” யார் பெரிய பெருச் சாளி ….”?

ஶ்ரீகுருப்யோ நம

“மடத்துல இருந்து இந்தப் பழத்தைத் திங்கறவா பெருச்சாளின்னா. எல்லாரையுமு் விட நானில்லையோ பெரிய பெருச்சாளி.”-பெரியவா

தஞ்சாவூர் பக்கம் இருந்த பிரபலமான டாக்டர் ஒருவர் காஞ்சிபுரத்துக்கு வர்ற சமயத்துல எல்லாம் மடத்துக்கும் வந்து பெரியவாளை தரிசனம் பண்ணிட்டுப் போறதை வழக்கமா வச்சுண்டு இருந்தார். அவர் வர்றச்சே எல்லாம் ரொம்ப வெலை ஒசத்தியான ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை (அந்தக்காலத்துல அதெல்லாம் பணக்காரா மட்டுமே சாப்பிடற பழங்களா இருந்தது) வாங்கிண்டு வந்து கூடையோட பெரியவாகிட்டே சமர்ப்பிச்சுட்டுப் போவார்.

ஒருசமயம் பரமாசார்யா, கும்பகோணத்துக்கு பக்கத்துல இருந்த ஒரு கிராமத்துல முகாமிட்டிருந்ததை தெரிஞ்சுண்டு அங்கேயே அவரை தரிசனம் பண்ண வந்தார் அந்த டாக்டர். வர்றச்சே வழக்கம் போலவே பெரிய கூடையில் நிறைய பழங்களை எடுத்துண்டு வந்தார்.

அவர் வந்த நேரம் மடத்துல கைங்கர்யம் பண்ற ஒருத்தர், முகாமோட வாசல்ல நின்னுண்டு இருந்தார். டாக்டர் பெரியவா தரிசனத்துக்கு வழக்கமா வர்றவர்ங்கறதால அவரை அடையாளம் தெரிஞ்சுண்டு, வாங்கோன்னு கூப்பிட்டார்.

கொஞ்ச நேரம் அவர்கிட்டே பேசிண்டு இருந்த டாக்டர், ‘நான் வர்றச்சே எல்லாம் பெரியவாளுக்குன்னு ஆசையா பழங்களை வாங்கிண்டு வர்றேன். ஆனா அதை மடத்துல இருக்கற பெருச்சாளிகளும் சாப்பிடறதா தெரியறது. பெருச்சாளிகள் எல்லாம் இந்தப் பழக்கூடைய நெருங்காத படிக்கு நீங்கதான் பத்திரமா வைக்கணும். அதோட, இந்தப் பழங்கள் எல்லாத்தையும் பெரியவாளுக்கே குடுக்கணும். இது என்னோட ஆசை!’ அப்படின்னு அவர்கிட்டே சொல்லி, பழக்கூடையை அவர்கிட்டேயே ஒப்படைச்சார்.

மடத்துக்கு கைங்கர்யம் பண்றவருக்கு டாக்டர்கிட்டே என்ன சொல்றதுன்னு தெரியலை. அதனால், ‘ஆகட்டும் பார்த்துக்கறேன்’னு சொல்லிட்டு, பழக்கூடையை வாங்கி உள்ளே வைச்சுட்டார்.

உள்ளே வந்து பெரியவாளை தரிசனம் பண்ணினார் டாக்டர். மெல்லிசா ஒரு சிரிப்பை உதிர்த்த பரமாச்சார்யா, அவருக்கு பிரசாதத்தை குடுத்தார். பவ்யமா அதை வாங்கிண்ட டாக்டர், ‘பெரியவா, உத்தரவு தரணும். நான் புறப்படறேன்’ அப்படின்னார்.

‘என்ன அவசரம்? இன்னும் ஒரு ரெண்டு மூணு மணி நேரம் இருந்து வந்த வேலையை முடிச்சுட்டுதான் போயேன்’ அப்படின்னார் ஆச்சார்யா.

டாக்டருக்கு ஒண்ணும் புரியலை. ‘வந்தது, பெரியவாளை தரிசனம் பண்ணணும்னு, அந்த வேலை முடிஞ்சுடுத்து அப்புறம் வேற என்ன வேலை இருக்கு?’ புரியலைன்னாலும் பரமாசார்யா சொன்னதை தட்ட முடியாம, ‘சரி உங்க உத்தரவுப்படியே செய்யறேன்!’ என்று அந்தப் பக்கமா உள்ளே போய் உட்கார்ந்துண்ட்டுட்டார்.

கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் ஆகியிருக்கும். தனக்குப் பக்கத்துல நின்னுண்டு இருந்த ஒரு சீடன்கிட்டே, ‘நீ உள்ளே போய் அந்த டாக்டரை அழைச்சுண்டு வா. அதோட, அவர் பழக்கூடை ஒண்ணைக் கொணடு வந்து கொடுத்திருக்கார். அதை எடுத்துண்டு, அதை வாங்கி வைச்சவரையும் கூட்டிண்டு வா!’ அப்படின்னார்.

எல்லாருக்கும் ஆச்சரியம். டாக்டர், பெரியவாளை தரிசனம் பண்ணினப்போ பழக்கூடை பத்தி எதுவும் சொல்லலை. அவர் கொண்டு வந்து குடுத்ததும், ஒருத்தர் அதை வாங்கிவைச்சதும் பெரியவாளுக்கு எப்படித் தெரியும்னு எல்லாரும் யோசிச்சுண்டு இருக்கறச்சயே, டாக்டர் அங்கே வந்து நின்னார்.

பின்னாலேயே பழக்கூடையை எடுத்துண்டு, அதை வாங்கிவைச்சவரும் வந்து நின்னார்.

தனக்கு முன்னால அந்தப் பழக்கூடையை வைக்கச் சொன்ன பெரியவா, டாக்டரை ஒரு நிமிஷம் உத்துப் பார்த்தார்.

‘எனக்கு என்ன வயசு ஆகறதுன்னு நோக்கு தெரியுமோ.. அறுபதைத் தாண்டியாச்சு. பழம் ஒடம்புக்கு நல்லதா இருக்கலாம். ஆனா, இத்தனையையும் நான் ஒருத்தனே சாப்பிட்டா அது எந்த மாதிரி ஹானி பண்ணும்னு டாக்டரான நோக்கே தெரியுமோல்லியோ… அப்படி இருக்கறச்சே ‘இதை எந்தப் பெருச்சளியும் தின்னுடாம பார்த்துக்கணும்னு அவர்கிட்டே சொன்னியே அது நியாயமோ? மடத்துல இருந்து இந்தப் பழத்தைத் திங்கறவா பெருச்சாளின்னா. எல்லாரையுமு் விட நானில்லையோ பெரிய பெருச்சாளி.’

சொன்ன மகாபெரியவா, கொஞ்சம் நிறுத்தினார். இதுக்குள்ளே டாக்டருக்கு உடம்பெல்லாம் குப்னு வேர்த்து முகமெல்லாம் வெளுத்துடுச்சு. தான் பேசினது தப்புன்னு புரிஞ்சுண்டதால அவர் கை, காலெல்லாம் லேசா நடுங்கவும் ஆரம்பிச்சுது.

‘நீ ரொம்ப பதட்டப்படாதே… நான் உன்னை மட்டும் சொல்லலை. இங்கே வர்றவா பலரும் உன்னை மாதிரிதான். அவா தர்ற எல்லாத்தையும் நானே சாப்பிடணும்ங்கறதுதான் அவாளோட அவா! ஆனா அது முடியுமோ? மொதல்ல நான் ஒரு சன்யாசிங்கறதையே எல்லாரும் மறந்துடறா. எனக்கு எதுக்கு இத்தனை பழமும் பொருளும்? இதெல்லாம் அநாவசியமில்லையோ!

அப்புறம் ஏன் இதையெல்லாம் நான் வாங்கிக்கறதா பாவனை பண்ணிக்கறேன்னா, இங்கே மடத்துல எத்தனையோ நல்ல காரியங்கள் நடத்தப்படறது, அதுக்கெல்லாம் பொருள் வேறும். குழந்தைகளையும் பொண்டாட்டியையும் விட்டுட்டு, மடமே கதின்னு வந்து எத்தனையோ பேர் இங்கேயே இருந்து கைங்கரியம் செஞ்சுண்டிருக்கா. அவாளுக்கெல்லாம் சாப்பிடறதுக்காவது நான் ஏதாவது பண்ணியாகணும். இந்த மடத்தைப் பராமரிக்க வேண்டியது என்னோட பொறுப்பில்லையோ! சன்யாசியான எனக்கு அதைச் செய்யறதுக்கு ஏது வருமானம்? உங்கள மாதிரியானவா தர்றதுதானே? அதைவைச்சு தானே நான் இவாளுக்கு ஏதாவது செய்யணும்? அப்புறம் இவா சாப்பிடக்கூடாதுன்னு நினைச்சா அது எப்படி முடியும்?

