காகித கப்பல்
………….
மழை நீரின் ஓட்டத்தில் நான் விட்ட முதல் கப்பல் ….காகித கப்பல்!
இன்று வரை மனத்திரையில் ஓடுதே என் முதல் கப்பல் பயணம் !
ஒன்றல்ல … பலப் பல …. ஒன்று கவிழ்ந்தாலும் மற்றது தொடரும்
அதன் பயணத்தை …கை வைக்கவில்லையே நான் என் தலையில்
அன்று…”கவிழ்ந்தது என் கப்பல் என்று ” !
கப்பல் ஒட்டிய பெருமை மட்டுமே என் முகத்தில் …அந்த
மகிழ்ச்சி ஒன்றுதான் மனதில் நின்றது அன்று !
நீரின் ஆட்டத்திலும் ஓட்டத்திலும் அதன் பாதையில் வெகு நேர்த்தியாய்
பயணம் செய்து “ஒருவர் வாழ்க்கை பயணமும் இப்படித்தான்” என்று
எனக்கு கோடிட்டு பாடம் சொன்னதே அந்த காகித கப்பல் !
பால பாடம் அதைப் படிக்கத் தவறி விட்டேன் நான் அன்று !
காலச்சக்கர ஓட்டத்தில் ஓடும் காகித கப்பல் தானே நம் வாழ்க்கையும் !
வாழ்வின் ஓட்டத்தில் ஒரு வாசல் வழி மூடினாலும் இறைவன் மறு
வாசல் வழியைத் திறக்கிறானே நமக்கு !
மாற்று வாசல் திறப்பது தெரியாமல் மூடிய கதவு முன்னால் நான்
நின்று ” கவிழ்ந்து விட்டதே என் கப்பல் ” என்று புலம்புவது
ஏன் இன்று ?….
காகித கப்பல் சொன்ன பாடம் படிக்க நான் மறந்து விட்டதாலா ? நான்
செய்த தவறு நீ செய்ய வேண்டாம் தம்பி !
காகிதக் கப்பல் பயணம் இன்று உன் வாழ்வில் நீ பார்க்காத
ஒன்றாக இருந்தாலும் அந்த கப்பல் எனக்கு சொன்ன
செய்தியை மறக்க வேண்டாம் நீ !
ஆட்டம் ஏதும் இன்றி உன் வாழ்க்கை ஓட்டம் உன்னை வெற்றி சிகரம்
தொடவைக்கும் ஒரு ஆகாயக் கப்பலாக மாறும் நிச்சயம் !
natarajan