சண்டிகையை வழிபட்டால், நோய்களைத் தவிர்க்கலாம். சண்டிகை என்பவள் சாதாரணமானவள் அல்ல. 18 கைகளை உடையவள்; ஆயுதம் தரிப்பவள். மகா வீரியம் கொண்டவள். எப்பேற்பட்ட துக்கங்களையும் துாக்கி எறிபவள். இவளை வழிபடுவதற்கான காலமாகவே, நவராத்திரி ஏற்படுத்தப்பட்டது. மகாளய பட்சம் முடிந்த அடுத்த தினத்திலிருந்து கொண்டாடினால், நோய் வரும் முன் விரட்டலாம்.
வட மாநிலங்களில் நவராத்திரி, துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்க விரும்புபவர்கள், எதிலும் வெற்றி வாகை சூட விரும்புபவர்கள், அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க விரும்புபவர்கள், சுக வாழ்வு வாழ விரும்புபவர்கள், நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என, வியாசர் சொல்கிறார்.நவராத்திரி, பெண்களுக்கு மட்டுமே உரிய பண்டிகை என நம்பப்படுகிறது. ஆனால், மேலே சொன்ன பராக்கிரமங்களை பெரும்பாலும் விரும்புபவர்கள் ஆண்களே. எனவே, அவர்களுக்கு இந்த பண்டிகை மிகவும் முக்கியம்.
நவராத்திரி விரதம், பிரதமையில் துவங்கி நவமியில் முடிகிறது. இந்த நாட்களில், அம்பிகையை பூஜித்தால், அம்மை நோய் வராது என்றும், கிரக தோஷங்கள் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது. எதிர்மறையான விளைவுகள் எதுவும் வாழ்க்கையில் அண்டாது.
அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றை, பெண் வடிவமாக கருதுவது நம் மரபு. கல்லையும், பெண்ணுருவாக்கி வழிபடுவது, நம் கலாசாரம். இவை இப்படி இருக்க, பெண் என்றால் பலவீனம் என நினைத்து, சுயஅழிவை தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான், நவராத்திரி விழாவின் துவக்கம். அன்னை பராசக்திக்காக, ஒன்பது நாட்கள் இரவில் தொடர்ந்து செய்யப்படும் பூஜையாகும். பொதுவாக, நவராத்திரி பூஜை, ஆண்டிற்கு நான்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்பது புராண வரலாறு.
நான்கு வகை நவராத்திரி
ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் – வராஹி நவராத்திரி
புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் – சாரதா நவராத்திரி
தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி – சியாமளா நவராத்திரி
பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் – வசந்த நவராத்திரி
இந்தியாவில், புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்கு பின் வரும், பிரதமை நாள் முதல் ஆரம்பிக்கும் சாரதா நவராத்திரி பெரும்பாலானோரால் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் பிறந்தால், புது வாழ்வு அமையும் என்பது புதுமொழி.
அரிசி மாவு கோலம்
சுண்ணாம்பு மாவு பயன்படுத்தாமல், அரிசி மாவு மற்றும் செம்மண் கோலமிட்டால், குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். நவக்கிரக கோலம் போட்டால், அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.இரவு, 7:00 மணி முதல், 9:30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.
பூஜையில் கலந்து கொள்ளும் கன்னிப் பெண்களுக்கு புதிய ஆடை, பல விதமான மங்கலப் பொருட்கள், மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன், பொட்டு என, அளிப்பது நன்மை தரும்.
ஒன்பது நாட்களின் மகிமை
இந்த ஒன்பது நாட்களும், பராசக்தி, ஒவ்வொரு தேவியின் வடிவில், ஒரு வயது முதல் 10 வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்கிறாள்.கன்னியின் வயதிற்கேற்ப, ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக ஒன்பது நாள் ஒன்பது கன்னிகைகளையும், ஒன்பது சுமங்கலிகளையும் பூஜை செய்வது, அளவிட முடியாத புண்ணியம் உண்டாகும்
குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா
என்ற பெயர்களால் ஒன்பது நாட்களும் பூஜிக்கப்பட வேண்டும்.அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை, உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. பராசக்தி, அசுரர்களுடன் சண்டையிட்ட போது, தேவர்கள், பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான், ‘பொம்மை கொலு’ வைப்பதாகவும் சொல்வதுண்டு.
இந்த ஒன்பது நாட்களில், தினமும், பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். பகலில், 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.தசரதனின் மகன் ராமர் தான், முதன்முதலில் கொண்டாடினார். அதன் பின் தான், அவருக்கு சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று கூறப்படுவதும் உண்டு.
Source….www.dinamalar.com
Natarajan