பேர் ஆசை ….பேராசை !!!

பத்திரிகைத் துறைக்கு வந்த புதிது… இளம் வயது. நம் பெயரை அச்சில் ஏதேனும் ஒரு படைப்பிலேனும் பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி மனதில் நிறையும். உணர்ந்து பார்த்தவர்களுக்கு அதன் அருமையும் பெருமிதமும் புரியும்.
வயது 23. அதுவரை பெரிதாக எதுவும் எழுதி அச்சில் வந்துவிடவில்லைதான். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வருடாந்திர தொகுப்புகளில் கவிதைகளும், வானியல், கணிதம் குறித்த கட்டுரைகளும் வந்திருந்தன. ஆனால் இதழ்களில் அப்படி ஏதும் நான் அதுவரை முயற்சி செய்யவில்லை.
அப்படியாக இதழியல் துறைக்கு வந்த புதிது என்பதால், எனக்குள்ளும் நம் எழுத்தை அச்சில் பார்க்க மாட்டோமா என்று இருந்தது. வழக்கம்போல் சிறு கவிதைகள் எழுதினேன். இரு வரிகளில் அமைந்த புதுக் குறள் எனும் கவிதை எழுதினேன். அவற்றில் தளை தட்டாமல் குறள் வெண்பாவெல்லாம் அப்படி ஒன்றும் சரியாக அமைந்திருக்கவில்லை என்பது பின்னாளில் புரிந்தது. இருந்தாலும் கருத்தொடு நின்றது.
அப்படி ஒரு புதுக்குறள் கவிதையை கணினி அச்சுக் கோர்ப்பவர் அடித்து, மெய்ப்பு திருத்த (புரூஃப் பார்க்க) வைத்திருந்தார்.
அப்படியாக அச்சில் வந்த அந்தப் புதுக்குறள்..

kural
பொய்யர்தாம் என்றேனும் மெய்கூறின் அம்மெய்யும்
பொய்யெனக் கருதப் படும்.

 

 
நாகலிங்கம் என்று ஒரு பெரியவர். சினிமாத் துறை பழக்கமுள்ளவர். திரைக்கதைகளை செப்பனிட்டுத் தரும் பணியில் இருந்திருக்கிறார். அவரிடம் பேசியதில் அவர் பழுத்த அனுபவம் உள்ளவர் என்று எனக்குத் தெரிந்திருந்தது. அப்போதே அவருக்கு வயது 75ஐத் தொட்டிருந்தது.
இந்த மெய்ப்பைப் பார்த்தவர் வெடுக்கெனச் சிரித்தார். எனக்கோ, ஏதோ தவறு நேர்ந்துவிட்டதோ என்று உள்ளம் பதறியது. கலவரத்துடன் அவர் முகம் பார்த்தேன்….
சிரித்தபடியே என்னிடம் கேட்டார்…
“1330 குறள்களை எழுதின அவரோட பேர் என்ன தெரியுமா?” கேட்டார் சலனமில்லாமல்.
“திருவள்ளுவர்” என்றேன்.
“அது நாமாக வைத்த பெயர்… அவரோட பேர் என்ன தெரியுமா?”
“தெரியாது.”
“1330 குறள் எழுதின அவரே தன் பேரை எங்கயுமே சொல்லிக்கலை… நீ ஏதோ குறள்னு ஒண்ணு எழுதிட்டு…. அந்தக் கவிதை அச்சாகியிருக்கற 10 பாயிண்ட் லெட்டர் சைஸை விட பெரிதாக உன் பேரை 14 பாயிண்டில் போட்டிருக்கே….”
எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. வேதம்புதிது படத்தில் சத்யராஜ் கன்னத்தில் சிறுவன் அங்கயும் இங்கயும் அடித்து திருப்பும் சத்தமும் காட்சியும்தான் மனதில் ஓடியது.
எழுத வந்த துவக்கத்திலேயே பேர் ஆசையை விட்டுவிட்டேன். பேராசையையும்தான்! எழுத்தாளன் என்ற கர்வத்தை மூட்டை கட்டி பரண் மேல் போட்டு விட்டு, பத்திரிகையாளன் என்ற ஏணிப்படியாய் என்னை மாற்றிக் கொண்டேன். அந்தத் துவக்கம்… எனக்குள் பெரும் மாற்றத்தைத் தந்தது. அதற்குக் காரணமாய் அமைந்தவர் நாகலிங்கம் தாத்தா… அவரை நன்றியுடன் இப்போதும் நினைவு கூர்கிறேன்..!

