மழை நீர் போல …
——————–
வறண்டு கிடக்கும் பூமி …வானம் திறக்குமா கண் ?
மேலும் கீழும் பார்ப்பது உழவன் மட்டுமல்ல இன்று !
அடுக்கு மாடி கட்டிடக் குவியல் கூட்டில் குடி இருக்கும்
நகரத்துப் “பறவைகளும்” மழை தேடி வானிலை
அறிக்கையை காலையும் மாலையும் அலசும் அவலம் இன்று !
மழை நீரை முத்தமிட துடிக்கும் வறண்ட பூமி நனையுது
மழை நீர் போல பெருகி வரும் உழவன் அவன் கண்ணீரில் !
குடிக்க நீர் இன்றி தவிக்கும் அடுக்கு மாடி “பறவைகள்”
வழி மேல் விழி வைத்து காத்திருக்குது தினமும் ஒரு
லாரி தண்ணீருக்கு !
தண்ணீரும் பணமாக மாறும் காலம் இது ..மழை
நீர் சேமிப்பின் மதிப்பு உணராத மனிதன் கொடுக்கிறான்
நீருக்கு ஒரு விலை இன்று !
மழை வெள்ளம் வரும் நேரம் “இது என்ன பேய் மழை”
என்று அலறிய மனிதன் குரல் கேட்டு வானமும்
மனம் உடைந்து “கண்ணீர் ” விடவும் மறந்து போனதோ ?
தினம் தினம் தண்ணீர் தண்ணீர் என்று மனிதன்
கண்ணீர் விட்டு என்ன பயன் இன்று ?
மாற வேண்டும் மனிதன்… மாற்றி யோசிக்கவும்
வேண்டும் …வானமும் மகிழ்ந்து தன் ஆனந்தக்
கண்ணீரால் நனைக்க வேண்டும் இந்த பூமியை !
மனிதனுக்கும் புரிய வேண்டும் எந்த நீர்
ஆனாலும் மழை நீர் போல ஆகுமா என்று !
Natarajan….
in http://www.dinamani.com dated 13th August 2017