
வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது விஞ்ஞானம். காலத்தின் வெற்றிடத்தை ஒரு கவிஞனைக் கட்டமைத்து நிரப்பும் சமூக இயங்கியல்.
அப்படிக் காலத்தின் வெற்றிடத்தை நிரப்ப வந்த கவியாகத்தான் பாவேந்தர் என்ற பேராளுமையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர் வெளிவந்த காலத்தின் வெளிச்சத்தைக் கொண்டு காண வேண்டும் அவரது பெருமையின் திருமுகத்தை.
தமிழனுக்குத் தேசியமென்றால் இந்தி; அனைத்துலக மொழியென்றால் ஆங்கிலம்; இசையென்றால் தெலுங்கு; வழிபாடு என்றால் வடமொழி; அடுக்களையில் கூட அருந்தமிழ் ஆட்சி செலுத்துமா என்பது கேள்விக்குறி? – இது ஆர்.கே. சண்முகம் செட்டியாரின் அற்றை நாள் படப்பிடிப்பு.
மொழியென்பது வெறும் கருவிதானே; பொருள் சுட்டும் ஒலிக்கூட்டம்தானே; இதில் என்ன இருக்கிறது என்று கேட்டாரும் கேட்பாரும் உளர்.
அது சரியில்லை.
மொழி அளாவிய எல்லை வரையில்தான் நிலமிருக்கிறது. நிலம் அளாவிய எல்லை வரையில்தான் இனமிருக்கிறது. மொழி முடியுமிடத்தில் இனம் முடிந்துபோகிறது. ஆகவே, மொழிதான் இனம், மொழிதான் நிலம்.
கால்டுவெல்லும், பேராசிரியர் சுந்தரம் பிள்ளையும், மறைமலையடிகளும் முன்னெடுத்தோடிய இந்த முதற்சுடரைத் தீப்பந்தமாய்க் கொளுத்திக்கொண்டது திராவிட இயக்கம். அந்தத் தீப்பந்தத்தின் இலக்கியக் கொழுந்தாய் எரிய வந்தவரே பாரதிதாசன்.
அரசு – ஆலயம் – அதிகார மையம் – அன்றாடம் எல்லாம் பிறமொழிவயப்பட்டதில் தமிழை இழந்து நின்றது மெட்ராஸ் பிரசிடென்ஸி.
தமிழே வடமொழியின் குழந்தைதான். அதனால் இருந்துவிட்டுப் போகட்டுமே’ என்று எண்ணியாரும் இருந்தனர் அன்று. ஆனால், “தமிழ் என்பது பிற மொழியின் வார்ப்பன்று, திராவிடத்தின் மூலக்கூறு’ என்ற ஆராய்ச்சி முடிவுதான் தமிழ் தேசிய விடுதலைக்கே வித்திட்டது.
திராவிடத்திலிருந்தே தமிழ் பிறந்தது என்றார் கால்டுவெல்.
த்ரவிட – திரமிட – திரமிள – தமிள – தமிழ். இல்லை, தமிழிலிருந்தே திராவிடம் பிறந்தது என்றார் மறுசாரார். தமிழ் – தமிள – த்ரமிள – த்ரமிட – த்ரவிட. இவ்விரண்டில் ஏதொன்று ஏற்புடைத்தாயினும் தமிழ் வடமொழிச் சார்பில்லாதது என்பது பெறப்படும். பிறகு ஏன் தமிழ் தன் அதிகாரமிழந்து, அடையாளமிழந்து வடமொழி ஆதிக்கத்தில் வதைபட
வேண்டும்?
மொழியை மீட்டு மொழியிலிருந்து கட்டமைக்கப்பட வேண்டும் தமிழ் தேசியம். காலத்தின் இந்தக் குரலைத் தன் கவிதையில் வாங்கி ஓங்கி ஓதிய ஒரு தனிப்புலவர் பாவேந்தர் பாரதிதாசன்.
ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்
முன்னேற்றம் ஒவ்வொன்றும்
உன்முன் னேற்றம்
கண்டறிவாய் எழுந்திரு நீ
இளந்தமிழா கண் விழிப்பாய்
இறந்தொ ழிந்த
பண்டைநலம் புதுப்புலமை
பழம்பெருமை அனைத்தையும் நீ
படைப்பாய் இந்நாள்
தொண்டுசெய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெ ழுந்தே
என்ன ஒரு யாப்புச் செப்பம் – நரம்புகளில் நாணேற்றும் சொற்கள் – பனிக்கட்டி மீது உருண்டோடும் ஆப்பிள் போன்ற தடையற்ற ஓட்டம் – காலத்தைத் தூக்கி நிறுத்தும் கருத்து – இதை வாய்விட்டு வாசிக்கும் போதெல்லாம் 12 வயதில் நான் உற்ற உணர்ச்சியை – பெற்ற எழுச்சியை இன்றும் அடைகிறேன்.