செங்கோட்டை ஸ்ரீராம் in Dinamani ….Blog.dinamani.com

natarajan

” வருக வருக ஜய ஆண்டே … ”

வருக வருக ஜய ஆண்டு

சித்திரைக் கோடையில்
சூடான காற்றும்
மர நிழலில்
ஒய்வு கொள்ளும்!

மரநிழலும்
மரத்தடியில்
வெய்யிலைக் கண்டு
வெளிறிப் போகும்!

வெய்யிலில்
வேப்ப மரங்கள்
வியர்வைத்துளியாய்
பூக்களைச் சிந்தும்!

பூக்களாம் மகிழ்ச்சியை
நம் நெஞ்சில் பரப்பி
ஜயப் புத்தாண்டு
ஜயமே கொடுக்கும்!

 

source:::: A.V. Ramanathan  on 14..04 2014

natarajan

ஜயப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சித்திரை முதல் நாள் ….

ed17a-securedownload

சித்திரை  முதல் நாள் … தமிழ்  புத்தாண்டு பிறப்பின் முத்திரை பதிக்கும்  நன்னாள்

நித்திரை நீங்கி  முக்கனி  நாம் பார்க்கும் இனிய  நாள்  இந்த  நாள் …

விஷேட  வருடம்  விஜய  வருடம் ….நலம் பல  கொடுத்த  நல்ல  வருடம்

நன்றியுடன்  விடை கொடுப்போம்  ,  நாம் அதற்கு ….இனிதே

வரும்  ஜெய வருடமதை  இரு கரம் கூப்பி  வரவேற்ப்போம்  நாம்

அருமையான  ஒரு  வருடமாக  அது அமையட்டும்  நமக்கு

பெருமையும்   புகழும்  சேர்க்கட்டும்  நம்  நாட்டுக்கு …இறைவன்

அருள்  கிட்டட்டும்  தொடர்ந்து  நமக்கு   !!!

 

நடராஜன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

படித்து ரசித்தது …” மனம் தேடி தவிக்கிறது …”

 

வளர்ந்தாலும் உணவை
வாயில் ஊட்டிவிடும்
அம்மாவையும்

வரும்வரை வாசலிலேயே
தூங்காமல் காத்திருக்கும்
அப்பாவையும்

வாஞ்சøயாய்த் தலைகோதி
முத்தமிட்டு நெட்டி முறிக்கும்
பாட்டியையும்

டி.வி. ரிமோட்டுக்கு தினமும்
சண்டையிடும் அருமைத்
தம்பியையும்

ஊர்வம்பு பேசியபடியே
வீட்டைக் கூட்டிப் பெருக்கும்
கண்ணம்மாவையும்

“உன் கையாலே போணி பண்ணு’ என
உரிமையுடன் கேட்கும்
பூக்காரம்மாவையும்

மனம் தேடித் தவிக்கிறது…
அமெரிக்க தேசத்தின்
அந்நிய முகங்களிடையே….

– ஜி. ராஜி, சென்னை  in Mangaiyar Malar

natarajan

” ராமன் எத்தனை ராமனடி ” …!!!

 

ஆதிசங்கரர் முதல், அண்மைக் காலக் கண்ணதாசன் வரை அனை வராலும் பாடப் பெற்றவர் ஸ்ரீராமர்.

சித்த புருஷர்களிலேயே தலைசிறந்தவரான சிவவாக்கியர் ‘ஒளியதான காசி மீது’ என்ற பாடலில், ‘எளியதான ராம ராம ராம இந்த நாமமே’ என்று ராம நாமத்தின் மகிமையைப் பாடுகிறார்.

