பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி ….சில சுவையான தகவல்கள் …

1947-ம் ஆண்டு ஆகஸ்ட்  15ம் நாள்.
திருவண்ணாமலை ஆசிரமத்தில் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெற்றது.
அன்று பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள், பகவானை தரிசனம் செய்தார்கள்.
ரமண மகரிஷி ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஜன்னல் வழியே ஒரு குரங்கு எட்டிப் பார்த்தது.  அன்றுதான் பிறந்தது போல் இருந்த ஒரு குட்டியையும் அது வைத்திருந்தது. குட்டி, தாயை இறுகப் பற்றிக் கொண்டு, அச்சத்துடன் இருந்தது.
தாய்க்குரங்கு,  உள்ளே வரவேண்டும் என்று முயற்சித்தது. உள்ளே இருந்த பக்தர்கள்,அந்தக் குரங்கை விரட்டினார்கள்.குரங்கு பயந்து ஓடி அங்குமிங்கும் அலை பாய்ந்தது.
பகவான், குரங்கை விரட்டியவர்களைப் பார்த்தார். “அதை ஏன் துரத்துகிறீர்கள்? அது இங்கே என்னிடம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறது. தன் இளம் குழந்தையை எனக்குக் காட்டுவதற்காக வருகிறது. அது தவறா என்ன? உங்களுக்குக் குழந்தை பிறந்தால் என்னிடம் காட்டுவது இல்லையா? அப்படிக் கொண்டு வரும்போது யாராவது உங்களைத் தடுத்தால் எப்படி இருக்கும்? நீங்கள் குழந்தையைக் கொண்டு வரலாம். குரங்கு கொண்டு வரக்கூடாதா? இது என்ன நியாயம்?’’ என்றார்.
பக்தர்கள் குரங்குக்கு வழிவிட, அது குஷியாக உள்ளே வந்து, தன் குட்டியை பகவானிடம் பெருமையாக, சந்தோஷமாகக் காட்டிற்று. பகவான் அதன் முதுகை ஆதுரமாகத் தடவிக் கொடுத்தார்.
அது மட்டும் அல்ல, ஆசிரம நிர்வாகிகளிடம், “சுதந்திர தினம் என்பதால் எல்லோருக்கும் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.நம்முடைய தோழர்களாகிய குரங்குகளுக்கு விருந்து ஒன்றும் இல்லையா? அவர்களை மறந்து விடாதீர்கள். ஏனென்றால் நீங்கள் எல்லாம் இப்போது வந்தீர்கள். அந்தக் காலத்தில் இந்தக் குரங்குகள்தான் எனக்கு நண்பர்கள். அப்போது இவர்களைப் பார்த்திருக்க வேண்டும். எல்லாம் இவர்கள் ராஜ்ஜியம்தான்!’’ என்றார்.
அப்புறம் என்ன? மளமளவென குரங்குகளுக்கும் தடபுடலாக விருந்து தயார் ஆயிற்று.
நீங்களே சொல்லுங்கள்.உலகத்திலேயே சுதந்திர தினத்தன்று குரங்குகளுக்கும் விருந்து வைத்த மகான்கள் யாராவது உண்டா? பகவான் ரமண மகரிஷியைத் தவிர!
ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாட வேண்டும். மனதில் யார் உனக்கு அமைதியை ஏற்படுத்துகிறாரோ, அவரையே உன் குருவாக ஏற்றுக் கொள்!
–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
ஒரு நாள், ரமணாஸ்ரமத்தில் நல்ல கூட்டம். ஹால் நிரம்பி வழிந்தது.
அப்போது ஒருவர், அந்த ஊரில் உள்ள மோசமான ரௌடி ஒருவன் இறந்துவிட்ட தகவலை நண்பர்களிடம் தெரிவித்தார்.

இறந்தவன் மிகவும் கெட்டவன். பெரிய திருடன். மது அருந்திவிட்டு எதிர்ப்பட்டவர்களையெல்லாம் தாக்கும் குணம் உள்ளவன். அவனைப் பற்றி அனைவருக்குமே தெரியும் என்பதால் ஹாலில் சலசலப்பு ஏற்பட்டது.

