“பாலனாக வந்தார்; நல்ல பாதை நடத்த வந்தார்”: இன்று கிறிஸ்துமஸ்…

கிறிஸ்துமஸ் நாளன்று பாடப்பட்ட முதல் பாடலில், “இப்புவி மாந்தரில் பிரியம்’ என்ற ஒரு வரி வருகிறது. இப்போது, பிரியம் என்றால், கிறிஸ்துமஸ் அன்று கேக் வாங்கிக் கொடுப்பது, பிரியாணியை பகிர்ந்து கொள்வது என்ற அளவில் நின்று விட்டது. இத்துடன், வீடுகளில் நட்சத்திரங்கள் தொங்க விடுவதும், கிறிஸ்துமஸ் தாத்தா பரிசளிப்பதும் மட்டும் கிறிஸ்துமஸ் ஆகாது. அப்படியானால், பைபிளில், “”பசியுள்ளவனாயிருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள். அன்னியனாய் இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள், ஆடையில்லாது இருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்,” என்று சொல்லி இருக்கிறதே! அதைத் தானே நாம் செய்கிறோம் என்ற கேள்வி எழும். இதையெல்லாம் விட, “மனுஷன் எவ்வளவு விசேஷமானவன்’ (மத்.12:12) என்ற வசனமே மனதில் நிற்க வேண்டும். அதாவது, மனித இனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம். இதற்கு தானம் தருவதை விட, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமத்துவத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும். அதாவது, ஏழ்மை அகன்று விட்டால் அங்கே தானத்திற்கு இடமில்லை. வன்முறைகளால் மனித இனம் அழியக்கூடாது. காற்றின் பரிசுத்தத்தைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ய @வண்டும். ஆண்டவர் நமக்கு கற்றுத்தந்த வன்முறையற்ற, அன்பான சமுதாயம் என்று உருவாகிறதோ, அன்று தான் நமக்கு நிஜமான கிறிஸ்துமஸ்.

இரண்டு வித நம்பிக்கை:

இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு சுகமில்லாமல் போனால், கிறிஸ்துமஸ் அன்று நள்ளிரவில் குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறார்கள். அன்று மேரிமாதா குழந்தை இயேசுவுடன் செல்வதாகவும், இயேசு தங்கள் குழந்தையைத் தொட்டு ஆசிர்வதித்து நோயைக் குணமாக்குவார் என்றும் நம்புகிறார்கள். ஒருவேளை, குழந்தை இறந்து போனால், குழந்தை இயேசு தன்னோடு விளையாட தங்கள் குழந்தையையும் அழைத்துச் சென்று விட்டதாக ஆறுதலடைகிறார்கள்.

காலமெல்லாம் நம்மைக்காக்கும் கர்த்தராக வந்தவர்

இயேசுபாலன் வந்தார்-நம்மை

இரட்சித்து இன்பம் தந்தார்

தாசரான நம்மை-என்றும்

தாங்கி நடத்தி நன்மை

வாசமளிக்க வந்தார்-மோட்ச

வாசல் திறந்து தந்தார்!

குழந்தையாக வந்தார்-நமது

குறையைத் தீர்க்க வந்தார்

அழுந்தும் பாவஉலகை மீட்டு

ஆதரிக்க வந்தார்!

பாலனாக வந்தார்-நமது

பாவம் தீர்க்க வந்தார்

காலமெல்லாம் நம்மைக்காக்கும்

கர்த்தராக வந்தார்.

பிள்ளையாக வந்தார்-கன்னிப்

பெண்ணின் மகனாய் வந்தார்

தள்ளப்பட்டு நொந்தார்-நம்மை

தழுவிக் கொள்ள வந்தார்!

குமாரனாக வந்தார்-நம்மைக்

கூட்டிச் செல்ல வந்தார்

சமாதானம் தந்தே-என்றும்

சார்ந்திருக்க வந்தார்.

கிறிஸ்துமஸ் தாத்தா:

Photo Gallery

கிறிஸ்துமஸ் காலத்தில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு வீடு. வீடாகச் சென்று இனிப்பு, பொம்மை உள்ளிட்ட பரிசுகள் தரும் வழக்கம் எப்படி வந்தது தெரியுமா? கி.பி.4ம் நூற்றாண்டில், ஒரு ஏழைக் குடும்பத்தில் மூன்று பெண் குழந்தைகள் திருமண வயதில் இருந்தார்கள். அவர்களைக் கட்டிக் கொடுக்க பணவசதியில்லை. அந்தத் தந்தை திகைத்துக் கொண்டிருந்தார். ஒருநாள், காலை வாசல் கதவை திறந்த மூத்த மகள் திடீரெனக் கத்தினாள். “”அப்பா! இங்கே வாங்க! ஒரு பை நிறைய தங்கக் கட்டிகள் கிடக்குது” என்றாள். அந்தத் தந்தையும், மற்ற சகோதரிகளும் அரக்க பரக்க ஓடிவந்தனர். அவர்களுக்கு சந்தோஷம். அதைக் கொண்டு அந்தத் தந்தை முதல் மகளுக்கு சிறப்பாக திருமணத்தை நடத்தி வைத்தார். அந்தக் காலத்தில், மாப்பிள்ளைகள் ஏராளமாக தங்கம் கேட்பார்கள். அதனால், கண்டெடுத்த தங்கம் முதல் மகளுக்கே சரியாகி விட்டது. அடுத்து, இரண்டாவது மகள் பற்றிய கவலை தந்தைக்கு ஏற்பட்டது. என்ன அதிசயம்! இதே போல இன்னொரு பை நிறைய வாசலில் தங்கக்கட்டிகள் கிடந்தன. அது அவளுக்கு போதுமென்றாகி விட்டது. அடுத்து, மூன்றாவது மகளுக்கும் இதே போல வழி பிறக்குமென காத்திருந்த தந்தை, இதைத் தங்களுக்கு யார் தருகிறார்கள் என்று அறிவதிலும் விழிப்புடன் இருந்தார். ஒருநாள் அதிகாலை, விடிந்தும் விடியாததுமாக இருந்த பொழுதில், ஒரு முதியவர் குதிரையில் வந்து வாசலில் தங்கப்பையை போட்டு விட்டு நிற்காமல் சென்று விட்டார். ஆனாலும், ஏழை விடவில்லை. இன்னொரு குதிரையில் ஏறி முதியவரை விரட்டிப் பிடித்து விட்டார். அருகில் சென்ற பிறகு தான், அவர் தங்கள் பகுதி பிஷப் புனித நிக்கோலஸ் என்பதைத் தெரிந்து கொண்டார். (செயின்ட் நிக்கோலஸ் என்ற பெயர் மருவி தான் சாண்டாகிளாஸ் என்று ஆகி விட்டது) “வலதுகை கொடுப்பது இடதுகைக்கு தெரியக்கூடாது’ என்ற வேத வசனத்தின்படி அவர் நடந்து கொண்டதைக் கண்ட ஏழை, அதுபற்றி விசாரித்தார். “”ஒவ்வொரு வீட்டின் கஷ்டத்தையும் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு அதன்படி உதவும் விஷயம் தெரிந்தது. அவர் மறைந்தது டிச.6ல். இந்தநாளில், இவர் பற்றி அறிந்தவர்கள் தாத்தா வேடமிட்டு வந்து, குழந்தைகள் தூங்கும் போது, அவர்களே அறியாமல் பரிசுப் பொருட்களை தலையணை அருகில் வைத்து விட்டு சென்று விடுவார்கள். குழந்தைகள் எழுந்ததும் அதைப் பார்த்து சந்தோஷப்படுவார்கள். இந்த வழக்கம் பிற்காலத்தில் கிறிஸ்துமஸ் தினத்துக்கு மாறி விட்டது.

டிச.,25 அன்று பிறந்த குழந்தையா?

உங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் அன்று குழந்தை பிறந்திருக்கிறதா? பிரான்ஸ் மக்கள், கிறிஸ்துமஸ் அன்று குழந்தை பிறக்க வேண்டுமென்று பிரார்த்திக்காத நாளே இருக்காது. காரணம் அன்று பிறக்கும் குழந்தைகள் அறிவாளிகளாகவும், எதிர்காலத்தை அறிபவர்களாகவும் இருப்பர் என்பது அவர்களின் நம்பிக்கை. அதிலும், பெண் குழந்தை பிறந்தால், அவள் நல்ல குணமுள்ளவளாக விளங்குவாள் என்பதும் ஒரு நம்பிக்கை. ஸ்காட்லாந்து மக்களோ, கிறிஸ்துமஸ் அன்று பிறக்கும் குழந்தைகள் ஆவிகளைப் பார்க்கும் சக்தி உடையவை என்றும், அவர்களால் ஆவிகளுக்கு கட்டளையிட்டு அடக்கி வைக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.

சாண்டா கிளாஸ் வாழ்ந்த காலம் எது தெரியுமா?

கி.பி.300.கிறிஸ்துமஸ் தாத்தா வடதுருவத்தில் வசித்ததாக வடஅமெரிக்க குழந்தைகள் நம்பினர். நியூயார்க்கில் அவர் வாழ்ந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. 1822ல், கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி நியூயார்க் குருமார்கள் ஒரு புத்தகம் வெளியிட்டனர். கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் சங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டு, ஒரு சர்ச் கட்டவும், கிறிஸ்துமஸ் கலைக்கூடம் கட்டவும் நிதி திரட்டப்பட்டது.

முதல் கிறிஸ்துமஸ் கேரல்:

கிறிஸ்துமஸ் துவங்கிய காலத்தில் முதன் முதலாக பாடப்பட்ட கேரல் (குழுப்பாடல்) என்ன தெரியுமா!

இறைவனுக்கு மகிமை

இப்புவிக்கு சமாதானம்

இப்புவி மாந்தரில் பிரியம் என்பது தான். கிறிஸ்துமஸ் நாளின் முதல் நற்செய்தியும் இதுதான்.

 

SOURCE:::::இளங்கோவன் in http://www.dinamalar.com

Natarajan

Leave a comment