சென்னைக்கு அருகில் உள்ள மணலி என்ற ஊரில், ‘ராம நாடகக் கீர்த்தனை’ என்ற பெயரில் ராமாயணத்தைக் கீர்த்தனைகளாகவே எழுதிய அருணாசலக் கவிராயருக்கு, மணலி வள்ளல் கனகாபிஷேகம் செய்து வைத்த வரலாறும் உண்டு.

ஒரு சமயம், கவியரசர் கண்ணதாசன் கைகளில் ஒரு துண்டு பேப்பர் கிடைத்தது. அதில்…

பட்டாபிஷேகத்திற்குப் பின் நடந்த ஒரு நிகழ்ச்சி அச்சிடப்பட்டிருந்தது.

ராமர், லட்சுமணனை அழைத்து சீதையைக் கொண்டு போய், காட்டில் விட்டு விட்டு வரும்படி உத்தரவிட்டார். அப்படியே செய்துவிட்டு லட்சுமணன் திரும்பிய போது…

ராமர் அழுதுகொண்டிருந்தார். லட்சுமணன் திகைத்தான். “அண்ணா! நீங்கள் சொல்லித்தானே நான் தேவியைக் காட்டில் கொண்டு போய் விட்டேன். இப்போது ஏன் அழுகிறீர்கள்?” என்றான்.

அதற்கு ராமர், “லட்சுமணா! சீதையைக் கொண்டு போய்க் காட்டில் விடச் சொன்னது அரசன், ராஜாராமன். ஆனால், இப்போது அழுவது ராஜாராமனல்ல! சீதையின் துணைவன் – கணவன் – சீதாராமனாக அழுதுகொண்டிருக்கிறேன்” என்றார்.

அதைப் படித்ததும், ராஜாராமனுக்கும் சீதாராமனுக்கும் உள்ள வேற்றுமை கண்ணதாசன் உள்ளத்தில் பதிந்தது. அவ்வளவுதான்! ராமாயணத் தகவல்களை உள்ளடக்கி, பலவிதமான ‘ராம’ திருநாமங்களைச் சொல்லி, ஒரு பாடலை உருவாக்கிவிட்டார். அப்பாடல் இன்றும் நிலைத்திருக்கிறது. பாடல்…

ராமன் எத்தனை ராமனடி (லட்சுமி கல்யாணம் என்ற படத்தில்) என்ற அப்பாடல் ராமருடைய செயல்களைச் சொல்லி, அதன் காரணமாக ராமருக்கு உண்டான பெயர்களைச் சொல்லி…

ராமரை நம் உள்ளத்தில் கொலுவிருக்க வைக்கிறது.

இவ்வளவு பேர் ராமரைப் பாடியிருக்கும்போது, திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் மட்டும் விட்டு விடுவாரா என்ன?

முதல் பாடலான ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ என்ற பாடலிலேயே, அதுவும் தொடக்கத்திலேயே ‘பத்துத் தலை தத்தக் கணைதொடு’ என்று ராமரைப் பாடித்தான் துவக்குகிறார்.

ராமாயணத்தில் வரும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அருணகிரிநாதர் அனுபவிக்கும் அழகு, தனி அழகு.

தேவர்கள் வேண்டுகோளுக்காகப் பரம்பொருள் ராமராக வந்து அவதரித்ததைச் சொன்ன அருணகிரிநாதர்…

ராமரின் குழந்தைப் பருவத்தை வர்ணித்திருப்பதைப் பார்த்தால்…

ஆகா! நம்மைப் பரவசப் படுத்தும் அது!

வாருங்கள் பரவசப்படலாம்!

ஒருநாள்…

கோசலாதேவி தன் குழந்தை ராமரைப் பால் குடிக்க அழைக்கிறார். ராமரோ, இங்கும் அங்குமாக விளையாட்டுக் காட்டுகிறாரே தவிர, பால் குடிக்க வரவில்லை.

