பிரதமரிடம் மாணவி கேட்ட கேள்வி ….

“என்னால் எந்த வகையில் நாட்டுக்கு சேவை செய்ய முடியும்? என்பதை சொல்லுங்கள்!”  என கலந்துரையாடலின்போது பிரதமர் மோடியிடம் நெல்லை மாணவி விசாலினி கேள்வி எழுப்பினார்.

நாடு முழுவதும் ஆசிரியர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 மாணவ, மாணவிகளுடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலமாக நேரடியாக உரையாடும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக தமிழகத்தில் இருந்து நெல்லை மாணவி விசாலினி தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சங்கர் காலனியைச் சேர்ந்த மாணவி விசாலினி, 15 வயது நிரம்பியவர். தற்போது ஐ.ஐ.பி. லஷ்மிராமன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவரும் விசாலினியின் நுண்ணறிவுத் திறன் (ஐ.க்யூ) 225.

இது  மிகவும் அதிகம் என்பதால், சர்வதேச சாதனைப் புத்தகத்தில் அவரது பெயர் இடம் பெற்று உள்ளது. என்ஜீனியரிங் முடித்த மாணவர்கள் எழுதும் கணினி தேர்வை, தனது 10வது வயதிலேயே எழுதி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். 10வது சர்வ தேச கணினி மாநாட்டினை துவக்கி வைக்கும் பேச்சாளராக அண்மையில் அழைக்கப்பட்டு, அதில் பங்கேற்று உரையாற்றினார்.

அத்துடன், கூகுள் நிறுவனம் நடத்திய சர்வதேச உச்சி மாநாட்டிலும் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்ட விசாலினி, அதில் ஒரு மணி நேரம் பேசினார். அவரது திறமையின் மூலம் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) நேரடியாகப் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இந்த நிலையில் பிரதமருடன் உரையாட,  மத்திய மனித வள மேம்பாட்டு துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரதமரிடம் கேள்வி கேட்கும் 10 பேர் கொண்ட மாணவர்கள் பட்டியலில் விசாலினி பெயர் இடம் பெற்று இருந்தது.

இதற்கான நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. டெல்லி, மணிப்பூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்ட விசாலினி, ”எனக்கு நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற ஆசையும், ஆர்வமும் அதிகமாக உள்ளது. மாணவியாகிய நான் எந்த வகையில் நாட்டுக்கு சேவை செய்ய முடியும்? என்பதை சொல்லுங்கள் சார்” என ஆங்கிலத்தில் கேட்டார்.

அவரது கேள்வியை கேட்டதும் வியப்படைந்த பிரதமர் மோடி, ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியில் பதில் அளித்தார். ”இந்த வயதிலேயே நாட்டுக்கு சேவை செய்ய ஆர்வமா? நாட்டுக்கு சேவையாற்ற அரசு ஊழியராகவோ, அரசியல்வாதியாகவோ, ராணுவத்தில் சேர்ந்தோ சேவை செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை.

ஒவ்வொருவரும் அவரவர்க்கு முடிந்த வகையில் நாட்டுக்கு சேவை செய்யலாம். நீங்கள் உங்கள் வீட்டில் தேவை இல்லாமல் மின்சாரம் இயங்குவதை நிறுத்தினாலே நாட்டுக்கு ஆற்றும் சேவைதான். ஸ்கூட்டரில் செல்லும்போது போன் வந்தால் வாகனத்தை நிறுத்தி விட்டு பேசினால் எரிபொருள் மிச்சமாகும். கல்வி அறிவு இல்லாத மக்களுக்கு கற்றுக் கொடுப்பது மிகப்பெரிய சேவை. இது போன்ற சிறிய செயல்களை செய்வதன் மூலமாகவே கூட நாட்டுக்கு சேவை ஆற்ற முடியும்” என்றார்.

Source….www.vikatan.com

Natarajan

Leave a comment