ஏ.டி.எம் கார்டு இருக்கிறது. பணம் எடுக்க முடியவில்லை.
கையில் பணம் இருக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை.
மொபைல் போன் இருக்கிறது. சொந்த பந்தங்களின் சுகம் அறிய முடியவில்லை.
வண்டி இருக்கிறது. ஓட்டுவதற்கு எரிபொருள் இல்லை.
ஒரு கரப்பான்பூச்சி வீட்டுக்குள் நுழைந்து விட்டாலே, ஊரைக் கூட்டும் பெண்மணிகள், அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்த மழை வெள்ளத்தில் சகல விதமான ஜந்துக்களையும் பார்த்து விட்டார்கள்.
பாலுக்கும், காய்கறிக்கும், பிரட்டுக்கும் ஜனங்கள் தேடித் தேடி அலைந்த காட்சி நெஞ்சைப் பதற வைக்கும் ஒன்று. இறைவா, இனி இந்த அவலம் எந்தக் காலத்திலும் – எந்த ஊரிலும் – எவருக்கும் நடக்க வேண்டாம் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
பிஞ்சு வெண்டைக்காயைப் பொறுக்கிப் பொறுக்கி எடுத்த பெண்மணிகள், கடைகளில் கிடைக்கிற காய்கறியை ‘அடுத்தவர்கள் எடுத்துப் போய் விடுவார்களோ?’ என்கிற அவசரத்தில் அள்ளி அள்ளிப் போட்டுக் காசைக் கொடுத்த காட்சி, பரிதாபம்!
– இதுதான் சமீப நாட்களில் சென்னையின் நிலை.
சுமார் 100 வருடங்களுக்கு முன் இது போன்ற மழை சென்னையில் பெய்ததாம். நம் தாத்தாவுக்குத் தாத்தா பார்த்ததை, நாம் இப்போது பார்த்திருக்கிறோம். கொடுமையான சோகம்!
சுனாமி பார்த்து விட்டோம்.
புயலைப் பார்த்து விட்டோம்.
ஆச்சு. வெள்ளத்தின் விஸ்வரூபத்தையும் பார்த்து விட்டோம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற பல பகுதிகளில் பெய்த மழை உலகத்தையே உலுக்கிப் போட்டு விட்டது.
நாம் பிறருக்குத் தீங்கு செய்தால், அதன் எதிர்விளைவு நம்மைத் தாக்கும். ஆனால், எப்போது என்று தெரியாது.
அதேபோல் இயற்கைக்கு நாம் தீங்கு செய்தால், அது வரிந்து கட்டிக் கொண்டு நம்மைத் தாக்கும் என்பதை அடிக்கடி பார்த்துக் கொண்டுத்தான் இருக்கிறோம்.
ஆனால், திருந்தினபாடில்லை.
இயற்கைக்கு எதிரான நம் நடவடிக்கைகளை நிறுத்தினபாடில்லை.
பஞ்சபூதங்கள் ஆராதனை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே இருந்து வருகிறது.
ஆனால், இன்று?
பணம் பணம் பணம் என்று வாழ்வாதாரங்களான பஞ்சபூதங்களைப் பாழ்படுத்தி வருகிறோம்.
நீர்நிலைகளை சேதப்படுத்தி விட்டோம்.
வாயு மண்டலத்தை மாசுபடுத்தி விட்டோம்.
நிலத்தைக் கீறிக் கீறி வீடுகள் கட்டிக் கொண்டிருக்கிறோம்.
நீரை ஆராதித்தித்தோம். நிலத்தை வணங்கினோம். எல்லாமும் எல்லாமே தந்தன.
இன்று நிலத்தில் நீர் இருக்கின்ற இடத்தைத் தேட வேண்டி இருக்கிறது.
கிடைக்கிற நீர், எந்த அளவுக்கு சுத்தம் என்பதையும் ஆராய வேண்டி இருக்கிறது.
ஒன்றும் மோசம் போய் விடவில்லை. செய்த தவறுகளுக்குக் குழந்தைகள் மன்னிப்பு கேட்டுத் தாயின் கால்களைப் பிடித்துக் கட்டிக் கொள்வதில்லையா?
கங்கையில் நீருக்கு வழிபாடு உண்டு.
நம்மூரில் இருக்கிறதா? புனிதமான ஆற்று நீரில்தான் எல்லா அசிங்கமும் (கங்கையிலும் இன்று அசிங்கம் நடக்கிறது).
விவசாய நிலங்களை அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு வீடாக்கிக் கொண்டிருக்கிறோம்.
‘இருக்க இடம் தேவை’ என்று நீர் நிலைகளை அழித்துக் கொண்டிருக்கிறோம்.
போகட்டும். போனதெல்லாம் ஒரு கெட்ட கனவாக இருக்கட்டும்.
இயற்கையை ஆராதிப்போம்.
அது நமக்கு எல்லாமும் தரும்.
வெறும் பணத்தை வைத்துக் கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்பதை சமீப நாட்களில் பார்த்தாயிற்று.
பக்தி வேண்டும். நேர்மை வேண்டும். செய்கிற செயல்களில் நியாயம் வேண்டும்.
இறைவா, நான் வணங்கும் காஞ்சி மகா தெய்வமே…
வணங்குகிறோம் – இனியாவது.
வாழ விடுங்கள்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
எல்லாமும் மாறும் என்ற நம்பிக்கையுடன்,
பி. சுவாமிநாதன்….a friend of mine
Natarajan
