“நாள் என் செயும், வினைதான் என் செயும்,
எனை நாடி வந்த கோள் என் செயும்,
கொடும் கூற்று என் செயும், குமரேசர் இரு தாளும்,
சிலம்பும், சதங்கையும், தண்டையும், தோளும்,
கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”

தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன …… தனதான
தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
வெறியனை நிறைபொறை வேண்டி டாமத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை …… மிகுகேள்வி
மண்ணுலகில் பல (தீய) வழிகளிலும் போய் கெடுகின்ற அறிவில்லாதவனை, குடி வெறி கொண்டவன் போன்ற பித்தனை, நீதி, பொறுமை முதலிய நற்குணங்களை விரும்பாத (மத) செருக்குக் கொண்ட அறிவிலாப் பொருள் போன்றவனை, ஒரு மகிமையும் இல்லாத தாழ் நிலையில் இருக்கும் வீணனை, மிகுந்த நல்ல கேள்வியையும்
தவநெறி தனைவிடு தாண்டு காலியை
யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்
சமடனை வலியஅ சாங்க மாகிய …… தமியேனை
தவநெறியையும் விட்டுக் கண்ட வழியில் திரிபவனை, கெட்ட புத்தியால் கேடு, தீமை செய்கின்ற குணங்கெட்டவனை, மிக ஒழுங்கீனமுடைய துணையற்றவனை,
விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
விழிவலை மகளிரொ டாங்கு கூடிய …… வினையேனை
நறுமணம் நிறைந்த கூந்தலை உடையவர், பிடிவாதமுள்ள மாதர், சந்திரனை ஒத்த முகத்தை உடைய மாதர், விருப்பத்தை எழுப்பும் காம மயக்கிகள், கண் என்னும் வலையை வீசும் மகளிர்- இத்தகையோருடன் அவ்வச் சமயங்களில் கூடிய தொழில் உடையவனாகிய தீவினை மிகுந்தவனை,
வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு
மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை
விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ …… அருள்வாயே
நிரம்ப மலர் கொண்டு விரும்பிப் பூசித்தாகிலும், அல்லது ஒரு பூவோ ஒரு இலையோ கொண்டாகிலும், உன்னை நினைந்து, நல்ல வகையான அன்புடன் கீழே வீழ்ந்து உனது திருவடியைத் தொழுமாறு அருள்வாயாக.
ஒருபது சிரமிசை போந்த ராவண
னிருபது புயமுட னேந்து மேதியு
மொருகணை தனிலற வாங்கு மாயவன் …… மருகோனே
பத்துத் தலைகளுடன் போருக்கு வந்த ராவணன், இருபது கரங்களுடன் ஏந்தின வாளானது, ஒரே பாணத்தால் அற்று விழும்படி (பாணத்தைச்) செலுத்தின திருமாலின் மருகனே!
உனதடி யவர்புக ழாய்ந்த நூலின
ரமரர்கள் முனிவர்க ளீந்த பாலகர்
உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி …… லுறைவோனே
உன்னுடைய அடியார்களும், உனது திருப்புகழை ஆராய்ந்த நூல் வல்லவர்களும், தேவர்களும், முனிவர்களும், கொடையால் ரக்ஷிப்போர்களும் உயர்ந்த நற்கதியைப் பெற அருள் விளங்கும் அழகிய மயிலில் வீற்றிருப்பவனே!
குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு
களமிசை யறமது தீர்ந்த சூரர்கள்
குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ …… முனிவோனே
ஒலிக்கின்ற கழல் அணிந்த உனது திருவடியை தாழ்மையுடன் கும்பிடாதவர்களும், சண்டை செய்யும் போர்க்களத்தே தரும நெறியைக் கை விட்டவர்களுமான சூராதி அவுணர்களது குல முழுமையும் மாண்டு போய்ப் பொடியாகும்படிக் கோபித்தவனே!
கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
மிடறினி லிருவென ஏந்து மீசுரர்
குருபர னெனவரு கூந்த லூருறை …… பெருமாளே.
கொடிய விடத்தைக் ‘கொடு’ என வாங்கி, அழகிய கழுத்தினில் இரு என்று அதை நிறுத்தி, அங்கேயே அதைத் தாங்கி நிலைக்கவைத்த சிவபெருமானுக்குக் குருமூர்த்தி என வந்து கூந்தலூரில் குடி கொண்டுள்ள பெருமாளே!
[பொருள் ஆதாரம்- திரு செங்கல்வராயப் பிள்ளை, திரு முருக கிருபானந்த வாரியார்]
மாலதி ஜெயராமன்,
குடந்தை.
SOURCE:::: http://www.muruganbhakathi.org
Natarajan
Jan 24 2015
