” மகா கவி பாரதியார் , பாரீஸ் வெள்ளம் பற்றி எழுதிய ஒரு பதிவு “…பாரதி பிறந்த நாளில் ஒரு நினைவலை…

நன்றி: சீனி. விசுவநாதனின் “கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ – அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை – 4.

சமீபத்தில் சென்னையைத் தாக்கிய பெருமழையைவிடக் கடுமையான மழையால் 1910-இல் பிரெஞ்சு நாட்டு தலைநகர் பாரீஸ் பாதிக்கப்பட்டது. 1910 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பாரீஸை மூழ்கடித்த அந்த வெள்ளம் குறித்து, இப்போதுபோலத் தகவல் தொலைத்தொடர்பு வசதி எதுவும் இல்லாத நிலையிலும் மகாகவி பாரதியார் தனது விஜயா (14.02.1910), இந்தியா (19.02.1910) இதழ்களில்
விவரமாக எழுதியிருக்கிறார். அன்றைய மொழி நடையை மாற்றாமல், பாரதியாரின் பிறந்த தினமான இன்று அதை மறுபதிவு செய்கிறோம். நூறாண்டுகளுக்கு முன்பு பாரீஸ் எதிர்கொண்ட சோதனைகள்

பலவற்றையும் இப்போது சென்னையும் எதிர்கொண்டது என்பதுதான் வியப்பு – ஆசிரியர்.

நமக்குச் சென்ற வாரம் தபால் மூலமாகக் கிடைத்த கடிதங்களாலும் பத்திரிகைகளாலும் பாரீஸ் வெள்ளத்தைக் குறித்து, பின் எழுதும் விபரங்கள் வந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாகச் சேன் நதியில் பிரவாகம் அதிகரித்துச் சுற்றுப்பக்கங்களிலெல்லாம் பரவிவந்தது. பூமிக்குள் இருப்புப்பாதை போட்டு ரயில் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுரங்கவழிகளில் முதல்முதல் தண்ணீர் நிறைந்து அவ்வழியாக ரயில் வண்டிகள் ஓட்ட முடியாமல் நிறுத்தப்பட்டன.
பிறகு வெளிரோட்டுகளில் பரவி, பாரீஸில் பள்ளமாக இருக்கும் பாகங்களிலெல்லாம் நீர் தங்கிவிட்டது. குதிரை வண்டிகள் வெகு கஷ்டத்தோடு தெருக்களில் இங்குமங்குமாகப் போய் கடைசியில் தண்ணீர் அதிகரிக்கவே வண்டிகளின் நடமாட்டமேயில்லாமல் போய்விட்டது. டிராம் வண்டிகளும் மேடான தெருக்களில்தான் ஓடிக்கொண்டிருந்தன.
வரவரத் தண்ணீர் அதிகரிக்கவே அநேக தெருக்களில் டிராம் வண்டிகூடச் செல்ல முடியவில்லை. கேதோர்úஸ என்னும் பாகத்திலிருந்த ரயில்வே ஸ்டேஷன் தண்ணீரில் முக்கால் முழுகிவிட்டபடியால் அந்தப் பக்கத்து ரயில் வண்டி ஓடவே யில்லை.
எங்கெங்கு பார்த்தாலும் தெருக்களில் சுமார் 20 அடி தண்ணீர் நிறைந்திருந்தபடியால் சிறு படகு மூலமாகத்தான் ஜனங்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். வெள்ளம் அதிகமாகும் என்று நன்றாகத் தெரிந்தபொழுதே பாரீஸ் பட்டணத்து முக்கிய போலீஸ் உத்தியோகஸ்தரான (Prefect de Police) ஷெர்புர், பிரெஸ்ட், தொன் கெர்க்கலே முதலிய துறைமுகங்களுக்குத் தந்தி கொடுத்து சிறு படகுகளைத் தகுந்த மனிதர்களோடு வரவழைத்தார். பாரீஸிலுள்ள படகுகளும் இவைகளும்தான் இப்போது தெருக்களில் நடமாடுவதற்கு உபயோகப்படுகின்றன.

