” பையனுக்கு புத்தி சொல்லலாம் …இப்போ உனக்குதான் சொல்லணும் …” !!!

பெரியவா எல்லாம் அறிந்தவர் என்பதற்கு இன்னொரு நிகழ்ச்சி.

மூலம்——-மஹாபெரியவாள் தரிசன அனுபவங்கள்—–ஆறாம் தொகுதி

சொன்னவர்——ஸ்ரீமடம் பாலு மாமா.

தொகுத்தவர்—–டி.எஸ்.கோதண்டராம சர்மா.

பதிப்பகம்——வானதி பதிப்பகம்.

நவநீதசோரன்.

சந்தானராமன், பெரியவாளை நமஸ்கரித்துவிட்டு தன்னுடைய பூர்வீகம், பெயர் போன்ற விவரங்களைச் சொன்னார்.

“நீ நவநீதசோரநன்தானே?”

சந்தானராமனுக்கு ஒரே திகைப்பு!.

“ஆமாம்”

“இப்போ எங்கே இருக்கே? என்ன பண்றே? பத்னி, குழந்தைகள்…?”

“டில்லியிலே இருக்கேன். பெரிய உத்யோகம், மனைவி, குழந்தைகள் சௌக்கியம்…”

பெரியவாள் அணுக்கத் தொண்டர்களைப் பார்த்தார்கள்.

“இவன் கதை தெரியுமோ?”

‘தெரியாது’ என்று எல்லோரும் தலையாட்டினார்கள்.

பெரியவா கதை சொன்னார்கள்.

“சந்தானராமன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒரே பையன். பெற்றோர்கள் படு சிக்கனம். குழம்பு, ரஸம், மோர்—–அவ்வளவுதான் தினமும்.

பத்து வயதுப் பையன், மற்றப் பையஙன்கள் போண்டா, வடை, பஜ்ஜி, தோசை, இட்லி என்றெல்லாம் சாப்பிடுவதைப் பார்க்கும்போது, ஏங்கிப்போவான்.

நாக்குச் சபலத்தைத் தீர்த்துக்கொள்ளணுமே?…

வழி கண்டுபிடித்தான்.

அப்பாவின் சட்டைப்பையில் கைவிட்டான். நிறைய காசுகள் இருந்தன. ஒரு அணா( இன்றைய 12 பைசா) மட்டும் எடுத்துக்கொண்டான். ஒரு வடை—ராமு ஐயர் காப்பி கிளப்பில்!

மறுநாள் ஓர் அணா——–பஜ்ஜி!

அடுத்த நாள் ஓர் அணா—போண்டா.

இவன் அப்பாவுக்கு சந்தேகம் தட்ட ஆரம்பித்தது. ‘பையில் காசு குறைகிறமாதிரி இருக்கே…’

ஒருநாள் கையும் களவுமாக அகப்பட்டுக்கொண்டான், சந்தானராமன்.

வழக்கம்போல் பெரியவா தரிசனத்துக்கு வந்தார்கள் அந்தக் குடும்பத்தினர்.

தகப்பனார், பெரியவாளிடம் முறையிட்டார்.

“…பையன் திருட ஆரம்பிச்சுட்டான். இப்பவே இப்படி இருந்தால், பிற்பாடு திருட்டுப் பழக்கம் வந்துடுமோன்னு கவலையாயிருக்கு…பெரியவா புத்தி சொல்லணும்….”

பெரியவாள் உதடு பிரியாமல் சிரித்தார்கள்.

“பகவான் கிருஷ்ணன் கூட சின்ன வயசில், வெண்ணெய், தயிர், பால் திருடியதாகச் சொல்வார்கள். அதனால் அவனுக்கு, நவநீதசோரன்னே பேர் வந்துடுத்து. உன் பிள்ளை சின்னப்பையன். நாக்கு கிடந்து அலையறது. சகஜம்தானே…. வாய்க்கு ருசியாக பட்சணங்கள் பண்ணிக் கொடுக்கச் சொல்லு. வசதியில்லாத குடும்பமா இருந்தா—–‘அப்பாவைத் தொந்திரவு செய்யாதே; திருடாதே’நன்னு பையனுக்கு புத்தி சொல்லலாம். இப்போ உனக்குத்தான் சொல்லணும். Pocket expense—க்கு அப்பப்போ ஓரணா—-ரெண்டணா கொடு. இனிமேல் திருடமாட்டான். பெரிய உத்யோகம் பார்ப்பான்….
என்று சொல்லி கதையை முடித்தார்கள் பெரியவா.
பெரியவ குரலை ஏற்றி இறக்கி, கைகளை ஆட்டி அசைத்துக் கதை சொன்னதை எல்லோரும் சுவைத்தார்கள்.

‘நவநீதசோரன்’ கண்களில் யமுனை பெருகிக்கொண்டிருந்தது!

Read more: http://periva.proboards.com/thread/2781/mahaperiavas-sarvagnathvam#ixzz3Vob004rL

source:::: http://www.periva.proboards.com

Natarajan

Leave a comment