பெருந்தலைவர் காமராஜர் … எளிமையின் சிகரம் …மக்களில் ஒருவர் …

மக்களில் ஒருவர்

1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பையேற்கப் புறப்பட்டார் காமராஜ். திருமலைப் பிள்ளை வீதி திமிலோகப்பட்டது. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்று வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார்.

திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து “சைரன்” என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். “அது என்னையா சத்தம்?” காமராஜ்.

“ஐயா, இது முதலமைச்சர் செல்லும் போது போகுவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி. முன்னால் முதல்வர்கள் பிரகாசம் ஐயா, ஓமந்தாரையா, குமாரசாமிராஜா ஐயா, ராஜாஜி ஐயா எல்லோர் காலத்திலுமிருந்து வருகிற சம்பிரதாயம்” என்றார் காவல்துறை அதிகாரி. “இதோ பாருங்க… இதுக்கு முன்னால இந்த சம்பிரதாயமெல்லாம் இருந்திருக்கலாம்… எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். சத்தம் போடாமப் போங்க” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

அடுத்த கோடம்பாக்கம் பெருவீதி – நுங்கம்பாக்கம் பெரு வீதி சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவலர் இவர் சென்ற வண்டியை நிறுத்தி பின் இவரது வண்டி செல்ல அனுமதியளித்தார். ஆனால் அவர் காருக்கு முன் நின்ற காவல்துறை மேலதிகாரிகளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன். ஆனால் காமராஜரோ அந்த நடுத்தெருக் காவாலரின் கடமையாற்றலைக் கண்டு உள்ளம் புளகித்தார்.

காவலரைத் தாண்டி இவரது கார் செல்லும் போதுதான் காவலருக்கு விஷயமே புரிந்தது. நடு நடுங்கிப் போனார். முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமெ என்று பத்றிப்போனார். காவல்துறை மேலதிகாரிகளின் சினத்துக்கு ஆளாகி விட்டோமே என கலங்கினார்.

அன்று மாலை காமராஜர் வீடு திருப்பியபோது கலவரத்துடன் வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்ட காவலரை தட்டிக்கொடுத்த காமராஜ் அவரது கடமை உணர்வை பாரட்டியபோது தான் காவலரின் உள்ளம் சாந்தியுற்றது.

காமராஜ் முதலமைச்சராக இருந்தவரை அவருக்கு பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை வண்டிகள் ஒலி எழுப்பியதே இல்லை. தன்னை தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களில் ஒருவராகவே தன்னைப் பாவித்துக் கொண்டார்.

அரசியல்

1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை முதல்வராக பணியாற்றிய காமராஜர் எளிமையின் சின்னமாக விளங்கினார்.

வீண் விளம்பரங்களை வெறுத்த காமராஜர், கிராம மக்கள் நலனில் பெரிதும் அக்கரை காட்டினார். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் தானே சுற்றுப்பயணம் செய்து கிராம பிரச்சனைகளை நேரில் கண்டறிந்தார். அதனை நீக்க புத்தம் புதிய செயல் திட்டங்களை தீட்டினார்.

கல்விக்கண் கொடுத்தவர்

ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.

“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.

“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?

உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.

“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.

“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.

“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.

உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள்.

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார். இதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.

எளிமையின் சிகரம்

அரசியல் தலைவர்கள் பொதுமக்களின் பிரதிநிதிகளாகவும், அவர்களின் மறுபதிப்பாகவும் வாழ வேண்டும். அரசியல்வாதிகளின் எளிமையான தோற்றம் அவர்களை மக்களோடு சமப்படுத்தும்.

பகட்டும் படோபாவமும், ஆடம்பரமும் அகங்காரமும் மன்னர்களிடம் இருந்து அதனாலேயே அழிந்தார்கள். இன்று மக்களை வழி நடத்தும் அரசியல்வாதிகளும் அதே தவற்றைச் செய்யலாமா?

இந்த மனோபாவத்தை மாற்றும் மனிதனாக எளிமையாய் வாழ்ந்து அரசியலில் எளிமையின் சிகரமாய் பரிணமித்தவர்தான் பாரதப் பெருந்தலைவர்.

இந்தியாவில் வேட்டி சட்டைப்போடும் எத்தனையோ அரசியல் தலைவர்கள் வெளிநாடு போகும்போது மட்டும் கோட்டு சூட்டு போட்டு கோலம் செய்கிறார்கள். இது மண்ணின் மகத்துவத்தை மட்டும் மறைப்பதில்லை. நம்மையும் அது அந்நியப்படுத்திவிடுகின்றது.

1953 ல் பெருந்தலைவருக்கு மலாய் நாடு செல்லும் மாபெரும் வாய்ப்பு வந்தது. அந்த நாளில் மலாய் பிரிட்டிஷ் ஆதிக்க நாடாக இருந்தது.

எனவே மலாய் நாட்டின் கமிஷனராக் இருந்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஜெனரல் டெம்ப்ளர் ஆவார்.

தலைவர் காமராஜர் அவர்கள் மலாய் செல்வதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தது திரு. வேங்கடராஜுலு நாயுடு ஆவார்.

அவர்தான் நமது தலைவர் எப்படியாவது ஜெனரல் டெம்ப்ளருடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார்.