அநேக தெருக்களில் தண்ணீர் முதல் மாடி வரைக்கும் வந்துவிட்டிருக்கிறது. அந்த வீட்டுக்குள் செல்ல வேண்டியவர்கள் படகுகளின் மேல் மாடியிலிருக்கும் ஜன்னலண்டை போய், அதற்குள் நுழைந்து உள்ளே குதிக்க வேண்டியதாயிருக்கிறது. அநேக வீடுகளில் ஜனங்கள் ஜன்னல் வழியாக அடிக்கடி போய்வருவதற்குத் தகுந்த சாரம் கட்டி வைத்திருக்கிறார்கள். வீட்டுக்குக் கீழ்பாகத்திலிருந்த ஆடு, மாடு, குதிரை முதலிய மிருகங்கள், பக்ஷி வகைகளெல்லாம் அடியோடு நாசமாய்விட்டன. இவைகளின் சவங்கள் தண்ணீரில் மிதந்து கிடக்கின்றன.
ழார்தென் தேப்ளாந்த் என்னுமிடத்திலிருக்கும் உயிர் மிருகங்களெல்லாம் தண்ணீர் தங்குவதினால் கஷ்டப்படுகின்றன. கூண்டிலிருக்கும் பாம்புகளும் கரடிகளும் தத்தளிக்கின்றன. ஆனால், அங்கு சீக்கிரத்தில் நீர் வடிந்து விடும்.
தின்பண்டங்களின் விலை வெள்ளத்தினால் அதிகமாய் விடவில்லை. படகில் ஏறிப்போய் வீடுகளில் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூபாயிக்கு ஆறு காசு விகிதம் விலை உயர்த்தப்பட்டது. சில பாகங்களில் ரொட்டி சுடுபவர்கள் அடுப்புகளில் தண்ணீர் நிறைந்துவிட்டபடியால் தண்ணீர் எட்டாத இடங்களிலிருக்கும் ரொட்டிக் கிடங்குக்காரர்கள் தங்கள் அடுப்பில் ரொட்டி தட்டிக் கொள்ளும்படி இவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். வெளியில் எப்பொழுதும் பனி பெய்துகொண்டே இருந்தது.
ராணுவ உத்தியோகஸ்தர்களும், ராணுவச் சேவகர்களும் ஓச்சல் ஒழிவில்லாமல் ஜனங்களுக்கு ஓர் ஆபத்தும் நேரிடாவண்ணம் இரவும் பகலும் இங்குமங்கும் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஓர் ஆஸ்பத்திரியில் தண்ணீர் வரக் கண்டு அங்கிருந்த நோயாளிகளை யெல்லாம் மெதுவாக எடுத்துக்கொண்டு தகுந்த இடத்தில் கொண்டுபோய் விட்டார்கள்.
வெள்ளத்தினால் பெருத்த கஷ்டம் பாரீஸில் ஒரு பாகமாகிய ஆல்போர்வீல் என்னுமிடத்தில்தான். அங்கு தண்ணீர் சுமார் 25 அடி ஆழம் வரைக்கும் தங்கிற்று. அங்கு சுமார் 18,000 பேர்கள் தண்ணீரால் சூழப்பட்டுத் தம்தம் வீடுகளை விட்டு வெளியில் வர முடியவில்லை. இவ்விடத்தில் அநேக படகுகள் சென்று சுமார் 9,000 ஜனங்கள் வரைக்கும் மேல் ஜன்னல்கள் வழியாக இறங்கச்செய்து தப்பித்து விட்டனர். மற்றவர்கள் அங்கிருக்கும் ùஸாத்துகளைக் காக்கும் பொருட்டு வெளியில் செல்ல ஒப்புக்கொள்ளவில்லை. தங்களுக்கு என்ன கஷ்டம் நேர்ந்தாலும் தாங்கள் அங்கே யிருப்பதாகப் பிடிவாதம் செய்கிறார்கள்.