எழுதப்பட்டு முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகும் இந்தக் கவிதையின் தேவை தீரவில்லை இன்னும்.
தமிழ் இலக்கியத்தின் நீண்ட வரலாற்று நெடுங்கணக்கில் பாரதிதாசனைப்போல் முரண்பட்ட இரு ஆசான்களைக் கொண்ட கவி அதற்குமுன் இல்லை.
ஓர் ஆத்திகப் பெருங்கவிஞனும், ஒரு நாத்திகப் பெருந்தலைவனும் உனக்கு ஆசான்களாகத் திகழ்வார்கள் என்று காலம் கவிஞனுக்குக் கட்டளையிட்டது.
“மகனே! எட்டயபுரத்தில் கவிதையெடுத்துக்கொள், ஈரோட்டில் கருத்தை எடுத்துக்கொள்’ என்று காலம் திரட்டிக் கொடுத்த திருப்பொருள்கொண்டு தமிழ் தேசியத்தைக் கட்டமைக்கப் பிறந்த கவிதா மேதைதான் பாவேந்தர் பாரதிதாசன்.
இந்திய தேசியத்தை பாரதி வடிவமைத்ததைப்போல் தமிழ் தேசியத்தை பாரதிதாசன் வடிவமைத்தார். பாரதி மீது அவர் வைத்திருந்த பற்று இறுதி மூச்சுவரை இற்றுப்போகாதது.
பக்கத்திலிருக்கும் வெளிச்சத்தில்தான் படிக்க முடியும் என்பதுபோல அருகிருக்கும் ஆளுமைகளே இன்னோர் ஆளுமையை உண்டாக்குகிறார்கள்.
இராமலிங்க அடிகளாரும், மாயூரம் வேதநாயகம் பிள்ளையும், கோபாலகிருஷ்ண பாரதியும் பாரதியாருக்கு உந்து சக்தியாய் வாய்த்ததுபோல் பாரதியாரும், பெரியாரும், மறைமலையடிகளும் பாரதிதாசனின் வார்ப்புக்குக் காரணமானார்கள்.
பாரதியாரைவிட இலக்கணம் கற்ற பாரதிதாசன், கவிதையைக் கற்றுக்கொண்டது பாரதியாரிடம்தான். இதை பாரதிதாசனின் கூற்றாகவே இங்கு பதிவுசெய்கிறேன்:
“”அவரெழுதிய கையெழுத்துப் படிகள் அங்குமிங்குமாகக் கிடக்கும். ஒருநாள் அவர் எழுதும் விசிப்பலகை டிராயரை இழுத்துப் பார்த்தபோது பாஞ்சாலி சபதம் என்ற கையெழுத்துப்படி இருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தேன். பாடல்கள் மிக எளிமையாகவும் புரியும்படியும் இருந்தன. அதேசமயம் மிகச் சுவையாகவும் இருந்தன.
இப்படி எளிதில் புரியும்படியான கவிதையை நான் பார்த்ததில்லை. புரியும்படி எளிதாகக் கவிதை எழுத முடியும் என்றும் நான் நினைத்ததில்லை.
அக் கையெழுத்துப்படி என் கவிதைப்போக்கில் பெரிய மாறுதலை உண்டாக்கியது. சுப்பிரமணியர் துதியமுது எழுதிய சுப்பு ரத்தினத்தைப் பாரதிதாசனாக்கியது”.
பட்டுக்கோட்டையிலிருந்து ஒருகுரல் பாரதிதாசனைச் சாடியது. அது என்ன பாரதிதாசன்? பாரதி ஒரு பார்ப்பனர். தாசன் என்பது வடசொல். அதற்கு அடிமை என்று பொருள்.
அப்படியானால் பாரதிதாசன், பாரதி என்ற பார்ப்பனருக்கு அடிமையா? இது கேள்வி. “ஆமாண்டா, நான் பாரதிக்கு அடிமைதான்’ – இது பாரதிதாசனின் பதில். பாரதிதாசனின் இந்த நேர்மை எப்போதும் பிடிக்கும் எனக்கு.
விமர்சனங்களை ஒரு கவிஞன் எப்படி எதிர்கொள்கிறான் – ஏற்றுக்கொள்கிறான் என்பதே அவனது வளர்ச்சி.
மற்போரிலும் சொற்போரிலும் மிக்கவராய்த் திகழ்ந்த பாரதிதாசன் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்கியதில்லை.
தமிழுக்காகப் போராடிய கவிஞனின் தொடக்க கால எழுத்துகளில் தனித்தமிழ் இல்லை. வந்து விழுந்த வடமொழிச் சொல்லாட்சிகளை அவரால் தவிர்க்க முடியவில்லை.
