ஏப்., 14 தமிழ் புத்தாண்டு
தமிழ் புத்தாண்டு அன்று, ஆறுகளில் நீராடினால் பாவம் நீங்கும் என்பர் முன்னோர். புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவம் நீங்கும் என்றாலும், சிலர், இந்நதிகளில் நீராடி, ஊருக்கு திரும்பியதும், மீண்டும் பாவச் செயல்களை செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். இவர்களுக்காகவே சொல்லப்பட்ட புராணக்கதை இது:
கங்கையில் நீராட, மகான் ஒருவர் வந்தார். கெட்டவர்கள் மட்டுமே நீராடி, பாவங்களைக் கரைத்து விட்டு போகும் நிலையில், நல்லவர் ஒருவர் தன்னில் நீராட வருகிறாரே என, கங்கா மாதா பெரும் மகிழ்ச்சி அடைந்தாள்.
அவர் தன்னில் கால் வைக்கப் போகிறார் என, அவள் எதிர்பார்த்திருந்த வேளையில், கங்கையை அடைந்த முனிவரின் முகம், அஷ்ட கோணலாக மாறியது. காரணம், சிறிது தொலைவில், கங்கையில் சாக்கடை கலந்து கொண்டிருந்தது. இதனால், குளிக்காமல் கிளம்பினார் முனிவர்.
இதைக் கண்ட கங்கை, ஒரு சாதாரணப் பெண்ணாக வடிவெடுத்து, ‘மகானே… ஏன் கங்கையில் குளிக்காமல் செல்கிறீர்?’ என்று கேட்டாள்.
முனிவர் சாக்கடையை கை காட்ட, ‘ஐயனே… மக்களின் பாவக் கரைசலை விட, இந்த கழிவுநீர் பெரிய விஷயமே அல்ல. கங்கை பாவங்களை மட்டுமல்ல, இந்த சாக்கடையையும் தன்னுள் வைப்பதில்லை; அதைக் கடலில் தள்ளி விடுகிறாள்…’ என்றாள்.
உடனே, கடலரசனிடம் சென்று, இது குறித்து விசாரித்தார் முனிவர். அவனோ, ‘பாவங்களை நான் வைத்துக் கொள்ள மாட்டேன்; அது, சூரியனால் மேலே எடுத்துச் செல்லப்பட்டு விடும்…’ என்றான்.
முனிவர், சூரியனிடம் கேட்டபோது, ‘அதை, மேகங்களிடம் அனுப்பி விடுகிறேனே… அவற்றைக் கேளுங்கள்…’ என, தப்பித்துக் கொண்டார்.
முனிவரும் விடாப்பிடியாக மேக மண்டலத்திடம் விசாரித்தபோது, ‘மகானே… மக்களின் பாவங்கள் மீண்டும் அவர்களையே அடையும் வகையில், மழையாகப் பொழிந்து விடுவேன். பாவத்தை செய்த மக்கள், அதையே மீண்டும் அனுபவிக்கின்றனர்…’ என்றது!
இக்கதை உணர்த்தும் உண்மையை புரிந்து கொண்டால், ஆறுகளை அசுத்தப்படுத்த மாட்டோம்.
தமிழ் புத்தாண்டாகட்டும், இதர விழாக்கள் ஆகட்டும், புனித தீர்த்தங்களில் நீராடச் செல்லும் போது, மனதில் நல்ல எண்ணங்கள் நிறைந்திருக்க வேண்டும். ‘இந்த தீர்த்தத்தில் மூழ்கும் நான், இனி, பாவச் செயல்களை செய்ய மாட்டேன்…’ என, உறுதியெடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் செய்த பாவங்கள், நம்மையே திரும்ப வந்தடையும்.
இன்று, நாட்டில் உள்ள அனைத்து புனித தீர்த்தங்களும் பாழாக்கப்பட்டு வருகின்றன. கங்கையை சுத்தம் செய்ய, பல கோடி ரூபாய் தேவைப்படுகிறது. காவிரி, தாமிரபரணி, குற்றாலம் போன்ற புனித நதிகளும், கேளிக்கை பொருட்களாக மாறி விட்டன. நீர்நிலைகளை சுற்றுலா கண்ணோட்டத்தில் பார்க்கின்றனரே தவிர, எதிர்காலத்தில் குடிநீருக்கும், விளைச்சலுக்கும் பயன்படும் இடமாயிற்றே என்ற எண்ணம் இல்லாமல் போய் விட்டது.
புதிய ஆண்டிலாவது, நீர்நிலைகளைக் காக்க உறுதியெடுப்போம். இதை, ஒரு இயக்கமாக மாற்றி விட்டால், எல்லாரும் வளமாக வாழலாம்.
தி.செல்லப்பா in www.dinamalar.com
Natarajan