இதற்குத் தகுந்தாற்போல் இந்த ஆபத்து காலத்தில் அநேக அபாஷ் என்னும் திருடர்கள் இருட்டில் படகு போட்டுக் கொண்டு போய் காலி வீடுகளையும், கொஞ்சம் பேர்களிருக்கும் வீடுகளையும் கொள்ளையடிக்கிறார்கள்.
இந்தக் கொள்ளைக்காரர்களைப் பிடித்து நியாயஸ்தலத்தில் விசாரணைக்குக் கொண்டுவருவது இப்பொழுது அசாத்திய மாகையால், அவர்களை உடனே தண்டிக்கப் பின்வரும் விளம்பரத்தை அதிகாரிகள் செய்திருக்கிறார்கள்.
“”அனுதாபமே காட்டக்கூடாது. ஆல்போர்வீலிலும் அதைச் சுற்றியிருக்கும் வீடுகளிலும் ராணுவச் சேவகர்கள் காபந்து செய்து வருகிறார்கள். அவர்களுக்குக் கொடுத்திருக்கும் கண்டிப்பான உத்தரவானது “கொள்ளை யடிக்கும்’ அபாஷ்களை உடனே சுட்டுவிட வேண்டியது”. இவ்வளவு கண்டிப்பான உத்தரவில்லாவிட்டால் அச்சமயத்தில் பந்தோபஸ்து செய்வது கஷ்டம்.
ஷான்ஸ்எலிúஸ என்னுமிடத்திலும் சிறிது தண்ணீர் ஏறிக்கொண்டு வருகிறது. அங்கிருக்கும் ஜனங்கள் மண்ணினாலும், சிமெண்ட் சுண்ணாம்புகளினாலும் சுவர் போட்டுத் தண்ணீரைத் தடுத்துக் கொண்டு வருகிறார்கள். லூவர் என்னும் அரண்மனைக்கு ஓர் ஆபத்தும் நேரிடாவண்ணம் பாதுகாக்கப்படுகிறது.
இந்த பாரீஸ் நகரத்தார் எப்பொழுதும் தங்கள் புன்சிரிப்பை விட்டுவிடுகிறதில்லை. தெருக்களில் படகுகள் போகும்பொழுது பார்த்து சிரித்த முகத்துடன் “”இந்தக் காட்சியைக் காண நாம் வெனிஸ் நகரம் போகவேண்டுமென்றிருந்தோம்; அது இங்கேயே வந்துவிட்டபடியால் நாம் இனி அங்கு போக வேண்டியதில்லை” என்கிறார்கள்.
வெள்ளத் தண்ணீர் ஊரெல்லாம் பரவி, குடிக்கும் நீரைக் கெடுத்துவிட்டபடியால் ஜனங்களெல்லோரும் தண்ணீரைக் காய வைத்துக் குடிக்க வேண்டுமென்றும், கறிகாய்களை நன்றாக வேகவைத்துச் சாப்பிடும்படியும் அதிகாரிகள் விளம்பரம் செய்திருக்கிறார்கள். நீர் வடிந்த உடனே வீட்டுக்குள் போவதாயிருந்தால் அங்கு அடைந்திருக்கும் சேறை நன்றாக வாரிவிட்டு சுண்ணாம்பு பூசி பிறகு வாசம் செய்யும்படி கேட்டுக்கொள்ளுகிறார்கள்.

