பெரியவாளின் முகமலரில் தவழும் இந்த ஸ்வானுபவமான புன்னகையின் பின்னணி என்ன ?

நமது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, சிறிது நேரம் பயணம் செய்து பார்க்கலாமா?
‘விநாயகுனி’ என்ற தியாகைய்யரின் மத்யமாவதி ராகக் கீர்த்தனையை, அய்யர்வாள் எந்த
சந்தர்ப்பத்தில் பாடியிருப்பார் என்ற கேள்வியைக் கணபதி அண்ணாவிடம் கேட்ட பெரியவாளுக்கு
(“நீங்க எழுத்தாளர்கெளெல்லாம் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுவேளே அது மாதிரி நீயும்
உன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஏதானும் தோண்றதா பாரேன்”)
அகிலாண்டேஸ்வரியையும் அருமைப் பிள்ளை பிள்ளையாரையும் இணைத்து ஒரு விளக்கத்தைத்
தர, பெரியவா சொல்லுகிறார், “ஒன் குதிரை தேவலாம்போலத்தான் இருக்கு. எனக்கு என்னமோ
வேறே மாதிரி தோண்றது; எனக்கு எல்லாமே அம்பாள்தான்; அதுவும் காமாக்ஷி என்றால்
இன்னும் அதிகமாகவே ஒரு பக்தி……” என்று தொடங்கி, அய்யர்வாள் காஞ்சிக்கு வந்து
காமாக்ஷியைத் தரிசனம் செய்தபொழுது அங்கு இருக்கும் அத்தனை பிள்ளையார் சிலைகளையும்
பார்த்துவிட்டு, அவர் என்னவெல்லாம் நினைத்தார், எப்படி இப்படி ஒரு ஸாஹித்யத்தை
இயற்றினார் என்று பெரிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, கணபதி அண்ணாவைப் பார்த்துக்
கேட்கிறார், “ ஒன் குதிரை தேவலாமா, என் குதிரை தேவலாமா ?”; அதற்கு கணபதி அண்ணா,
“உங்க குதிரைதான் உசந்த அராபியக் குதிரை, என் குதிரை வெறும் பொய்க்கால் கழுதை..”
என்று பதிலளித்தபொழுது, அதை ரசித்து செய்த புன்னகையோ?
அல்லது….
வேலூர் அருகில் ஒரு கிராமத்தில் இருந்து வந்திருந்த பக்தர்,—-கிராமஃபோன் இசைத் தட்டில்
தான் அடிக்கடி கேட்டு, அதை மனனம் செய்த, ‘விநாயகுனி..’ என்ற அந்தப் பாட்டை
எப்படியாவது பெரியவா முன்னில் பாடிக்காட்ட வேண்டும் என்ற தாகத்தோடு, கையில் காசு
சேரும் வரைக் காத்திருந்து இப்பொழுது வந்திருக்கிறார் அந்த ‘அப்பாவி’ பக்தர்—- பெரியவாளை
தரிசித்தபின் அவர் அனுமதி பெற்று, அந்தப் பாட்டை—-ராகத்தைக் கொலை செய்து, தாளத்தில்
தப்பு செய்து, ஸாஹித்யத்தை சிதைத்துப்——பாடிக் காண்பிக்கும் பொழுது, கணபதி அண்ணா அங்கு
போய்ச் சேருகிறார். அவருக்குக் கோபமும், ஏளனமும் ஒருங்கிணைந்து வருகிறது; அப்பொழுது,
பெரியவா கேட்ட பல கேள்விகளுக்கு அந்த ‘அப்பாவி’ சொன்ன பதில்களைக் கேட்டு, அந்த
பதில்களின் மூலம் வெளிப்பட்ட அந்த ‘அப்பாவி’யின் எல்லையில்லாத பெரியவா பக்தியைக்
கண்டு நாணி அவர்மேல் அன்பு பெருகிட, பெரியவா அந்த பக்தரிடம் ‘காமாக்ஷி’யைத் தெரியுமா
என்று கேட்க, அதற்கு, “பெரிவா! எனக்குக் காமாக்ஷியைத் தெரியாது……பெரியவாளைத்தான்
தெரியும்….” என்று அவர் சொன்ன பதிலைக் கேட்டு விகசித்தப் புன்னகையோ இது ?
அல்லது….
‘மைத்ரீம் பஜத’ பாட்டையும் அதைச் செய்த பெரியவாளையும் தரக்குறைவாக விமரிசனம் செய்து
வந்திருந்த ஒரு கடிதத்தைக் கணபதி அண்ணாவிடம் கொடுத்துப் படிக்குமாறு பெரியவா சொல்ல,
அதைப் படித்த கணபதி அண்ணாவின் ரத்தம் கொதிக்க, அவருடைய ‘ரியாக்ஷனை’க் கண்டு
“அவர் எழுதிய விமரிசனத்தில் நியாயம் இருக்கிறது…” என்று பெரியவா விளக்கம் தந்தபொழுது
செய்த புன்னகையோ?
அல்லது….
வேதம் படிக்கின்ற பாலகர்கள், ஒவ்வொரு வியாழனன்றும் பெரியவாளிடம் வந்து தாங்கள்
கற்றதை அவரிடம் ஓதிக் காட்டிய பொழுது அந்த மகிழ்ச்சியில் விளைந்த புன்னகையோ?
கணபதி அண்ணாவின் கற்பனைக் குதிரையே பொய்க்கால் கழுதை எனும்பொழுது
நம்முடையதெல்லாம் குழந்தைகள் உட்கார்ந்து ஆடும் மரப் பொம்மைக் குதிரைதான். கற்பனை
இதற்கு மேல் போகாது !
பரப்ரும்மம் செய்யும் இந்தப் புன்னகையின் பொருள் அந்தப் பரப்ரம்மத்திற்கே வெளிச்சம்!
ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !
Source……….www.periva.proboards.com
Natarajan