உழைப்பே உன்னதம்
………………..
உழைத்து பிழைத்திடு ….நீ பிழைக்க உழைத்திடு ..இது
ஆன்றோர் நல் வாக்கு ! “உழைப்பே பிழைப்பானது ” நம்மில்
ஒருவனுக்கு மட்டும் ! நாம் பிழைக்க அவன் உழைப்பான்
எப்போதும் ! அவன்தான் உழவன் ! அவன் உழைப்பே
உன்னத உழைப்பு ! உனக்கும் எனக்கும் உண்ண அமுது
தரும் உழைப்பு ! நாம் உயிர் பிழைக்க அவன் தரும்
உன்னத உழைப்பு ! அவன் சேற்றில் கால் வைக்க மறுத்தால்
சோற்றில் கை வைக்க முடியுமா நம்மால் ? நமக்காகவே
வாழும் உழவன் இன்றி பிழைக்க முடியுமா நாம் ?
தேன் இனிக்கும் பொங்கல் நன்னாளாம் உழவர் திருநாளில்
வாய் மணக்க வாழ்த்தும் சொல்லி புதுப்பானை பொங்கல்
உலை வைக்கும் நாம் , வைக்கலாமா உலை உழவனின்
உழைப்புக்கும் பிழைப்புக்கும் ? எடுத்தேன், கவிழ்த்தேன்
என்று காரணம் நூறு சொல்லி மீத்தேன் வாயு தடம் பதிக்க
“வேண்டும் உன் மண் இனி எனக்கு” என்னும் நம் வாதம்
நம்மை நாமே வதம் செய்ய நாம் எடுக்கும் முதல் அடி !
எண்ணிப் பார்க்க வேண்டும் நாம் …தடம் பதிக்க அவன் மண்ணை
மீத்தேனுக்கு தாரை வார்த்துக் கொடுக்கத் துடிக்கும் நம்
கண் முன்னால் முடியப் போவது உழவனின் உன்னத உழைப்பும்
பிழைப்பும் மட்டுமா ?
இல்லை … அவன் உழைப்பில் இன்று வரை பிழைத்துக் கிடக்கும்
நம் வாழ்வும் சேர்ந்தா ?
தீர யோசிப்போம் நாம் … நல்ல தீர்வு ஒன்று காணும் வரை !
Natarajan….in http://www.dinamani .com on 9 th may 2016