“நல்ல வேளை போய்த் தொலைந்தான். எவ்வளவு பெரிய பாவி அவன்’’ என்றார் ஒருவர்.
‘‘கொடுங்கோலன். அப்பாவிகளை அடித்து மிரட்டுவான் அந்தக் கயவன்’’ என்றார் மற்றொருவர்.
‘‘அவன் குணக்கேடன். அடிக்கடி சிறைக்குச் செல்பவன்’’ என்று வெறுப்புடன் ஒருவர் சொன்னார்.
‘‘பக்தர்களிடம் கூட அவன் வழிப்பறி செய்வான்’’ என்றார் ஒரு பெண்மணி.
இப்படியாக ஹால் முழுக்க அவனை எல்லோரும் திட்டிக்கொண்டும், சபித்துக் கொண்டும் இருந்தார்கள்.
அத்தனை பேரும் ஒரு வழியாகப் பேசி முடிக்கும் வரை காத்திருந்தார் பகவான். அவருக்கும் அந்தத் திருடனைப் பற்றித் தெரியும் என்பதால் அவர் ஏதாவது  சொல்வாரா என்று பக்தர்கள் எதிர்பார்த்தார்கள்.
பகவான் ரமணர் வாய் திறந்து முதல் முறையாக அவனைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசினார்.
அவர் பேசியது என்ன?
‘‘அவன் ரொம்ப துப்புரவான மனிதன். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை குளிப்பானே!’’
இவ்வளவுதான் அவர் சொன்னது. எத்தனை பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை பகவான் இரண்டே வரிகளில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
மற்றவர்களிடம் உள்ள குறைகளைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே கவனியுங்கள். அப்போதுதான் நீங்கள்  சந்தோஷமாக இருப்பீர்கள் என்று 100 பக்கம் எழுத வேண்டிய ஒரு விஷயத்தை பத்தே வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் பாருங்கள். அதுதான் பகவான்.
எல்லோரிடமும் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் நாம் பார்க்கக் கற்றுக் கொண்டால் சண்டையோ, சச்சரவோ, பொறாமையோ, எரிச்சலோ நம்மை நெருங்குமா என்ன?
மெரிக்காவிலிருந்து சில வெள்ளைக்காரர்கள், பகவானை தரிசிப்பதற்காக திருவண்ணாமலை ஆசிரமத்துக்கு வந்தார்கள்.
ரமணரிடம் பல ஆன்மிக சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள். அவர்களில் துடுக்குத்தனம் கொண்ட ஒருவரும் இருந்தார்.
அந்த வெள்ளைக்காரர், பகவானைப் பார்த்து, “இஷ்ட தெய்வம் என்று சொல்கிறார்களே, அப்படி ஒருவர் உண்டா?’’ என்று கேட்டார்.
அதற்கு பகவான், “ஆம். ஈஸ்வரன் இருக்கிறானே’’ என்றார்.
அந்த அமெரிக்கர் சற்றுக் கிண்டலாக, “என்ன? கண், மூக்கு, காது, கை, கால் இவற்றோடா?’’ என்று கேட்டார்.
”ஆம். அதில் என்ன தவறு? உங்களுக்கு அந்த அங்கங்களெல்லாம் இருக்கும் போது, கடவுளுக்கு இருக்கக் கூடாதா?’’ என்று பகவான் பதில் சொன்னார்.
உடனே அந்த வெள்ளைக்காரர் சிரித்தார்.“இந்துக்களின் நூல்களில் கடவுளுக்கு இப்படி கை, கால் என்று அவயவங்கள் இருக்கின்றன என்று எழுதியிருப்பதைப் படிக்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது!’’
பகவான் அந்த அமெரிக்கரையே உற்றுப் பார்த்தார்.“அப்படியா? அப்படியானால் உங்களுக்கும் கை, கால் போன்ற அங்கங்கள் எல்லாம் இருக்கின்றனவே,அவற்றைப் பார்த்தால் உங்களுக்கு ஏன் சிரிப்பு வரவில்லை?’’ என்று கேட்டார்.
உடனே அருகில் உள்ளவர்கள் எல்லாம் சிரித்தார்கள்.
அந்த அமெரிக்கர் தலை குனிந்தார். அவமானத்தால் அல்ல. சரியான பதில் தனக்குக் கிடைத்ததே என்ற நன்றிப் பெருக்கால்.
SOURCE::::: input from a friend of mine
 Natarajan

Leave a comment