ஒன்றல்ல… பல கலாம்கள் உருவாக வேண்டும் : இன்று கலாம் நினைவு தினம்…

 

ஒருவர் சிறந்த ஆசிரியராக, அரசியல்வாதியாக, அறிஞராக, அமைச்சராக, வணிகராக,

விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்றால், முதலில் அவர் சிறந்த மனிதராக இருக்க வேண்டும். நல்ல மனிதனாக இல்லையென்றால், யாரும் என்னவாக இருந்தும்

பயனில்லை.

kalam2

மறைந்த ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், எல்லா வகையிலும் ஒரு சிறந்த மனிதர் என்பதுபோல, ஒரு சிறந்த புத்தகமும் கூட. உலகில் பலரும், இந்தியாவில் கிட்டத்தட்ட

எல்லோரும் படித்திருக்கிற திறந்த புத்தகம் அவர். இந்தியர் ஒருவர் இந்திய மக்கள் அனைவராலும் அறியப்பட்டிருப்பதும், அன்பு பாராட்டப்பட்டிருப்பதுவுமான அரிய மனிதர் என்றால், காந்தியடிகளுக்குப் பிறகு அனேகமாக அப்துல் கலாம் மட்டுமே. அப்துல் கலாமின் குடும்பம் சற்று வசதியான குடும்பம்தான் என்றாலும், பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கலம்

செலுத்துகிற தொழில் நசியவே வறுமை சூழ்ந்து கொள்கிறது. கலாம் அவர்கள் படிக்கவும் வேண்டும், கொஞ்சம் பொருள் தேடவும் வேண்டும் என்ற இரண்டு கடமைகளை ஏற்க வேண்டியதாகிறது. செய்தித்தாள்களை வீடு வீடாக வினியோகிக்கிற வேலை.வெட்கமோ, விரக்தியோ இல்லாமல் வியர்வை சிந்துகிறார். அவருடைய உழைப்பும் தீர்க்க தரிசனமும் அவரை ஒரு சிறந்த விஞ்ஞானியாகவும், ஜனாதிபதியாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல நண்பராகவும், வழிகாட்டியாகவும், தலைமுறை பலவற்றிற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவும் தன்னை உருவாக்கிக் கொள்ள உதவியுள்ளன. குழந்தைகள் கலாமை கொண்டாடியதற்குக் காரணமே அவர் குழந்தைகளைக் கொண்டாடியது தான். ஜனாதிபதியாக அவர் பணியாற்றியபோது தம் மாளிகையில் சனிக்கிழமை தோறும் ஏறத்தாழ 250 மாணவ மாணவியரைச் சந்தித்து அளவளாவி மகிழ்வார். குழந்தைகளோடு குழந்தையாக குழந்தை மனமே வேண்டும். அது அப்துல் கலாமிடம் நிரம்பவே உண்டு. ஒருமுறை இந்தியாவிலுள்ள எட்டு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி இன மாணவ, மாணவிகளை அவர் சந்தித்தார். ‘நீங்கள் வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறீர்கள்’ என்றபோது 9ஆம் வகுப்பு மாணவன் ஸ்ரீகாந்த், ‘நான் ஒரு மாற்றுத் திறனாளி. இந்தியாவின் முதல் மாற்றுத் திறனாளி ஜனாதிபதியாக நான் அமர விரும்புகிறேன்’ என்றதும், அந்த மாணவனின் நம்பிக்கையைப் பாராட்டி மகிழ்ந்தார் கலாம்.

அவரின் எண்ணற்ற கவிதைகளை நாம் வாசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஜனாதிபதி மாளிகையில் கவிஞர்கள் பலரை அழைத்து கவுரவித்திருக்கிறார். வாலி, அப்துல் ரகுமான், வைரமுத்து போன்ற பல கவிஞர்கள் அவரோடு கைகுலுக்கியும், அவரது கவிதைகளைக் கேட்டும் மகிழ்ந்துள்ளனர்.கலாம் ஓய்வு பெற்ற பிறகு ஒரு நாள் அவரை டில்லியில் நானும் முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கமும் சந்தித்தோம். ‘வெளிச்ச மலர்கள்’ என்ற என் கவிதைத் தொகுப்பை அவருக்குத் தந்தேன். அதில் ஒரு கவிதை,

‘காந்தி மீண்டும்

பிறக்க வேண்டும்,

ராட்டையோடு அல்ல

ஒரு சாட்டையோடு’

இவ்வரிகளைப் பலரும் பாராட்டிய மகிழ்ச்சியில் நானி ருந்தேன். ஆனால் அப்துல் கலாமோ,

‘ராட்டையோடு இருக்கிறவரைதான் அவர் காந்தி… சாட்டை இருந்தால் அவர் காந்தியாக

முடியாது,’ என்று மெல்லிய குரலில் சொன்னபோது அதுவும் எனக்கு சரியாகப்பட்டது. கவித்துவம் இருந்தால்தான் இப்படிக் கருத்துரைக்க முடியும். அடுத்தவர் உணர்வுகளை

