படித்து ரசித்தது …” என்னுடன் இருக்கிறார் மகாகவி பாரதி!”

 

TM-6

எங்கள் குடும்பத்தினர் அனைவரும் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆவது நாள் பட்டினப்பாக்கம், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், பால் காய்ச்சிக் குடியேறினோம். அடிப்படையில் நானோர் ஓவியன் என்பதால், இல்லத்தின் வரவேற்பறையில் என்னுடைய ஓவியங்கள் அழகுற அமைகின்றன. நான் ஓவியன் என்பதோடு கவிஞனும் என்பதால், வீட்டின் முகப்பில் மகாகவி பாரதியாரின் படத்தை மாட்டுகிறேன்.
புது வீட்டில் குடியேறிய மூன்றாம் நாள் எனக்கோர் வியப்பு! ஆமாம், வீட்டுக்குள் நான் வரைந்த வண்ணப் படங்களும் விழாவில் எடுத்த ஒளிப்படங்களும் சட்டமிட்டு மாட்டியிருக்க, அவற்றை விட்டுவிட்டு, வீட்டின் முகப்பில் அணிசெய்த மகாகவி பாரதியின் படத்திற்குப் பின்புற இடைவெளியில் சிட்டுக் குருவிகள் கூடுகட்டியிருந்தன! அசந்து போனேன் நான்! “”காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாடிய கவிஞனின் படத்தின் பின்புற இடைவெளியில் குருவிக்கூடு! அடடா என்ன பொருத்தம்!
இன்னொரு நிகழ்ச்சி… தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒவ்வொரு தளமாக ஏறிச்சென்று கடிதம் கொடுக்க முடியாததால் அஞ்சல் துறையினர், அனைத்து ஊடகங்களின் வாயிலாகவும் ஓர் அறிவிப்பினைச் செய்திருந்தார்கள்:
“குடியிருப்பாளர்கள் அனைவரும் தரைத்தளத்தில், படியேறும் முன்பாகவே, சுவரில் அவரவர்க்கான அஞ்சல் பெட்டிகளைப் பொருத்துதல் நலம் பயக்கும்’ என நயமாகவும் அழுத்தமாகவும் அறிவித்திருந்தார்கள். அதன்படி எங்கள் குடியிருப்பில் இருந்த அனைவரும் அவரவர்க்கான அஞ்சல் பெட்டிகளைச் சுவரில் பொருத்தி விட்டோம்.
ஆச்சரியம் பாருங்கள்! மூன்றாம் நாள். மற்றவர்களின் அஞ்சல் பெட்டிகளை விட்டுவிட்டு, எமது அஞ்சல் பெட்டியில் மட்டும் குருவிகள் கூடு கட்டிவிட்டன! அடடே! எனது பெயரில் “பாரதி’யாரின் பெயரும் இணைந்திருக்கிறதல்லவா! பாரதி என்றாலே குருவிகளுக்குக் கொண்டாட்டந்தான் போலும்! எனக்குச் சிலிர்ப்பாயிற்று. உடனே நான் ஒரு செயலைச் செய்தேன்.
அஞ்சல் பெட்டியின் குருவிக் கூட்டுக்குத் தொல்லை நேராமல் இருக்கவும், அஞ்சல்காரருக்கு வசதியாகவும், அஞ்சல் பெட்டியின் கீழே, ஒரு பையைக் கட்டித் தொங்கவிட்டேன். பெட்டியின் மேற்பகுதியில், ஓர் அட்டையில், “”பெட்டியில் குருவிக் கூடு; அஞ்சலைப் பையில் போடு” என எழுதி மாட்டிவிட்டேன். அதனைப் படித்த அஞ்சல்காரரும் ரசித்துப் புன்னகைத்தார்.
“மகாகவி பாரதி என்னுடன் இருக்கிறார்’ என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன்.2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி நானும் என் துணைவியார் திருமதி ராணியும் காசி நகர்ப் பயணம் செல்ல வாய்த்தது. பல இடங்களைப் பார்த்துவிட்டு, 19ஆம் தேதி காலை காசி நகர் போய்ச் சேர்ந்தோம். சுற்றுப் பயணக் குழுவில் எங்கள் பகுதியினர் தங்க வேண்டிய இடம் வேறு. ஆனால், நாங்கள் “அனுமன் காட்’ எனும் தெருவில் உள்ள விடுதியில் வந்து தங்கிவிட்டோம். சுற்றுலா ஏற்பாட்டாளர்களும் “”பரவாயில்லை, இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள்” எனக் கூறிவிட்டனர். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு மேல் கங்கையில் நீராடக் கிளம்பினோம்.
வெளியே பக்கத்து வீட்டுத் திண்ணையில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க அம்மையார் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம், “”அம்மா! பாரதியார் தன் இளம் வயதிலே காசியிலே இருந்ததா வரலாறுண்டு. அவர் எந்தத் தெருவிலே, எந்தப் பகுதியிலே இருந்தாருன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று பொதுவாகக் கேட்டேன்.
“”தெரியுமே! இதோ, இந்த எதிர்வீட்டில்தான் அவர் இருந்தார். அவரோட ஒன்றுவிட்ட மருமகன்கூட அங்க இருக்கார். டி.என்.கிருஷ்ணன்னு பேரு, போய்ப் பாருங்க” என்று அந்த அம்மையார் கூறியதைக் கேட்டதும் அசந்து போனேன் நான்!
எதேச்சையாக எங்கள் குழு இடம் மாறித் தங்கிடப் போக, அந்த இடத்தின் எதிர் வீடுதான் பாரதியார் தங்கியிருந்த “சிவமடம்’ என்கிற வீடு என்றால்… எப்படி இருக்கும் எனக்கு? “இது ஒரு தற்செயல் நிகழ்ச்சிதான்’ என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், அப்படியில்லை; ஆத்மார்த்தமாக பாரதியாரை நேசிக்கும் எனக்கு அப்படிக் கருத முடியவில்லை.
அருவமாக முன்னின்று அவரே எம்மை, அவர் வாழ்ந்த சிவமடத்துக்கு இழுத்துச் சென்றுவிட்டதாகவே நம்புகிறேன். ஆமாம், “”என்னுடன் இருக்கிறார் மகாகவி பாரதி!”

Source……….ஓவியக் கவிஞர் அமுதபாரதி in http://www.dinamani.com on Sep 11 2016

Natarajan

Leave a comment