இசைகுயிலுக்கு ஓர் நினைவாஞ்சலி!

m

அனுதினம்  பாரதத்தை  தனது  சுப்ரபாதத்தால் துயிலெழுப்பும் இசைக் குயில் எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களின் நூறாவது பிறந்த நாள் இன்று.

தமிழிசை,  பட்டிமன்றம்,  சொற்பொழிவு,  ஆன்மிக  இலக்கியம்  என்று பல்துறையில் முத்திரை பதித்திருக்கும்  முனைவர்  பேராசிரியை சரஸ்வதி ராமநாதன், “அம்மா’ என்று அவர் அழைக்கும்  இசை அரசி எம்.எஸ் முன்னிலையில் தமிழிசைப்  பாடல்கள் பாடி எம்.எஸ் அம்மாவின் பாராட்டுப் பெற்றவர்.  செட்டிநாட்டு வட்டாரங்களில்  கச்சேரி  செய்ய எம்.எஸ் வரும் போதெல்லாம்  முன் வரிசையில் இடம் பிடித்து, எம். எஸ். அவர்கள் பாடி, கேட்டு, அவரையே படித்து வளர்ந்தவர். சென்னை கம்பன் கழகத்தின் “கம்பன் அடிப்பொடி’ விருதினை   சரஸ்வதி  ராமநாதனுக்கு   வழங்க  பரிந்துரைத்ததே எம்.எஸ். அம்மாதான்  என்கிறார் முனைவர்  சரஸ்வதி ராமநாதன்.

எம். எஸ்  அம்மா  குறித்த  தகவல்களை  அவர்  பகிர்ந்து கொண்டதிலிருந்து;

“மதுரை  சண்முகவடிவு சுப்புலட்சுமி தான் எம். எஸ். சுப்புலட்சுமி  என்றாகியது.  அவரது அம்மா  சண்முகவடிவு  நன்றாக வீணை வாசிப்பார். ஒரு முறை  மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி அரங்கில் சண்முகவடிவு அம்மாள் வீணை கச்சேரி நடந்து கொண்டிருந்தது. சண்முகவடிவு என்ன நினைத்தாரோ  வீணை வாசிப்பதை  நிறுத்திவிட்டு, “அம்மா  குஞ்சம்மா  இங்கே வா…” என்று மகள் சுப்புலட்சுமியை அழைத்தார். வெளியே  சுப்புலட்சுமி என்றாலும், வீட்டில் குஞ்சம்மாள் என்றுதான் அவரை அழைப்பார்கள்.  பத்து வயது சிறுமியான குஞ்சம்மாள் அம்மா மேடைக்கு அழைத்ததும் “குடு குடு’ என்று  மேடை ஏறி நிற்க.. “சபைக்கு நமஸ்காரம் செய்திட்டுப் பாடு” என்று சண்முகவடிவு சொல்ல… மேடைப் பயம்,  சபைக் கூச்சம் ஏதும் இன்றி இந்துஸ்தானி ராகத்தில் “ஆனந்த ஜா…’  என்ற மராட்டியப் பாடலை  அருமையாகப்  பாட….  கச்சேரிக்கு வந்திருந்த அனைவரும் கை  தட்டி ரசித்தார்கள்.  இதுதான் எம்.எஸ் அம்மாவின் முதல் மேடை  அனுபவம்.

இன்னொரு  தருணத்தில்,  சண்முகவடிவு  மகள் எம்.எஸ்ஸுடன்  சென்னை சென்றிருந்தார். சண்முகவடிவு  வீணை  மீட்ட அதைப் பதிவு செய்து இசைத்தட்டாக  வெளியிட, ’டுவின்’  இசை நிறுவனம்  சென்னைக்கு அழைத்திருந்தது.  அங்கேயும்  அம்மா கேட்டுக் கொண்டதன் பேரில்  எம். எஸ். பாட…  இசை நிறுவனத்தார்  இப்படி  ஓர்  இனிமையான குரலா.. என்று ஸ்தம்பித்து நின்றனர்.  இசைப் பொக்கிஷத்தை   அடையாளம் கண்டு கொண்டு அதை அங்கீகரிக்கும் விதமாக,  உடனே,  “மரகதவடிவும் செங்கதிர்வேலும், விதிபோலும் இந்த…’  என்னும் இரண்டு பாடல்களை  எம். எஸ்ஸை  பாடச் சொல்லி  இசைத்தட்டாக  வெளியிட்ட பின்னர்தான் வேறு வேலை பார்த்தனர். இசைத்தட்டு  ஸ்டிக்கரில், பாடியிருப்பது  “மிஸ். சுப்புலட்சுமி, வயது பத்து’ என்று அச்சிட்டிருந்தனர்.

எம்.எஸ் அம்மாவின்  அதிகாரப்பூர்வ மேடைக் கச்சேரி  1935 -ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது அவருக்கு வயது பத்தொன்பது. மிருதங்க ஜாம்பவான் புதுக்கோட்டை  தட்க்ஷிணாமூர்த்தி பிள்ளையின் மணிவிழாவின் போது அம்மாவின் சங்கீதக் கச்சேரி அற்புதமாக  அரங்கேறியது.  அன்றைய மைசூர் சமஸ்தானத்தின்  அரச  சபையில்  திருக்கோகர்ணம்  ரங்கநாயகி  அம்மாள் மிருதங்கம் வாசிக்க  எம்.எஸ். பாட… தென்னகம் முழுவதையும்  அவரின் குயில் குரல் இனிமை, தென்றலாகத்  தழுவி சிலிர்க்க  வைத்தது.