அப்போது கோசலாதேவி, ராமரைக் கொஞ்சி அழைக்கிறாள். அதை அப்படியே ஒரு நேர்முக வர்ணனையாகக் காட்டுகிறார் அருணகிரிநாதர்.

எந்தை வருக! ரகுநாயக வருக!

மைந்த வருக! மகனே இனி வருக!

என் கண் வருக! எனதாருயிர் வருக! – அபிராம!

இங்கு வருக! அரசே வருக!

முலை உண்க வருக! மலர் சூடிட வருக!

என்று பரிவினோடு கோசலை புகல வருமாயன்…

(தொந்திசரிய – திருப்புகழ்)

அபூர்வமான அமைப்பு கொண்ட பாடல் இது!

இதில் ‘வருக’ என்ற சொல் பத்து முறைகள் வந்திருக்கின்றது. அதாவது, “ராமா! என் குழந்தையாக வந்து, நீ ஓடி ஆடி விளையாடினாலும், தச அவதாரங்களில் ஒன்று நீ! அதை உணர்வேன் நான். அவதார புருஷா! அன்னையின் அருகில் வா!” என்று அழைக்கிறாள் கோசலை.

ஆனால், ராமர் வருவதாக இல்லை. “எங்க அப்பா! வாடா! வா!” என்று நாம் அழைப்போமே, அது போல ‘எந்தை வருக!’ என அழைக்கிறாள்.

“ரகுகுலதிலகா வா!” என அழைக்கிறாள்.

ஊஹூம்! அப்போதும் ராமர் வரவில்லை.

“மைந்தா! வா! மகனே! வா!” என அழைக்கிறாள்.

மைந்தன் வேறு, மகன் வேறா? – என்றால்… ஆம்!

தானும் வாழ்ந்து, தன் குடும்பத்தையும் வாழ வைப்பவன் மகன். தானும் வாழ்ந்து, பல குடும்பங்களையும் வாழ வைப்பவன் மைந்தன்.

ராமர், எல்லோருக்கும் வழிகாட்டி வாழ வைப்பவர். சுக்ரீவனுக்கும் விபீஷணனுக்கும் அரச வாழ்வை அளித்த அவதார புருஷரல்லவா அவர்!

ராமரின் இந்த உயர்ந்த குண நலனைக் குறிப்பிட்டே, ‘மைந்த வருக!’ என்றாள் கோசலை.

ஆனால் ராமரோ, நகர்ந்து வருகிறாரே தவிர, அருகில் வரவில்லை. சற்று விலகியே நிற்கிறார்.

‘என் கண் வருக!’ – “என்னிடம் வா!” என்கிறார் கோசலை. “என் ஆருயிரே வா! இங்கு வா!” என அழைக்கிறாள்.

இவ்வளவு அழைப்பும் எதற்காகவாம்?

வேறு எதற்கும் இல்லை! பால் குடிப்பதற்காகத்தான் இந்தப் பாடு!

“ராமா! வா! பாலைக் குடி! மலர் சூடி அலங்காரம் செய்துகொள்ள வா!” என வேண்டுகிறாள் கோசலை.

இவ்வளவு அழைப்புகளையும் அவள் – ‘பரிவினோடு கோசலை புகல’ – பரிவோடு சொல்லி அழைக்கிறாள்.

மிகவும் பொருள் பொதிந்த, இக்காலத்திற்கு மிகவும் முக்கியமான தகவல் இது.

குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருக்கும். அவர்களிடம் பரிவோடு நடந்துகொள்ள வேண்டும். அதை விட்டு…

“வந்து தொலையேண்டா! இல்லாட்டி, பாலைக் கீழே வெச்சுட்டுப் போயிடுவேன்” என்று குழந்தைகளிடம், குரலை ஓங்கி முகத்தைக் காட்டக் கூடாது.

கோசலை இதைத்தான் நமக்குச் சொல்லிக் கொடுக்கிறாள்.

அவள், பரிவோடு அழைக்கிறாள் ராமரை. அதன்பின், ராமர் வராமல் இருப்பாரா? ஓடி வந்துவிட்டார். அவரை அள்ளி அரவணைத்துப் பாலூட்டி, அலங்காரம் செய்து மகிழ்ச்சிக் கடலில் திளைக்கிறாள் கோசலை.

