ஸ்ரீ முருகன் மாத வாரப் பதிகம்…..

ஸ்ரீ முருகன் மாத வாரப் பதிகம்
b113d-shankarimurugavan
ஒவ்வொரு கிழமையும் மட்டுமல்ல ஒவ்வொரு மாதம் முழுதும் முருகனைத் துதிக்கும் பதிகங்கள். அகஸ்த்திய கீதத்தில் இருந்து நொச்சூர் சுவாமிகள் சிவயோகி ஸ்ரீ சித்தானந்தா ஸ்வாமிஜி அவர்களால் பலருக்கும் உபதேசம் செய்யப்பட்ட “ஸ்ரீ  முருகன் மாத வாரப் பதிகம்”.காப்பு:

தணிகாசல மேவுந் தற்பரனை வேண்டித்
துணிவாயிரு பதிகஞ்சொல்ல – மணிசேர்
பணிதுலங்கு தோளான் பகர்ஆனை மாமுகன் தாள்
அணியாய் தலைக்கு அணிகுவாம்.

மாதப் பதிகம்

சித்திரை:

அத்திமுகத்தோன் அருந்துணைவா! இவ்வகிலம் எல்லாம்
சுத்தியொரு நொடிக்குள்ளே வலம் செய்த சூத்திரனே!
முத்தமிழ்க் கீரன் இடர் தீர்க்கத் தட்சண முயன்றதுபோல்
சித்திரை மாதம் வருவாய் தணிகையிற் சேவகனே.

வைகாசி:

கையாற  நின் கழல் போற்றி செய்தேன்; என்கனவில் எல்லாம்
மெய்யாக நீ வந்தது உண்மை என்றால் இந்த மேதினியில்
செய்யா வினையென்ன செய்திருந்தாலும், அச்சீற்றமற்று
வையாசி மாதம் வருவாய் தணிகையில் வாழ்பவனே.

ஆனி:

மானிலம் அளந்த மால்மருகா! இந்த மாநிலமும்
ஞானியு முனிவரும் நான்முகனும் தொழும் நாயகனே!
தேனில் விழுந்த ஈப்போல் திகைத்து உன்னைத் தேடுகிறேன்;
ஆனி மாதத்தில் வருவாய் தணிகையில் ஆண்டவனே.

ஆடி:

ஓடியுலாவும் பருவத்திலே இந்த ஊழ்வினைதான்
ஆடித் தொடர்ந்தது ஐயா! இதற்கென்ன நானறிவேன்;
பாடித் துதிக்கும் பதம் கொடுத்தாய்; அந்தப் பக்குவம் போல்
ஆடிமாதத்தில் வருவாய் தணிகையில் ஆண்டவனே.

ஆவணி:

சேவல் கொடியுடை சேவகனே! துதி செய்பவர்க்கும்,
காவடிக் கொண்டு வரும் அடியார்க்கும் கருணை வைத்து
மாவினை யாவையும் தீர்க்கவென்றே மலை மேவி நின்றாய்;
ஆவணி மாதம் வருவாய் தணிகையில் ஆனந்தனே.

புரட்டாசி:

இருட்டான மேனி அசுரரைச் சாய்த்துய்மை அவர்மேல்
அருட்பார்வை நோக்கிய ஆண்டவனே! அடியேனை வினை
வெருட்டாமல் காக்க வேண்டுகின்றேன் வெற்றி மாமயில்மேல்
புரட்டாசி மாதம் வருவாய் தணிகையிற் புண்ணியனே.

ஐப்பசி:

கப்பிய ஊழ்வினைத் தீர்ப்பை யென்றே நின் கமலமதில்
ஒப்புவித்தேன் மனத்துள்ள தெல்லாமிரு உத்தமனே!
தப்பிதம் எத்தனை செய்திருந்தாலும் நின் தஞ்சமென்றேன்;
ஐப்பசி மாதம் வருவாய் தணிகையில் அற்புதனே.

கார்த்திகை:

தீர்த்தம் அனேகங்கள் மூழ்கி வந்தேன் வினை தீர்ந்திலையால்
மூர்த்தி கண் மூவர் முதல்வனுக்கே மறை முடிவுரைத்து
கீர்த்தி வகித்த ஷண்முகனே! கதி வேறறியேன்;
கார்த்திகை மாதம் வருவாய் தணிகையிற் காவலனே.

மார்கழி:

சீர்மலிந்தோங்கும் உலகமெல்லாம் நின் சேவடிக்கே
கார்மலிந்தோங்கு வண்ணமன்றோ இன்பக் கட்டுரையால்
ஏர்மலிந்தோங்கு கவிவாணர் அன்பர் சொல் ஏற்றதுபோல்
மார்கழி மாதம் வருவாய் தணிகையில் மன்னவனே.