தெய்வீக அழகும்,  சுருண்ட முடியும்,  பாடும் போது  பாவங்களை  முகத்தில் நர்த்தனம்  ஆடவிடும்  திறமையை  அம்மாவிடம் கண்ட  திரைப்பட இயக்குநர் கே. சுப்ரமணியம் அம்மாவை  தனது சொந்தப் படமான  “சேவாசதனம்’ படத்தில் கதாநாயகியாக்கினார். 1936-இல் அம்மாவின்  திரையுலகப் பிரவேசம்  நடந்தது. அப்போது  பாடல்கள்  சிறப்பாக அமைந்தால் படம் வெற்றி பெறும் என்ற நிலைமை.   “சேவாசதனம்’ பாடல்கள் பிரமாதமாக அமைந்திருந்ததால் படம்அமோக வெற்றி பெற்றது. “சேவாசதனம்’  படத்தில் எம்.எஸ். பாடிய “மா ரமணன்,  உமா ரமணன்’,  “சியாம சுந்தர கமலவதன’, “ஆதரவற்றவர்க்கெல்லாம்’ போன்ற  பாடல்களைப்  பாடாத,   முணுமுணுக்காத  ஆண் பெண்  அன்று தமிழகத்தில் இல்லை.  அந்த அளவுக்கு  அந்தப் பாடல்கள் ஹிட்டாகியிருந்தன. இந்தப் படம் மூலமாக  அறிமுகமான  தேச விடுதலை தியாகி டி.சதாசிவம் அவர்களை  எம். எஸ். அம்மா 1940 -இல்  திருமணம் செய்து கொண்டார்.

“சகுந்தலை’ படத்தைத் தயாரித்த  ராயல் டாக்கீஸ்  நிறுவனத்தினர் எம்.எஸ்ஸை தங்களது புதிய தயாரிப்பான  “சாவித்திரி’  பட  நாயகியாக  நடிக்க வைக்க விரும்பினர்.  திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்று  எம். எஸ் வந்த வாய்ப்பை ஏற்க   மறுத்துவிட்டார்.  சில நாட்கள்  கழித்து, கல்கி  இதழைத் தொடங்குவதற்கு முதலீடு தேவைப்பட்டதால், “சாவித்திரி’ படத்தில் நடிக்கிறேன் என்று தகவல் அனுப்பினார்.

“நீங்கள்  நாயகியாக நடிக்க சம்மதிக்காததால் மராத்தி நடிகை  சாந்தா ஆப்தேயை  நாயகியாக  போட்டுவிட்டோம்.  நாரதர் வேடத்திற்கு  யாரையும் தேர்வு செய்யவில்லை.  படத்தில் நாரதருக்குத்தான் அதிக பாடல் காட்சிகள். நீங்கள்தான்  நாரதராக நடிக்க வேண்டும்’ என்று தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டார்.  கணவர் சதாசிவம்  “ம்ம்.. தாராளமாக நடி” என்று உற்சாகப்படுத்தினார்.  எம். எஸ்ஸும்  உடனே  சம்மதித்தார். இந்த செய்தி வெளியே தெரிந்ததும்,  பட வெளியீட்டாளர்கள்  படத்தை வெளியிடும் உரிமையைப் பெற  தயாரிப்பாளரை மொய்த்து  விட்டார்கள்.  பட உரிமையும் நல்ல விலைக்கு விற்பனையானது.

எம்.எஸ்ஸுக்கு  சம்பளமாக கிடைத்த நாற்பதாயிரத்தை  அப்படியே கல்கி இதழ் தொடங்க  தந்துவிட்டார்.

1946-ஆம் ஆண்டு  எம். எஸ் நடித்து  வெளியான “மீரா’ திரைப்படம் தமிழகத்தைக் கொள்ளைக் கொண்டது. கல்கி  எழுதிய “காற்றினிலே வரும் கீதம்’, “கிரிதர கோபாலா’ போன்ற  பாடல்கள்  தமிழக மக்களின்  செவிகளில் தேனைச் சொரிந்தன.  அந்த கானங்களின்  இனிமையில் தமிழகம் மயங்கிப் போனது. தமிழில்  வெற்றி கண்ட  “மீரா’  ஹிந்தியிலும்  “மீரா’வாகவே  தயாராகி  அகில இந்திய சாதனைப்  படமானது. பிரதமர் ஜவஹர்லால் நேரு, எம். எஸ். அவர்களை ’இசை அரசி’ என்று அழைக்க வைத்தது மட்டுமல்லாமல், இந்த இசை அரசிக்கு முன் நான் வெறும் பிரதமர் மட்டுமே.. என்று  நெகிழ்ந்து பாராட்டி, எம். எஸ். அவர்களின் குடும்ப நண்பர் ஆனார் நேரு.

சபர்மதி ஆசிரமத்தில் அண்ணலின் முன்னிலையில்  அம்மா  பல முறை பாடியுள்ளார்.  நாடு விடுதலையான 1947- ஆம் ஆண்டு  வந்த  காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 -இல் எம். எஸ். பாட வேண்டும்  என்று காந்தி விரும்ப.. தான் பாடிய பாடலை  ஒலி நாடாவில்  பதிவு செய்து அம்மா அனுப்பி வைத்தார். பிரபல  காந்தி அஞ்சலி பாடல்களான  எம். எஸ். பாடிய   “வைஷ்ணவ ஜனதோ’, “ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடல்கள்  அண்ணல் காந்தியை வென்ற பாடல்கள். காந்தியின்  மறைவிற்குப் பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் பாடல்களாகிவிட்டன.

Source…By – பிஸ்மி பரிணாமன்  in http://www.dinamani.com

Natarajan

 

Leave a comment