ராமாயணம் என்றால், இனிமையான வழி என்பது பொருள். அதை நடைமுறையிலேயே நடத்திக் காட்டிய பரப்பிரம்மத்தின் கதைதான் ராமாயணம்.

அனைவரிடமும் அன்போடு நடந்துகொண்டால், ராமர் நம்மிடமும் வருவார். அல்லல்களைத் தீர்த்து அருள் புரிவார்!

பி.என். பரசுராமன் ஆன்மிக நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: pnparasuraman@gmail.com

source:::: The Hindu…Tamil
natarajan

” அவ்வை பாட்டியின் அகந்தையை அகற்றிய ஆறுமுகப் பெருமான் …”

அவ்வைப் பாட்டியின் கர்வபங்கம்….
அவ்வைப்பாட்டிக்கு தான்தான் அனைத்தையும்
கற்றுவிட்டதாக மண்டை கர்வம்.

அதே பாட்டிதான்   கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று எழுதி வைத்தாள்

ஆனால் அது ஊருக்குதான் உபதேசம் போலும்.

கல்லாதவரை அவமதிப்பதில்
யாரும் அவளுக்கு நிகரில்லை போலும்.

அவள் ஒரு பாட்டில் கூறுகிறாள்.

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து – தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி.

ஒரு காட்டில் மயில்கள் தன் அழகிய தோகையை விரித்து ஆடுவதைக் கண்ட வான்கோழி தன்னையும் மயில் போல பாவித்து அது தனக்கு உள்ள சிறகை விரித்து ஆடியதாம்.

அதில் என்ன தவறு.
அதை இழிவாக பேசுகிறாள் அவ்வைப் பாட்டி

இறைவன் படைப்பில் அனைத்துமே அழகுதான்.
அதை ரசிக்கும் பரந்த குணம் அவளுக்கு இல்லை.

இதை எதற்காக உதாரணம் காட்டுகிறாள் என்றால்
கல்லாதவன் கவி எழுதினால்
இதைப்போல் மட்டமாகத்தான் இருக்குமாம்.

கவி எழுதுவது என்பது இதயத்தில் தோன்றும்
உணர்சிகளின் வெளிப்பாடு .
அது ஊற்றுப்போல் வெளிப்படுவது.
அதற்க்கு வரைமுறைகள் கிடையாது

நாட்டுப்புறப் பாடல்களை இயற்றியவர்கள்
எந்த இலக்கணம் கற்றார்கள்?

கவி சக்ரவர்த்தி கம்பனே ஒரு ஏற்றம்
இறைப்பவனிடம் திணறிப் போனான்
என்பது வரலாறு.

க (கவிதைக்கு ) விதை (கலைமகளின் அருள்தான்)
என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். .

தான் கற்றவர் என்ற கர்வம். அவளுக்கு.

ஆனால் இறைவனுக்கு அவனின்
எல்லா படைப்புகளும் ஒன்றுதான்.

அழகே உருவான முருகன். அவ்வைக்கு அளித்த அழகிய வடிவத்தை துறந்து காண்போர் வெறுக்கும் தொண்டு கிழவிபோல் வடிவை வேண்டிப் பெற்ற அவ்வையின் கர்வத்தை ஒடுக்க மனம் கொண்டான்.

அவள் நடந்து வரும் வழியில் ஒரு நாவல் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான்.

பசியினால் களைத்து வந்த அவ்வை அவனைப் பார்த்து சிறுவனே கொஞ்சம் நாவல் மரத்தை உலுக்குகிறாயா ,நான் கொஞ்சம் நாவல் பழம் உண்டு பசியாறுகிறேன் என்றாள்

அப்போது அந்த சிறுவன் ,பாட்டி உனக்கு சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டான்

அவ்வை திடுக்கிட்டாள் .

பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று வகைகள் இருக்கிறதா என்று திகைத்தாள்

எனினினும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சுட்ட பழமே போடு என்றாள்

சிறுவன் மரத்தை உலுக்கினான்.
நாவல் பழங்கள் உதிர்ந்தன

பழங்களை பொருக்கி கையில் எடுத்தாள் அவ்வை பாட்டி.
அதில் மணல் ஒட்டிக்கொண்டிருந்தது.

அதை வாயிற் வைத்து ஊதினாள் மணல்துகள் அகல.

உடனே அந்தசிறுவன் கேட்டான்
என்ன பாட்டி, பழம் சுடுகிறதோ வாயால் ஊதி சாப்பிடுகிறாய்.

ஒரு மாடு மேய்க்கும் சிறுவன்
தன்னை திணற வைத்துவிட்டானே என்று
அதிசயித்தாள்.

அப்போது சிறுவனே நீ யார் ?

தான் கற்றவள் கல்லாதவர்கள் மூடர்கள்
என்று நினைத்த உன்னை சோதிக்க வந்தவன்.

உன் அகந்தையை விட்டுவிட்டு என்னைப் பார்
,நான் யார் என்பது புரியும்.
அவள் புரிந்துகொண்டாள்

இனி யாரையும் இழிவு செய்யாதே
என்று அறிவுறுத்தி மறைந்துபோனான்
ஞான பண்டிதன். .

அகந்தை கொண்ட மனிதர்களை யாரும் அழிக்கவேண்டாம். அவர்களே அதற்கான வழியை தாங்களே தேடிக்கொள்வார்கள் என்பதுதான் வரலாறு.

அந்த அறிவுரை நமக்கும்தான்.

 

source:::: Murugan Bhakti

natarajan

” முருகனுக்கு வாகனம் மாறி விட்டதா … ” !!!

2014-02-26 21.16.35

இந்தக் காட்சியைக் கண்டு எனக்குத் தோன்றியது…
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

தன் வாகனத்தைத் தம்பிக்குத் தந்து
அண்ணன் அயர்ந்து அமர்ந்து விட்டார்!

எந்த சோதிடன் பலன் சொன்னானோ?

வாகன மாற்றம் உண்டு என்று?

ஆயிரம்தான் இருந்தாலும்,
அதிககனம் இருந்தாலும்,
இயல்புக்கு மாறாக இளவல் நிற்பினும்
முழி பிதுங்குது மூஞ்சுறு!

சோடி தேடி ஓடிப் போனதோ
இல்லை…
சோகத்தோடே பறந்து போனதோ?
தோகை மயில்!

கவலை அறுத்த உள்ளம்
கருணை பொங்கும் கண்கள்
முறுவல் பூத்த முகம்
முருகன் என்றால் அழகன்தானே!

ஒய்யாரக் கோலம்…
ஓய்வான நேரம்!

ஆண்டி என நின்றதால்
அச்சம் இல்லை.
மடியில் கனம் இல்லை
மனத்தில் பயம் இல்லை…
உணர்ந்த உண்மை இது!

மனையாள் பயம் இல்லை
மாலைக்குள் திரும்ப வேண்டாம்!
கைகட்டி சேவகம் என
எங்குமே குனிந்திருக்க வேண்டாம்!

குடும்பக் கவலையு மில்லை…
குழந்தை குட்டி பிக்கல் பிடுங்கல்
கொஞ்சமும் இல்லை என்றால்
முகத்தின் புன்னகை முழுநேரம்தானே!
உணர்ந்த உண்மை இது!

கையில் கொண்ட கோல் ஒன்று
நிமிர்ந்து நிற்கும் நிலைத்திருக்கும்!
செங்கோல் வழுவாது…
செங்கைவிட்டு நழுவாது!