ஜனங்களுக்கு இப்பொழுது நேர்ந்திருக்கும் விபத்தில் உதவி புரியும் பொருட்டு அநேக கனவான்கள் நன்கொடை செய்திருக்கிறார்கள். பத்திராதிபர்கள் மூலமாக நன்கொடை ஜனவரி மாதம் 28-ந் தேதி வரைக்கும் சேர்த்தனுப்பியது 1036302 பிராங்குகள். நன்கொடை செய்ய வேண்டியவர்கள் கீழ்க்கண்டிருக்கும் விலாசத்திற்கு அனுப்பலாம்.
Le Syndicat, 37, Rue Chateaudun, Paris.
நேற்றைய வரையில் பாரீஸ் வெள்ளத்தைக் குறித்து வந்த தந்திகளை யெல்லாம் நமது தந்திப் பத்தியில் பிரசுரித்திருக்கிறோம். பின்னிட்டு வந்த தந்திகளால் பாரிஸின் நிலைமை மெத்தப் பயங்கரமாய் இருக்கின்றது. úஸன் ஆற்றில் இன்னும் வெள்ளம் அதிகரித்து வருகிறது. அனேக வாராவதிகளின் கைப்பிடிச் சுவர்களுக்கு மேல் சில அடி உயரம் வெள்ளம் ஓடுகிறது. மழை ஓய்ந்தபாடில்லை. இராக் காலங்களில் பனிக்கட்டிப் புசலடிக்கிறது. பகலில் அந்தப் பனிக்கட்டிகள் உருகி ஆற்றில் வெள்ளம் அதிகரிக்கிறது. இந்தப் பனிக்கட்டிக் காற்று மழையால் இங்கிலாந்திலும் பிரான்ஸிலும் பல தந்திகள் தடைபடுத்தப்பட்டிருக்கின்றன.
பிஸ்கே வளைகுடாக் கடலில் இந்தப் பனிப்புசல் அடித்ததால் ஒரு பிரெஞ்சு டார்பிடோ படகு கரையின் பேரில் மோதி விட்டது. அதிலிருந்தவர்கள் உயிர் பிழைத்தார்கள். இஸ்பானியா, பிரான்ஸு துறைமுகங்களில் பல படகுகள் முழுகிப் போய்விட்டன.
பாரீஸ் நகரத்தில் ஜனங்களுக்கு இன்றுவரையில் சுகமாகவே ஆகாரம் கிடைத்து வந்தது. உணவுகள் ரயில் மார்க்கமாயும் படகு மார்க்கமாயும் வந்து கொண்டிருந்தன. இப்பொழுது வெள்ளம் அதிகமாய் பரவிப் பூமியை மூடிவிட்டபடியால் உணவுகளைப் பாரீஸுக்குள் கொண்டுபோக அஸாத்தியமாய் விட்டது. ரூ – தே – தொமீனிக் எனும் பாரீஸ் நகரத்தின் ஒரு பாகத்தில் ஜனங்கள் சென்ற புதன்கிழமை முதல் ஆகாரமில்லாமல் வெள்ளத்தால் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.
ஆகார விஷயமாக முதல் கலகமும் உண்டாய் விட்டது. பவுபோர்க் டெம்பில் எனும் ஒரு பாகத்தில் உணவின் விலையை உயர்த்திய இரண்டு ரொட்டிக் கிடங்குகள் பசியால் பீடிக்கப்பட்டு நிராசையாய் இருந்த ஜனங்களால் கொள்ளை யடிக்கப்பட்டன. ஐந்து வெடிகள் கலகக்காரர்களின் பேரில் ஒரு ஜன்னல் வழியாய்ப் பிரயோகிக்கப்பட்டன. ஒரு ஸ்திரீ காயமடைந்தாள்.

உணவுப் பொருள்கள் விலை யதிகமாய் விட்டபடியால் ஊரெங்கும் குழப்பமாய் இருக்கிறது. கலகங்கள் எங்கே நடக்கிறதோ என்று அதிகாரிகள் பயப்படுகிறார்கள். úஸன் கரையோரத்தில் போட்டிருந்த ஆர்லியன்ஸ் இருப்புப் பாதை இடிந்து விழுந்து போய்விட்டது. ஜனங்களின் துக்கம் சொல்லி முடியாது.
ஆயிரக்கணக்கான ஜனங்களுக்குத் தர்ம சாப்பாடு போட்டு தர்மத்திற்கு இடம் தரப்பட்டிருக்கிறது. தொத்துக் கொள்ளை வியாதி எங்கே உண்டாய் விடுகிறதோ என்ற பயம் இன்னும் அதிகரித்து வருகிறது. சாக்கடைக ளெல்லாம் எல்லாப் பாகத்திலும் உடைத்துக் கொண்டு ஓடுகின்றன.
மழை இன்னும் விட்டபாடில்லை. வானமே ஓட்டையாய் விட்டதுபோல் பொழிந்து கொண்டே இருக்கிறது. ஒரு வியாபாரமாவது நடைபெறவே யில்லை. தங்கள் தங்கள் காரிய ஸ்தலத்திற்குப் போக ஒருவருக்கும் ஸரிப்படவே யில்லை. காரிய ஸ்தலங்களுக்குப் போகலாமென்றால் வெள்ளத்தால் தடை.
அதையும் தாண்டிக் கொண்டு போனால் எந்த நிமிஷத்தில் புசல் மழையினால் வெள்ளம் அதிகப்பட்டுவிட்டால் வீட்டிலுள்ள பெண்டு பிள்ளைகளுக்கு அபாயம் வந்து விடுகிறதோ அல்லது அவர்களை உயிர் தப்ப வைத்து அப்பால் கொண்டு போவது அஸாத்தியமாய் விடுகிறதோ என்று இதே ஸதா எல்லாருக்கும் கவலையாய் இருக்கிறது.
பாரீஸில் நடுப்பட்டணம் வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெரிய ஏரிபோல் காணப்படுகிறது. சரித்திரங்களிலும் தற்காலத்திலும் பிரஸித்தி பெற்ற பல கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டு விட்டது.
பிளாஸ் தெ-லா கொன்கொர்து, ஷான்ஸ் எலிúஸ இவற்றின் கோபுர வாசல்களைப் பலமாக மண், கல் முதலியவைகள் போட்டு அடைத்து விட்டார்கள். ùஸன்த் லொஜோ எனும் பாகமானது பலமான ஒரு பகுதி சேனையாட்களால் காக்கப்பட்டு வருகிறது. சில தெருக்களில் வெள்ளம் பெருகுவதும் குறைவதுமாய் இருக்கிறது. வீடுகளெல்லாம் இடிந்து விழுந்து கொண்டும் விழுந்து விடும்போலும் இருக்கின்றன.
ஸ்ரீ மகா நெப்போலியன் சேனா வீரர்களில் காயம் பட்டவர்களுக்காகக் கட்டிவைத்த ஒத்தேல் – தெùஸன் வலித் என்னும் கட்டிடத் தருகில் தெருக்களில் ஏழடி ஜலம் நிறைந்திருக்கிறது.