டெம்ப்ளர் எப்பொழுதுமே ஆடம்பரத்தை பெரிதும் விரும்புவர். தனக்கு இணையானவர்களை மட்டுமே சந்திக்க விரும்புபவர். இங்கு இணையானவர் என்பது ஆடை அலங்காரத்தில் மட்டுந்தான்.

இதை உணர்ந்த வேங்கடராஜுலு நாயுடு அவர்கள் காமராஜ் அவர்களுக்கு மலாயாவில் இருந்து ஒரு கடிதம் எழுதினார்.

கடித்த்தின் கருத்து இதுதான். ‘ஜெனரல் டெம்ப்ளர் கண்டிப்பானவர், ஆடைப்பாதி, அலங்காரம் மீதி என்னும் குணம் உடையவர். எனவே தாங்கள் அவரைச் சந்திக்க வேண்டியிருப்பதால் தயவு செய்து ஒரு கோட் தைத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்வதாக’ எழுதியிருந்தார்.

வேங்கடராஜுலுக்கு பயம்.’தலைவர் வந்தும் ஜெனரல் டெம்ப்லரைச் சந்திக்க செல்ல வேண்டும். காமராஜ் தனது வழக்கப்படி கைத்தறி ஆடைகளோடு வந்துவிடக்கூடாது’ -என்று மனம் வருந்தினார்.

டெம்ப்ளர் சாதாரண உடைகளை உடுத்தி இருப்பவர்களை மிகச் சாதாரணமாகவே மதித்து வெளியில் அனுப்பிவிடுவார். எனவே வேங்கடராஜுலு மனம் வருந்தியதில் உண்மை இருக்கிறது.

காமராஜ் வரும் விமானத்தை எதிர்பார்த்து கோலாலம்பூர் குதூகலித்தது. இந்தியத் தலைமகனைக் காண எங்கெங்கு பார்த்தாலும் தலைகள்!

வேங்கடராஜுலு சந்தேகப்பட்டது போலவே நடந்துவிட்டது.

விமானத்தை விட்டு காமராஜ் எப்போதும் போலவே வேட்டி சட்டையுடன் வெளிவந்ததைக் கண்டு கலங்கினார் அமைப்பாளர்.

எப்போதும் போல் சாதாரணமாக கதர் வேஷ்டி, சட்டை, துண்டுடன் தலைவர் தன் தாயகத்தை உடையில் சுமந்துபோய் உள்ளத்தைக் காட்டிக்கொண்டிருந்தார்.

அழைத்த வேங்கடராஜுலு அகம் நொந்தார். இனி தலைவர்பாடு கமிசனர்பாடு என்று நினைத்தவாறே தலைவர் கமிஷனரிடம் அழைத்துப்போனார். எப்படியோ தலைவரை எதிர்ப்பார்த்த ஜெனரல் எளிமையாகப் பார்த்ததும் அசந்துபோனார்.

காமராஜரை வெறுக்கவில்லை. மாறாக தலைவரிடம் தனியே இருந்து பல மணி நேரம் பேசினார் ஜெனரல் டெம்ப்ளர் அவர்கள். பேசி முடித்து தலைவரை வழியனுப்ப வந்தவர்களிடம் ஜெனரல் அவர்கள் காமராஜர் அவர்களின் எளிமை மிகவும் பிடித்துப்போனது’ என்று கூறி எளிமையை சிகரத்தில் ஏற்றினார்.

இன்றோ ஒருநாள் கூத்துக்காக ஒன்பது ஜோடி கோட் சூட் தைத்து ஒரு முறை மட்டுமே மகிழ்கிறார்கள் அரசியல்வாதிகள்.

அதன் பின் ஒரு முறை ரஷ்யா செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தபோதும், தனக்காகத் தைத்தகோட் சூட்டையே வேண்டாம் என உதறிவிட்டு அதே எளிய உடையுடனே சென்று வந்தார்.

ரஷ்யா குளிர் அதிகம் உடைய நாடு. இருந்தும் தோளில் ஒரு துண்டைப் போட்டுவிட்டு எப்போதும்போல் எதார்த்தமாக ஒரு வேஷ்டி சட்டையை அணிந்து வெற்றியோடு திரும்பி வந்தார் தலைவர்.

இந்தப் பயணத்துக்காக தைத்து தலைவர் அணியாத ஆடைதான் அவரது நினைவகத்தில் நினைவுக்காக வைக்கப்பட்டுள்ளது. எங்கும் இவர் அணிந்த ஆடை என்று காட்சிக்கு வைப்பதைதான் பார்த்திருக்கின்றோம். ஆனால் – இது ரஷ்யா செல்ல தொண்டர்களால் தைத்துக் கொடுக்கப்பட்ட ஆடை , இதை தலைவர் அணிய மறுத்துவிட்டார்.’ என்ற செய்தியுடன் அவ்வாடை காட்சியில் வைக்கப்பட்டுள்ளது உலகிலேயே நமது அரசியல் தலைவனின் நினைவிடத்தில் மட்டுந்தான்.

இவ்விதம் எளிமையின் திருவுருவமாய்த் தோன்றி எளிமையின் சிகரமாக வாழ்ந்து இன்றைய அரசியல்வாதிகளுக்கு விளக்காக வாழ்ந்த பெருந்தலைவரின் இவ்வரிய வாழ்க்கை எல்லோரும் படிக்க வேண்டிய பாடமாகும்.

Source…..www.perunthalaivar.org

Natarajan

Leave a comment