(சென்னை, கே.கே.நகர் சிவன் பூங்கா அருகிலுள்ள, விநாயகர் கோவில் மண்டபத்தில் க்ளிக்கியது!)

source::::Kavithai  by Sengottai Sriram in Dinamani.blogspot.com

natarajan

” கம்பனின் கற்பனை ஆங்கில கவிஞன் டென்னிசன் வரிகளில் …”

தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்கள் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மாணவராகப் பயின்ற காலத்தில் ஆங்கில மொழிப் பேராசிரியரும், கல்லூரித் தலைவருமான மில்லர், ஆங்கிலக் கவிஞர் டென்னிசனின் ‘ஆர்தரின் இறுதி’ கவிதை நூலைப் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, அதில் வரும் கவிதை வரிகளைக் குறிப்பிட்டார்

“So said he, and the barge with oar and sail,

Moved from the brink, like some full- breasted swan”

ஆர்தர் அரசன் இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் மனைவியரோடு அவனை ஒரு அழகிய படகில் வைத்து நதியில் செலுத்திவிடுகிறார்கள். இந்தக் கட்டத்தில் படகு, நதியில் அழகாக செல்லுகின்ற காட்சியையே மேலே காட்டிய இரண்டடிகளும் வருணிக்கின்றன. அந்தப் படகு தனது துடுப்புகளை ஆட்டி அசைத்துக்கொண்டு நதியில் மிதந்து செல்வது ஒரு அழகிய அன்னப்பறவை தனது சிறகுகளை விசிறிக்கொண்டு நீரில் நீந்துவது போல் தோன்றுகிறது புலவனது அகக் கண்களுக்கு.

இதுமாதிரியான கற்பனை தமிழில் எங்கேயாவது உண்டா என்று அறிந்துகொள்ள விரும்பிய மில்லர், பரிதிமாற் கலைஞரைப் பார்த்து, “தமிழ் பற்றி எப்பொழுதும் பெருமையாகப் பேசுகிறோயே, டென்னிசனின் மேற்கண்ட கற்பனை போல் தமிழில் உண்டா?” என்று கேட்டார்.

பரிதிமாற் கலைஞர், தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது என்று உடனடியாகப் பதில் சொன்னார். எட்டு, ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட கம்பராமாயணத்தில் இந்த உவமை எடுத்தாளப்பட்டிருக்கிறது என்றார். அயோத்தியா காண்டம் குகப்படலத்தில் இராமன், சீதை, இலக்குவன், குகன் ஆகியோர் கங்கை நதியைக் கடக்கும் காட்சி இப்படி விவரிக்கப்படுகிறது.

முடுகினன் நெடுநாவாய், முரிதிரை நெடு நீர் வாய்

கடிதினின் மட அன்னக்கதி அது செல…

பரிதிமாற் கலைஞர் மேற்கண்ட கம்பன் வரிகளைக் கூறியவுடன் புதையல் கண்டவரைப் போல மில்லர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அன்னப் பறவை நீரில் செல்வது போல படகு சென்றது என்ற கம்பனின் கற்பனை அப்படியே பல நூற்றாண்டுகளுக்குப் பின் ஆங்கிலக் கவிஞர் டென்னிசன் வரிகளில்.

என்ன அபூர்வ ஒற்றுமை.

ஆதாரம்: பரிதிமாற் கலைஞர் வாழ்க்கை வரலாறு

Topics:

இலக்கியம்|     source::::The Hindu….Tamil

natarajan

” பாரதி என்றாலே பிரமிப்பு …” !!!

பாரதி அன்பர்கள் மத்தியில் பரவலாக எழும் ஐயப்பாடுகளில் ஒன்று, “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்’ என்கிற பாடலில் வரும் “பள்ளித் தலமனைத்துங் கோயில் செய்குவோம்’ என்கிற வரி பற்றியது.

தமிழகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ என்று குறிப்பிடுபவர் பாரதி. கலைவாணியைத் துதித்துப் பாடும் “வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்’ பாடலில் கூட,

bharathi“”வீதிதோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ள வூர்கள்
நகர்களெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியிலாத தொரூரைத்
தீயி னுக்கிரையாக மடுத்தல்”
என்றும்,
“”அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்”-
என்றும் பாடிய மகாகவி பாரதி, எப்படி, எதற்காகப் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாடினார்? இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் விட்டு விடுங்கள். தெரியாத பெருவாரியானவர்கள் மட்டும் மேலே படியுங்கள்.
இது குறித்து கவிஞர் வாலி கூறுகையில், தமிழ்ப்பா’வை மணந்த தமிழ்ப் பாவை என்று மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மா பாரதிக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார் கவிஞர் வாலி.

