எனது நண்பர் திரு. சுவாமிநாதன் ( ஜீ டிவி } அவர்களின் அனுபவம் … இமெயிலில் அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
நடராஜன்
12 04 2016
துபாயில் நடந்த 151-வது அனுஷ சிறப்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் அங்கு சென்றிருந்தேன். மார்ச் 28 அன்று அனுஷம். அன்றைக்கு மாலை அங்கே நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டேன். துபாயில் இந்த வைபவத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிற என் அன்பு நண்பர் சூர்யா அவர்களின் அழைப்பின்பேரில் இந்தப் பயணம் வெகு சிறப்பாக அமைந்திருந்தது.
அனுஷ தினத்தன்று சூர்யா அவர்கள் எனக்கு ஒரு வேஷ்டி – புடவை வழங்கினார். இது அவர்கள் வழக்கமாம். ஒவ்வொரு அனுஷத்தின்போதும் ஒரு தம்பதிக்கு அவர்கள் இதை வழங்குவார்கள். துபாயிலும், உலகின் பிற இடங்களிலும் இருக்கிற மகா பெரியவா பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த வஸ்திரங்களை சூர்யாவுக்கு அனுப்பி, ‘இந்த பாக்கியத்தை இந்த முறை எங்களுக்குத் தாருங்கள்’ என்று அன்புடன் போட்டி போடுவார்களாம். அந்த வகையில், சிறப்பு அழைப்பாளனாக நான் அங்கு சென்றிருந்ததால், இவற்றை எனக்கு வழங்கியதாக சூர்யா அவர்கள் அந்த பூஜையிலேயே அறிவித்தார்.
துபாய் பயணம் முடிந்து சென்னையும் திரும்பி விட்டேன். ஒரு வாரம் கழித்து, சூர்யா எனக்கு ‘வாட்ஸப்’பில் ஒரு தகவல் அனுப்பி இருந்தார். ‘உங்களுக்கு ஒரு வேஷ்டி – புடவையும் பெரியவா பிரசாதமாக வழங்கினோமே… அதை என்ன செய்தீர்கள்? இப்படிக் கேட்கிறேன் என்று என்னை தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்’ என்று கேட்டிருந்தார்.
நான் பதிலுக்கு, ‘இதில் தவறு ஒன்றும் இல்லை. மகா பெரியவா பிரசாதமாக அனுஷ தினத்தன்று வழங்கி இருக்கிறீர்கள். எனவே, அவற்றை நானும் என் மனைவியும் எங்களது பயன்பாட்டுக்காக வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்திருக்கிறோம்’ என்று செய்தி அனுப்பிய அடுத்த விநாடியே, ‘உங்களுடன் இப்போது பேசலாமா?’ என்று செய்தி அனுப்பினார்.
ஜீ தமிழ் படப்பிடிப்பு முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தேன். ‘பேசுங்களேன். நான் ஃப்ரீதான்’ என்று பதில் அனுப்பினேன்.
சூர்யா பேசத் துவங்கியபோதே அவரது நா தழுதழுத்தது. ‘கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை சாலிகிராமத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தீர்களா?’ என்று கேட்டார்.
நான் ரொம்ப ஞாபக மறதி பேர்வழி. யோசித்தேன். சூர்யாவே ஆரம்பித்தார். ‘அன்றைக்கு அந்தப் பெண் வீட்டுக்காரர் உங்களுக்குச் சொந்தம்’ என்று எடுத்துக் கொடுத்தார்.
எனக்கு நினைவு வந்தது. என் மனைவியின் குடும்பத்துக்குச் சொந்தமான நண்பர் ரமானந்த் அவர்களின் மகள் திருமணம் அது. ‘ஆமாம்… நான் போயிருந்தேன்’ என்றேன் நினைவுக்கு வந்தவனாக.
சூர்யா ஆரம்பித்தார். ‘கல்யாணத்துக்குப் போனபோது மணமகன் வீட்டாரை நீங்கள் சந்திக்கவில்லை போலிருக்கிறது. மணமகனின் தாயார் பெயர் பட்டு சீனிவாசன். அவர்கள் எங்கள் துபாய் அனுஷ குரூப்பில் இருந்து வருகிறார். அவரிடம் ஓரிரண்டு நாட்களுக்கு முன் யதேச்சையாக பேசும்போது, ‘பையன் கல்யாணம் நல்ல விதமாக முடிந்ததா?’ என்று கேட்டேன். ‘எல்லாம் நன்றாக முடிந்தது. ஆனால், ஒரே ஒரு வருத்தம். அன்றைக்கு சொற்பொழிவாளர் சுவாமிநாதன் இந்தக் கல்யாணத்துக்கு மனைவியுடன் வந்திருக்கிறாராம். எனக்குத் தெரியவே இல்லை. அவர் வந்து விட்டுச் சென்ற பின்தான் எனக்குத் தெரிய வந்தது. ஆஹா… அவரை நாம் பார்த்திருந்தால் ஒரு வேஷ்டி – புடவை வைத்துக் கொடுத்து நமஸ்கரித்திருக்கலாமே என்று தோன்றியது. எனக்கு ஏனோ கொடுத்து வைக்கவில்லை’ என்று வருத்தத்துடன் சொன்னார்.
பிறகு என்னிடம் பட்டு சீனிவாசன் கேட்டார்: ‘இந்த அனுஷத்தில் ஒரு தம்பதிக்கு வழங்குவதற்காக வேஷ்டி மற்றும் புடவை அனுப்பி இருந்தேனே… வந்து சேர்ந்ததா?’ என்று கேட்டார்.
‘வந்து சேர்ந்தது. அதை வழங்கியும் விட்டேன். யாருக்குக் கொடுத்தேன் என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்’ என்று சொல்லி இருக்கிறார் சூர்யா.
‘சொல்லுங்கள்… யாருக்கு?’ என்று பட்டு ஆர்வத்துடன் கேட்க…
‘25-ஆம் தேதி சென்னையில் நீங்கள் கொடுக்க முடியவில்லையே என்று கவலைப்பட்ட சுவாமிநாதனுக்கு 28-ஆம் தேதி துபாயில் கொடுத்து விட்டேன். நீங்கள் சென்னையில் விருப்பப்பட்டதை மகா பெரியவா இங்கே முடித்து விட்டார். நீங்கள் அனுப்பிய வஸ்திரம் பெரியவா கிருபையால் இப்போது அவரிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது’’ என்று சொல்ல… பட்டு சீனிவாசனுக்கு ஆனந்தம்.
இதனால்தான், ‘அந்த வஸ்திரத்தை என்ன செய்தீர்கள்?’ என்று சூர்யா கேட்டிருக்கிறார்.
மகா பெரியவா பக்தர்கள் என்றைக்கு எதை விரும்பினாலும், நினைத்தாலும் அதை அந்த மகானே முடித்துத் தருவார் என்பதற்கு இதை விட என்ன சாட்சி வேண்டும்?!
நன்றி திரு சூர்யா, திருமதி பட்டு சீனிவாசன்.
மகா பெரியவா சரணம்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்