கிராண்ட் விலியர்ஸ் எனும் பெரிய அணைக்கட்டு உடைத்துக் கொண்டு அந்தப் பாகமெல்லாம் அநேக மைல் விஸ்தீர்ணமுள்ள ஒரு பெரிய ஏரிபோல் காணப்படுகிறது. ஜனங்களில் பெரும்பாலர் ஓடி உயிர் தப்பி விட்டார்கள். மற்றவர்கள் வெளியே போக முடியாமல் தங்கள் வீட்டிலேயே அடைபட்டிருக்கிறார்கள்.
பிளாஸ் – தெ – லோபேராவிலும், புல்வார்ட் – தெ – காப்புஸன்னிலும் வெள்ளம் சற்று தணிந்திருக்கிறது. ஆனால் விளக்குக் கம்பங்களும் மரங்களும் சில கட்டிடங்களும் விழுந்து கொண்டே இருக்கின்றன. பிரதான நகர சுரங்கக் குழாய் இருப்புப்பாதை யுள்ளிருந்து பேரிரைச்சலுடன் ஜலம் வெளியே வந்து விழுந்து கொண்டிருக்கிறது.
இவ்வளவு நாசகரமான வெள்ளத்திற்கும் காரணம் என்னவென்றால் இதுவரையிலும் இல்லாத அவ்வளவு விசேஷமாய் பனிக்கட்டியுடன் இடைவிடாமல் மழை பெய்ததுதான்.
இந்த விபத்தால் கஷ்டப்படுகிறவர்களின் ஸஹாயத்திற்காகக் கிறிஸ்தவர்களின் பரமாசிரியரான மஹாகனம் பொருந்திய போப் என்பவர் ஒரு பெருந்தொகையான பணம் ஸஹாயம் செய்திருக்கிறார். லண்டன் மேயரும் ஒரு ஸஹாய நிதி ஏற்படுத்தி இருக்கிறார். இதற்குப் பிரிட்டிஷ் சக்கரவர்த்தி 1000 கினியும் அவருடைய பத்னி அலக்ஸாண்டிரா சக்ரவர்த்தினி 1000 பவுனும் நன்கொடையளித்தனர் என்று கேட்டு ஸந்தோஷிக்கிறோம்.
இந்தியாவிலும், வைஸிராய் முதலானவர்களும், ஸ்வதேச சிற்றரசர்களும், கனதனவான்களும் முக்கியமாய் நமது புதுவை, காரைக்கால், ஏனாம், மாஹி, சந்திரநாகூர் வாஸிகளும் ஒரு பெரிய நிதி சேர்த்து இந்தக் கஷ்ட நிலையில் பிரான்ஸு ஜனங்களுக்கு உதவி செய்தால், ரொம்ப மஹோபகாரமாய் இருக்கும். பிரான்ஸின் தலைநகரான கீர்த்தி பெற்ற பாரீஸின் பெருவெள்ள அபாய நிலைமையை இம்மட்டுடன் கருணைக் கடலான கடவுள் நிறுத்துவாராக! நமது ஆலயங்களில் இந்தக் கஷ்ட நிவாரணத்திற்காக அவரவர்கள் கடவுளைத் தொழுது பிரார்த்திப்பாராக!

Source…..www.dinamani.com

Natarajan

Leave a comment