இந்த வாரக் கவிதை……” அணையட்டும் சாதீ …”

 

அணையட்டும்  சாதீ ….
…………….
“சாதிகள்  இல்லையடி பாப்பா” … பால பாடம் படித்தோம் அன்று!
பாடம் பாலருக்கு மட்டும்தானா ? மற்றவருக்கு இல்லையா ?
காலம்  மாற  மாற வாழ்வின் கோலம்  மாறுதே !
சாதியும் மதமும் நம் வாழ்வின் வேதமாய் உருமாறுதே
சாதித்தது என்ன நாம் இத்தனை காலம் ?
சாதிக்  கட்சி ஆயிரம் … சாதியின் பெயரில் வாக்கு வங்கி பல்லாயிரம்!
வீதிக்கு வீதி சாதியின் பெயர் சொல்லி அரசியல் செய்ய
தனித்  தனி தலைவர்கள் கூட்டம் ! அவர் பின்னால்
தன்  தனித்துவம் தொலைத்த மனிதரின் ஆட்டம் பாட்டம் !
சாதிக்கப்  பிறந்த  குழந்தைகள் அய்யா ..நாங்க  !
சாதியின் பெயரால் பொசுக்கலாமா எங்க வாழ்வை நீங்க ?
வேதம் ஓதும் சாத்தான் பேச்சுக்கு மயங்கலாமா  நீங்க ?
பாதம் பணிந்து கேட்கிறோம் நாங்க… எங்க  வாழ்வில்
ஒளி வீசும்  தீபமாய் இருக்க வேண்டிய  நீங்களே
சாதித்  தீயாக மாறி  எரிக்கலாமா   உங்க சந்ததியை ?
கருக்கி சுருக்கலாமா அவர்தம் வாழ்வை ?
பணிவன்போடு வேண்டுகிறோம் நாங்க …சாதித்தீ
வளர்த்து நீங்க சாதிக்கப் போவது என்ன அய்யா ?
உங்க சந்ததியைத் தொலைப்பது ஒரு சாதனையா ?
சற்றே யோசியுங்க ! இந்த வேதனை தொடரவேண்டுமா இன்னும் ?
அணைய வேண்டும் அய்யா …சாதித்  தீ !!!…இணைய வேண்டும்
மனித குலம் ஒரே அணியில்  தம் சாதி  மத  பேதம் மறந்து !
natarajan

Leave a comment