” உலகிலேயே சிறந்த வீடு இது …”

நிம்மதியாக வாழ ஓரிடம் வேண்டும் என்பதால் வீடு கட்டுவோர் ஒரு வகை. மற்றொரு பிரிவினர் தங்கள் வீட்டைப் பார்த்து பிறர் ஆச்சரியப்பட்டு நிற்க வேண்டும் என விரும்புவார்கள். இரண்டாம் பிரிவினருக்கு உலகத்திலேயே சிறந்த வீடாகத் தங்கள் வீடே இருக்க வேண்டும் என்ற ஆசையே இருக்கும்.

ஒருவேளை இப்படியோர் ஆசையில் வீடு கட்டத் தொடங்கி, அதை வெற்றிகரமாக முடிக்க விரும்புபவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மைக் ஸ்பிங், அவருடைய மனைவி மரியா ஆகியோர் கட்டியிருக்கும் வீடு கடும் சவாலாக இருக்கும். இந்தச் சவாலை முறியடித்தால் மட்டுமே நீங்கள் அவருடைய வீட்டை மிஞ்சி ஒரு வீடு கட்ட முடியும். ஏனென்றால் இந்தத் தம்பதி கடந்த ஐந்து வருடங்களில் உலகில் கட்டப்பட்ட வீடுகளில் சிறந்த வீட்டைக் கட்டியிருக்கிறார்கள்.

உலகிலேயே சிறந்த வீடு என்றால் அது எப்படி இருக்கும் என்ற கற்பனையுடன் அந்த வீட்டை நீங்கள் பார்க்கும்போது அந்த வீடு உங்களை ஏமாற்றக்கூடும். ஏனெனில் அந்த வீடு ஒரே தளத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. ஒரே தளத்தைக் கொண்ட வீடு அதுவும் பார்ப்பதற்கு போர் சமயத்தில் பதுங்க உதவும் பதுங்குக் குழி போன்ற தோற்றத்தைக் கொண்ட வீடு எப்படிச் சிறந்த வீடாக இருக்க முடியும் என்ற எண்ணமே மேலெழும்.

ஆனால் வெளிச்சமும் காற்றும் தங்கு தடையின்றிப் புழங்கும் வகையில், பசுமையான சூழலின் நடுவே வெள்ளை நிறத்தில் எழும்பி நிற்கும் அந்த வீட்டை ஒரு முறை பார்த்தாலே மனதில் அப்படியே ஒட்டிக்கொள்ளும் தன்மையை அந்த வீடு கொண்டிருக்கிறது.

தென்கிழக்கு இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டுஷைரில் அமைந்துள்ளது, ஃபில்ண்ட் ஹவுஸ் என்னும் அந்த வீடு. மூன்று படுக்கை அறைகளைக் கொண்டது அது. 2015-ம் ஆண்டுக்கான ‘த ஆர்க்கிடெக்ஸுரல் ரிவ்யூ ஹவுஸ் அவார்ட்’டை அந்த வீடு பெற்றிருக்கிறது. விருதுக் குழுவினர் மைக் ஸ்பிங்கின் வீட்டை முழுமையாக ஆராய்ந்து இந்த விருதை வழங்கியுள்ளார்கள். கட்டுறுதிமிக்கது, ஒழுங்கு முறையான வெளித் தோற்றம் கொண்டது, சவால் விடும் வடிவமைப்பு கொண்டது என வீட்டைக் குறித்து விருதுக் குழுவின் நடுவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கட்டுமான அதிபர் மைக் ஸ்பிங் தனது பெருமைக்குரிய வீட்டுக்கான இடத்தை 2008-ல் வாங்கியுள்ளார். அப்போது அதன் விலை சுமார் 66 கோடி. 50 ஏக்கர் பரப்பு கொண்ட இடத்தில்தான் விருதுபெற்ற இல்லத்தை அமைத்திருக்கிறார் அவர். அந்த இடத்தில் முன்பு வடிவமைப்பு ரீதியான எந்த முக்கியத்துவமுமற்ற 20-ம் நூற்றாண்டின் தொடக்க கால அமைப்பைக் கொண்ட வீடு ஒன்று இருந்திருக்கிறது.

தொடர்ச்சியான எட்டுக் கட்டிடங்களைக் கொண்டதாகவும், ஓர் உடற்பயிற்சிக் கூடம், ஒரு பண்ணை இல்லம், ஒரு நீச்சல் குளம் ஆகியவற்றைக் கொண்டதாகவும் அந்த வீடு இருந்திருக்கிறது. இதை வாங்கி அந்த இடத்தில்தான் மைக் தன் கனவு இல்லத்தைக் கட்டி முடித்திருக்கிறார்.

கட்டிடக் கலையில் நிபுணத்துவம் பெற்ற டேவிட் சிப்பர்ஃபீல்டு என்னும் கட்டிடக் கலைஞரிடம் வீட்டை நிர்மானிக்கும் பொறுப்பை மைக் ஒப்படைத்துவிட்டார். அவர் உருவாக்கிய நவீனமும் பாரம்பரியமும் சரிவிகிதத்தில் கலந்த இந்த மூன்று படுக்கையறை வீடுதான் இன்று மைக்குக்குப் பெருமை தேடித் தந்துள்ளது. 11 கான்கிரீட் தூண்களின் மேலே கம்பீரமாக நிற்கும் அந்தப் பாரம்பரிய இங்கிலாந்து வீட்டைப் பார்ப்பவர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

Source….www.tamil.thehindu.com
Natarajan

One thought on “” உலகிலேயே சிறந்த வீடு இது …”

  1. carrier ac contractors orlando's avatar carrier ac contractors orlando July 18, 2015 / 7:25 pm

    It’s really a nice and helpful piece of information. I’m glad that
    you just shared this useful information with
    us. Please keep us up to date like this. Thank you for sharing.

Leave a comment