மதிப்பதில் கலாமுக்கு நிகர் கலாம்தான். ஒரு சிலிர்ப்பூட்டும் நிகழ்ச்சி. அப்துல் கலாம் அவர்களோடு 70 விஞ்ஞானிகள் பணியாற்றினர். அவர்களுள் ஒரு விஞ்ஞானி ஒருநாள் மாலை சற்றுச் சீக்கிரமாக வீடு திரும்ப அனுமதி பெற்றிருந்தார். ஆனால் இரவு மணி 8.30 வரை ஆய்வு முடியவில்லை. அவர் விடைபெறுமுன் அக்குழுவின் தலைவர் அப்துல் கலாமிடம் சொல்லச் சென்றபோது, கலாம் அறையில் இல்லை. மாலையில் குழந்தைகளைப் பொருட்காட்சிக்கு அழைத்துப் போகவிருந்த அவர் குழந்தைகளை ஏமாற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்வோடு வீடு திரும்பிய போது ஓர் ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. கலாமே மாலை அந்த விஞ்ஞானியின் வீட்டுக்குப் போய் குழந்தைகளைப் பொருட்காட்சிக்கு அழைத்துப் போயிருக்கிற

விவரத்தை அறிந்து சிலிர்க்கிறார். தன்னுடைய விஞ்ஞானியின் ஆராய்ச்சிக்கு இடையூறு செய்யாமலும், அவருடைய குழந்தைகளை ஏமாற்றாமலும் நடந்துகொண்டது கலாமின் சிறந்த பண்பாகப் பலரது மனதில் பதிந்தது. செய்தொழில் வேற்றுமைகூட அறியாத சிறந்த மனிதரான அப்துல் கலாம், ஒருமுறை கேரளா ராஜ்பவனில் நடந்த தமக்கான பாராட்டு விழாவுக்கு தன்னுடைய விருந்தினர்களாக சாலையோரத்தில் செருப்பு தைக்கிற ஒரு தொழிலாளியையும், சிறு உணவு விடுதி நடத்தும் ஒருவரையும் அழைக்கக் கூறினார். இருவருமே கலாம்

திருவனந்தபுரத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றியபோது பழகியவர்கள். எந்த நிலையிலும் யாரையும் நினைவில் வைத்துக் கொள்கிறவர் கலாம்.வாரணாசியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டபோதுகூட அவருக் கென்று போடப்பட்ட சிறப்பு இருக்கையில் துணைவேந்தரை அமரக் கேட்க, அவர் மறுக்க எல்லோருக்கும் ஒரே மாதிரியான இருக்கை போடப்பட்ட பிறகே விழா தொடங்க இசைவு தெரிவித்தார். உயரம் என்பது வாழ்க்கையில் எல்லோர்க்கும் வரும். பெரும் பாலான உயரங்கள் பிற காரணங்களால் அல்லது புறக்காரணங்களால் அமையும். பெரும்பாலான உயரங்கள் பிறரால் எனும்போது விழுவதும் அவர்களாலேயே நிகழும். ஆனால் உயர்வு என்பது நம்மிடமே நிரந்தரமாக இருக்கும். உயர்வு என்பது பண்பு நலன்களால் வருவது. அப்துல் கலாம் அவர்கள் தமது பேராற்றலால் உயரமும் பார்த்தவர், பண்பு நலன்களால் தமக்கு உயர்வும் சேர்த்துக் கொண்டவர். இப்படி ஒருவரிடம் உயரமும், உயர்வும் இருப்பது அபூர்வம்.கலாம் மீளாத் துயிலில் ஆழ்ந்தபோது உலகமே மீளாத் துயரில் ஆழ்ந்தது. யாரும் அழைக்காமலும் அறைகூவல் விடுக்காமலும்

தமிழகத்திலிருந்தும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ராமேஸ்வ ரத்தில் மக்கள் வெள்ளம் திரண்டு, கடலையே வியக்க வைத்தது. இந்திய விஞ்ஞானம் ஒரு சிறந்த விஞ்ஞானியை இழந்திருக்கிறது. இந்திய அறிவியல் கல்வி ஒரு நல்ல ஆசிரியரை இழந்திருக்கிறது.

இந்திய ஆட்சி ஒரு மேன்மையான ஜனாதிபதியை இழந்திருக்கிறது, நமது மாணவர் சமுதாயம் தமது வழிகாட்டியை இழந்திருக்கிறது. மொத்தத்தில் இந்தியா ஒரு மாமனிதரை இழந்திருக்கிறது. அதிகமாகக் கூட வேண்டாம், இன்னும் நாலைந்து ஆண்டு களேனும் அவர் தன்னுடைய நீண்ட நித்திரையைத் தவிர்த்திருந்தால் இந்தியா 2020ஐயும் பார்த்துப் பூரித்திருப்பார்.

ஒன்றல்ல பல அப்துல் கலாம்கள் அவர் ஊக்குவித்த உன்னதமா(ன)ணவர்களிலிருந்து உயர்ந்துவர அவரே அதற்குரிய உரத்தையும், திறத்தையும் தெளித்து நல்ல விதைகளாய் நம்பிக்கையைத் துாவியிருக்கிறார். ஒன்றல்ல… பல கலாம்கள் உருவாக வேண்டும். அதுதான்

அவருக்கு நாம் செலுத்துகிற சிறந்த அஞ்சலி.

Source…..-ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் in http://www.dinamalar.com

Natarajan

 

Leave a comment