மயிலைப் பற்றிப்பாடும்போது –
சாயல் உன் தனிச்சொத்து
ஸபாஷ் கரகோஷம் – என்று எழுதினார்.
கோகிலம் – கஜராஜ் – ஸரோஜா – ஸம்பாத்தியம் – நிஜம் – விஷம் என்றெல்லாம் வடசொல் ஆதிக்கம் கவிதையில் மிகுந்திருந்தன.
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையிடம் பேசிக்கொண்டிருந்தபோது மறைமலையடிகள் சொன்னாராம்:
பாரதியும் கவிஞனில்லை; பாரதிதாசனும் கவிஞனில்லை ஏன்? இருவருமே வடமொழி சொற்களைக் கலந்து பாட்டெழுதுகிறார்கள்.
ஒருவன் கவிஞனா, இல்லையா என்பதற்கு மறைமலையடிகள் அன்று வைத்திருந்த அளவுகோல் அதுதான்.
மறைமலையடிகளின் கருத்தை அப்பாதுரையார் பாரதிதாசனுக்குத் தெரிவித்த பிறகு அவர் படைத்த தனித்தமிழ்ப் போர்ப் பாட்டுதான் தமிழியக்கம் என்று அறியக் கிடைக்கிறது.
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய ருசியும்
என்று எழுதிப் பதிப்பித்தவர், இதில் ருசி வேண்டாமே சுவை என்றிருக்கலாமே என்ற பொன்னம்பலனார் கருத்தை ஏற்று அடுத்த பதிப்புகளில் “பாகிடை ஏறிய சுவையும்’ என்று மாற்றினாராம். இப்படிக் காலந்தோறும் தன்னைச் செதுக்கிச் செதுக்கி வளர்ந்திருக்கிறார் அந்தச் செம்மாந்த கவிஞர்.
தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்தவர்கள் உற்றாய்ந்து கற்றால் ஒன்றைக் கண்டறியலாம். தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் தன்னிலை ஒருமையிலும் முன்னிலையிலுமாகவே இயங்கி வந்திருக்கின்றன. சங்க இலக்கியங்களும், சமய இலக்கியங்களும் கூட இவற்றுக்கு முற்றிலும் விதிவிலக்கல்ல.
நின் – என் – உன் என்றுதான் பல பாடல்கள் பேசுகின்றன. பாரதிக்குப் பிறகுதான் தமிழ்க் கவிதை எங்கள் – எம் – யாம் என்று பாட ஆரம்பித்தது.
பொழுதெலாம் எங்கள் செல்வம்
கொள்ளை கொண்டு போகவோ
எங்கள் பாரத தேசமென்று
தோள்கொட்டுவோம்
-என்று பாரதி குரல் ஒலித்தது.
அதைத் தொடர்ந்து –
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
-என்று பாவேந்தரின் பேரோசையாய் அதிர்ந்தது.
என் – நின் என்பன பெரும்பாலும் கடவுளோடு பேச. எங்கள் – யாம் என்பன மக்களோடு பேச. மக்களோடு பேசியவர், மக்களுக்காகப் பேசியவர் மாகவிஞர் பாவேந்தர்.
தாலாட்டு என்பது பழைய வடிவம்.
சாணிக்குப் பொட்டிட்டுச் சாமியென்பார் செய்கைக்கு
நாணி உறங்கு நகைத்துநீ கண்ணுறங்கு
-என்று தொட்டிலுக்குள் பகுத்தறிவை விதைத்தது பாரதிதாசன் பாட்டு
தாமரைத் தடாகம் என்பது பழைய படிமம்.
தாமரைபூத்த தடாகங்களே – உமைத்
தந்தஅக் காலத்திலே – எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து
மறைந்ததைச்
சொல்லவோ இந்த ஞாலத்திலே
-என்று தாமரைப் பூவில் உழைக்கும் மக்களின் உள்ளங்கைச் சிவப்பைச் சிந்தித்தது பாவேந்தர் பாட்டு.
பகுத்தறிவு, சீர்திருத்தம், காதல், குடும்பம், கலை, கல்வி, அரசியல், அறவியல், அறிவியல், அழகியல் என்று வாழ்வின் அத்தனை வெளிகளையும் அளாவித் துழாவியது பாவேந்தரின் படைப்பு விறல் அல்லது விரல்.
பாவேந்தர் அரசியல் அறிந்தவர், தேர்தலிலும் வென்றவர். ஆனால், அரசியலில் அவர் கரைந்துபோகவில்லை. பெருங்கவிஞர்கள் யாரும் அரசியலை வென்றெடுத்ததில்லை. காரணம், கவிதை என்பது மறைத்ததைப் புலப்படுத்துவது. அரசியல் என்பது பெரும்பாலும் புலப்பட்டதை மறைப்பது. பாவேந்தர் மறைக்கக் கற்றுக்கொள்ளவில்லை.
