மாலைகள், வில்வம், துளசி மாலைகள், பரிவட்டங்கள், திருப்பதி லட்டு,
திருநீறு, குங்குமம் என அனைத்தையும் ஏந்தி வந்தனர் பக்தர்கள்.
வந்தவர்கள் எல்லாரது நோக்கமும் பெரியவர் ஆரோக்கியமாக தீர்க்காயுளுடன் இருக்க வேண்டும் என்ற ரீதியிலேயே இருந்தது. அதற்காக, பெரியவர் பெயரில் அவரவர் இஷ்ட தெய்வக் கோயில்களில் அர்ச்சனை செய்து பிரசாதம் கொண்டு வந்திருந்தனர். அதை ஏற்றுக்கொள்ளுமாறு எல்லாரும் வேண்டிக் கொண்டிருந்தனர்.
பெரியவர் கூட்டத்தினரை நோக்கி மனம் நெகிழும்படியான பதில் சொன்னார்.
“”நீங்க எல்லாரும் நான் (குரு) நல்லா இருக்கணும்னு ஹோமம், அர்ச்சனை செஞ்சு பிரசாதம் கொண்டு வந்திருக்கீங்க! சரி…ஆனா, எனக்கு என்ன ஆசை தெரியுமா! காஞ்சி மடத்துக்கு வருகிற பக்தர்கள் எல்லாரும் சவுக்கியமா இருக்கணுமேனு ஆசை! ஹோமப்பிரசாதம் எல்லாம் தெய்வ அனுக்கிரகத்தைக் கொடுக்கும் இல்லையா! பக்தர்கள் பல கவலைகளோடு என்னிடம் வருகிறார்கள். சுவாமி பிரசாதங்களை அவர்கள் பெற்றுக்கொண்டு சவுக்கியம் அடையட்டுமேனு நான் நெனக்கிறேன்!” என்று சொல்லியபடியே, அந்த பிரசாதங்களைத் தொட்டார். அதன்பின், பெரியவரின் விருப்பப்படி அவை பக்தர்களுக்கே விநியோகம் செய்யப்பட்டன.
பெரியவர் ஜெயந்தியன்று பிரசாதம் பெற்ற பக்தர்கள் எல்லாரும், தங்கள் நோய்கள், கஷ்டங்கள் எல்லாமே தீர்ந்து விட்டதாக மகிழ்ந்தார்கள்.
“பக்தர்களுக்காக நான் இருக்கிறேன்’ என்று அருள்பாலித்த மகாபெரியவரை தினமும் மனதில் நினைத்து வணங்குவோருக்கு எந்தக்குறையும் வராது.
Read more: http://periva.proboards.com/thread/8283/#ixzz3IsFIRpso
SOURCE:::: http://www.periva.proboards.com
Natarajan