தை:

பொய்யான வாழ்க்கையை மெய்யாக நம்பி இப்பூதலத்தில்
மையாடு கன்னியர் மயலால் மெலிந்து மயங்குகின்றேன்
ஐயா! உனையன்றி திக்கறியேன் வினை யார் தவிர்ப்பார்?
தைமாதம் தன்னில் வருவாய் தணிகையிற் தயாபரனே.

மாசி:

பூசித்திறைஞ்சும் அடியார் இருதயம் பூரிக்க அன்பு
நேசித்து வந்து வினையும் கவலையும் நீக்குகின்ற
தேசிகனே! தெய்வ நாயகனே உனைத் தேடுகின்றேன்;
மாசி மாதத்தில் வருவாய் தணிகையில் மாமணியே.

பங்குனி:

எங்கெங்கும் ஓடியும் வினை அகலாம்; என் இருதயத்தை
பங்கிட்டு நின் மலர்ப்பதத்தில் வைத்தேன்; இது பத்தியமாம்
மங்கள வள்ளியும் தெய்வானையோடு மனமகிழ்ந்து
பங்குனி மாதம் வருவாய் தணிகையிற் பண்ணவனே.

வாரப் பதிகம்

ஆதி வாரம்:

நீதிக் கிசைந்த தெய்வம் என்றே இந்த நீள் நிலத்தோர்
ஓதித் துதிக்கும் உண்மையினால் எந்தன் ஊழ்வினையைச்
சோதித்து நீக்கிச் சுகத்தை கொடுக்கு நற் தோகையுடன்
ஆதித்த வாரம் வருவாய் தணிகையில் ஆண்டவனே.

ஸோம வாரம்:

பொங்குகடல் சூழுலகம் எல்லாம் உன்னை போற்றுதலால்
அங்கம் தளர்ந்து மிக மெலிந்து அடியேன் உன் அபயம் என்றேன்
எங்கும் திரிந்து உழலாமல் என் முறை ஏற்றருளித்
திங்கட் கிழமை வருவாய் தணிகையிற் தேசிகனே.

மங்கள வாரம்:

ஒவ்வாத ஆசைப் பெருவாரியில் நெஞ்சு ஊஞ்சலிட்டால்
இவ்வாறு நல்ல நிலையில் நிற்கேன் என்ன ஊழ்வினையோ?
இவ்வாறுயென்னை அயலாய் நினைக்கில் இங்காரு துணை?
செவ்வாய்க்கிழமை வருவாய் தணிகையிற் சேவகனே.

புத வாரம்:

இதமாக நெஞ்சுக்கு எத்தனைச் சொன்னாலும் இவ்வுலகை
சதமாகவே நம்பி வாதிக்குதே இந்த சஞ்சலத்தை
பதமாக நீக்கி நினையே தொழப் பச்சை மாமயில் மேல்
புதவாரம் வருவாய் தணிகையில் புண்ணியனே.

குருவாரம்:

ஒருவரும் துணையில்லை யென்றே உந்தன் உயர் பதத்தை
மருவிப் பிடித்து மன்றாடுவேன் மனம் ஏன் இரங்காய்?
அருமா மறைக்கு ஆதியனே! எனை ஆதரிக்க
குருவாரம் தன்னில் வருவாய் தணிகைக் கொற்றவனே.

சுக்கிர வாரம்:

கள்ள மனத்தின் கவலையும் தேகக் கடுவினையும்
எள்ளத்தனையும் இல்லாமல் காக்க இது  சமயம்;
வள்ளிப் புனத்தில் வெகு வித்தை செய்த வாலிபன் நீ!
வெள்ளிக்கிழமையில் வருவாய் தணிகையில் வேலவனே.

சனி வாரம்:

அனியாய நவக்கிரகச் சேட்டையினால் நொந்து அடுக்குலைந்தேன்
முனியாமல் என்முறை கேட்டருள்வாய் குருமூர்த்தியனே
இனியேது  எமக்குக் குறை என்ன என்று இருமாந்து  இருக்க
சனிவாரம் தன்னில் வருவாய் தணிகையில் ஷண்முகனே.

நூற்பயன்:

பன்னிரு மாதங்களும் வாரங்கள் ஏழும் பகலிரவும்
உன் இருதாள் தொழும் கடமையுள்ளேன் இது உண்மை கண்டாய்
என் இதயத்துக் கவலையும் ஊழும் எடுத்தெறிந்து
முன்னின்று காக்கும் கடன் எந்தக் காலமும் உன்னதுவே.


முருகா சரணம்…………….

SOURCE::::  Srinivasan in Murugan Bhakthi .org

Natarajan

Leave a comment