திரைப்படத் துறையிலும் தன்னை அவர் தோய்த்துக் கொண்டார். இறுதியில் தேய்த்துக் கொண்டார். அதில் பொருளீட்டுவது அவருக்கு இரண்டாம் நோக்கம். அந்த ஊடக வழியே தமிழ் பரப்புவதே முதல் நோக்கம்.
பராசக்தி படத்தின் தொடக்கப் பாடலாக “வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு’ இடம் பெற வேண்டுமென்று வேண்டியபோது, பணமே வேண்டாம். பாட்டு இடம்பெற்றால் போதும் என்று பெருமிதத்தோடு ஒப்புதல் தந்தவர் பாவேந்தர்.
அவர் கோபக்காரர் – பாயும் புலி – சீறும் சிங்கம் என்றெல்லாம் உருவகப்படுத்துவார்கள். பல நேரங்களில் அவர் குழந்தையாகவே இருந்திருக்கிறார் என்பதற்குப் பல நிகழ்வுகளைப் படித்தறிகிறேன்.
மாடர்ன் தியேட்டர்ஸில் அவர் வசனமெழுதிய “சுலோச்சனா’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. வருணன் – வாயு – இந்திரன் முதலியவர்களை இந்திரஜித் சிறைப்பிடிக்கிறான். பிரம்மதேவன் இலங்கை வந்து இராவணனை வேண்டுகிறான்.
“இராவணேஸ்வரா! என் பொருட்டாவது அமரேசனை விடுவித்து அளகாபுரியை அழியாமல் காப்பாற்ற வேண்டும்’ என்று பாவேந்தர் வசனமெழுதியிருக்கிறார்.
அந்த வசனம் பேசி பிரம்மதேவனாக நடித்த தேவராஜ நாயுடு கொஞ்சம் தமிழறிந்தவர். நடிப்பதை நிறுத்திவிட்டு “அய்யோ, அளகாபுரி குபேரன் தலைநகரமாயிற்றே… அமராவதிதானே இந்திரன் தலைநகரம்’ என்று தயங்கி நின்றாராம்.
பாரதிதாசனை அவசரமாய் அழைத்துக்கேட்டதும் “ஆமய்யா… ஆமய்யா… நீ சொல்றது சரிய்யா…’ என்று குழந்தைபோல் திருத்திக் கொடுத்தாராம்.
விமர்சனத்தை எதிர்கொள்வதற்கு ஆண்மை வேண்டும்; அதை ஏற்றுக்கொள்வதற்குப் பேராண்மை வேண்டும்; அந்தப் பேராண்மை பெற்ற பெருங்கவிச் சிங்கம் பாரதிதாசன்.
அன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் தலைமையில் அமைச்சர்களும் தமிழறிஞர்களுமாய் ஓர் ஆலோசனைக் கூட்டம், நானுமிருந்தேன்.
“பாவேந்தர் புதைக்கப்பட்ட இடத்தை நினைவுச்சின்னமாக மாற்ற இயலாதா?’ என்ற கேள்வியொன்று முன்வைக்கப்பட்டது.
மிகுந்த சோகத்தோடு முதல்வர் உதடு பிதுக்கினார். பாரதிதாசனின் காதலர் அவர். பாவேந்தர் படைப்புகளை நாட்டுடைமையாக்கியவரும் அவர்தான்.
“என்ன தயக்கம் என்று கேட்டேன்?’
பொது இடுகாட்டில் பத்தோடு பதினொன்றாய்ப் புதைக்கப்பட்டுவிட்டார் பாவேந்தர். அந்த இடத்தில் மண்டபத்திற்கு வசதியில்லை; அங்கு தூய்மையும் இல்லை’ என்றார் வருத்தத்தோடு.
பாவேந்தரின் இடுகுழி மட்டுமா தூய்மையாக இல்லை?
தமிழ்… தமிழ் உணர்வு… தமிழர் மேம்பாடு… எதில் இன்று தூய்மையிருக்கிறது?
அதிகார மையங்களில், ஆலயங்களில், நீதிமன்றங்களில், கல்விக் கூடங்களில், கலை ஊடகங்களில், பத்திரிகைகளில், வானொலிகளில், சமூக வலைத்தளங்களில் தமிழுக்கான இடம் தார்மீகமாகவும் அதிகாரபூர்வமாகவும் என்று உறுதிப்படுத்தப்படுகிறதோ அன்றுதான் பாரதிதாசன் மீண்டும் விழித்தெழுவார்.
கவிஞனுக்கேது மரணம் நீண்ட உறக்கம்தான்.
Source…..கவிஞர் வைரமுத்து in http://www.dinamani.com
Natarajan