“”ஒருத்தி, ஒரு, செருக்கனோடு வாழலாம்; தருக்கனோடு வாழலாம்; சினப் பெருக்கனோடு வாழலாம், கெட்டவருக்கனோடு வாழலாம்! ஆனால், எப்போதும் எதையேனும் கிறுக்கு கிறுக்கென்று கிறுக்கும் கிறுக்கனோடு வாழ்தலென்பது தலையைக் கிறுகிறுக்க வைக்கும் விஷயம்!” என்று தனக்கே உரித்தான வார்த்தை வித்தகத்தால் செல்லம்மா பாரதியின் சித்திரத்தை எழுத்தில் வடித்திருக்கும், கவிஞர் வாலியின் கரம் பிடித்துக்கை வலிக்க வலிக்கக் குலுக்க வேண்டும் போலிருக்கிறது!
நான் முதலில் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலும் தந்திருக்கிறார் அந்த நடைச் சித்திரத்தில். “”அடியேன் அறிந்தவரை

அதற்கான அர்த்தம் யாதென்றுரைப்பேன். பாரதி – பள்ளித் தலமென்று பள்ளிக்கூடத்தைக் குறிப்பிட்டிருக்க மாட்டான். அது, ஏற்கெனவே கலைமகள் கொலுவிருக்கும் கோயில்தானே!

அவன் குறிப்பிட்டது யாதெனில், பள்ளரும் அவர்தம் பத்தினிமார்களான பள்ளிகளும் இருக்கும் சேரியைத்தான்!” என்று விளக்குகிறார் கவிஞர் வாலி.

“”அசிங்கமும் அருவருப்பும் பாராமல், ஊர்ப்பணி ஆற்றும் உத்தமர்தம் உறைவிடத்தை ஆலயமாக்க விரைந்த முதல் ஆசாமி – அந்த முண்டாசுக்காரன்தான்!”

பாரதி என்றாலே பிரமிப்பு!!!

 

source::::Vanishree Sivakumar in Dinamani blogspot.com

natarajan

” பொங்கலோ பொங்கல் …பொங்கட்டும் மகிழ்ச்சிப் பொங்கல் …”

பொட்டிட்ட புதுப்பானையில்
பொங்குகின்ற பொங்கல்
போல் தங்க மனம் கொண்ட
தமிழர்களின் வாழ்விலும்
தமிழ் நகை பொங்கட்டும்..!
சூரியனார்க்கு நன்றி சொல்லும்..! - பொங்கல் வாழ்த்து!
பொன்னான புதுப்பானையில்
பொங்கி வரும் வெண்நுரை போல்
வெள்ளை மனம் கொண்ட
வெள்ளந்தி தமிழர்களின்
வாழ்வில் வெற்றிகள் குவியட்டும்..!
சூரியனார்க்கு நன்றி சொல்லும்
சுந்தரமான பொங்கல் போல்
சூதில்லா மனம் கொண்ட
சுத்தமான தமிழர்களின் வாழ்வில்
சுகவாழ்வு பெருகட்டும்..!
தரணியை தழைக்கச் செய்யும்
தை மகள் பிறப்பிற்கும்
எருதின் உழைப்பிற்கும்
நன்றி சொல்லும் நல்மனம் கொண்ட
தமிழர்களின் வாழ்வில்
நலம் பல திரளட்டும்…
நன்மைகளே விளையட்டும்..!
புலம் பெயர்ந்த தமிழருக்கும்
புலம் பெயரா தமிழருக்கும்
பொங்கலோ பொங்கல்
பொங்குக தமிழ்ப் பொங்கல்..!
பொங்கட்டும் மகிழ்ச்சிப் பொங்கல்..!
source:::www.malaimalar.com
natarajan