நீங்க எல்லாரும் ஒரு விஷயத்தை நன்னா புரிஞ்சுக்கணும். நீங்க ஒரு பொருளை ஒருத்தருக்குக் குடுத்துட்டா, அதுக்கப்புறம் அது அவாளோடதுன்னு ஆயிடும். அதுக்கு நீங்க பாத்யதை கொண்டாட முடியாது. அதை அவர் என்ன பண்ணணும்கறதை அவரேதான் தீர்மானிக்கணும். அப்படித்தான் செய்யணும்னு நீங்க கன்ட்ரோல் பண்ண முடியாது. அப்படித்தான் நீங்க எனக்காகத் தர்றதுகம், அதெல்லாம் மத்தவாளுக்கும் பிரயோஜனப்படற மாதிரி செய்யறதுதான் சன்யாசியான என்னோட கடமை. நீங்க ஆசைப்படற மாதிரி நானே எல்லாத்தையும் அனுபவிக்கணும்கறது சாத்யப்படவே படாது!’

சொன்ன பெரியவா, டாக்டர் தந்திருந்த பழக்கூடையில இருந்து ஒவ்வொரு பழமா எடுத்து தான் உட்கார்ந்துண்டு இருந்த இடத்துக்குப் பக்கத்துல இருந்த ஜன்னல் வழியா வெளியில வீச ஆரம்பிச்சுட்டார்.

பதறிப்போய்ட்டார் டாக்டர். பெரியவா ஏத்துக்காதது மட்டுமல்லாமல், பழத்தை தூக்கி வேற எறியராறே… பெரியவாளே எல்லாத்தையும் சாப்பிடணும்னு ஆசைப்பட்டது அவ்வளவு பெரியதப்பா? அப்படின்னு மனசுக்குள்ளே நினைச்சு திகைச்சு நின்னவர், மனசுக்குள்ளே ஏதோ தோணினவரா, வேகமா போய், அந்த ஜன்னல் பக்கமா வெளியில எட்டிப் பார்த்தார்.

அவர் முகம் ஜன்னல் பக்கமா வெளியில தெரிஞ்ச விநாடி, ‘சாமீ! நீங்க குழந்தை குட்டியோட, நோய் நொடியில்லாம ஆரோக்யமா நீண்டகாலம் இருக்கணும். எங்களுக்கு இவளோ நல்ல பழங்களைக் குடுத்த நீங்க மவராசனா இருக்கணும்!’ அப்படின்னு கோரசா குரல் எழும்பித்து வெளியில இருந்து.

என்னன்னு பார்த்தா, பத்துப் பதினைஞ்சு நரிக்குறவக் குடும்பம் குழந்தைகளோட நின்னுண்ணு, ஜன்னல் பக்கமா வந்து விழற பழங்களை எல்லாம் பிடிச்சு சேகரிச்சுண்டு இருந்தா. அவாள்லாம், அந்த டாக்டர்தான் தங்களுக்காக பழங்களை வீசி எறியறதா நினைச்சுண்டு அவரை வாழ்த்த ஆரம்பிச்சா!

மறுபடியும் மகாபெரியவாளைப் பார்த்தார் டாக்டர்

‘என்ன பார்க்கறே? அவாளுக்கெல்லாம் இவ்வளவு நல்ல பழஙகளைத் தர்றதுக்கு யாருக்காவது மனசு வருமா? இப்போ நீ குடுத்ததா நினைச்சு சந்தோஷமா எடுத்துண்டு போறாளே, அவாளோட மூஞ்சைப் பார்த்தியோ, எத்தனை ஆனந்தம் அதுல தெரியறது? அந்த மாதிரியான சந்தோஷத்தை மத்தவாளுக்குத் தர்றதுதான் பரமேஸ்வரனுக்கு ப்ரீதி தெரியுமோ..!

நம்பளால முடிஞ்சதை மத்தவாளுக்குத் தரணும்னு நினைக்கணும். கிடைக்கற எல்லாத்தையும் நாமளே அனுபவிக்கணும்னு நினைக்கறதும், நாம நினைச்சமாதிரிதான் எல்லாமே நடக்கணும்னும் நினைக்கறது தப்பு புரிஞ்சுதோ?

இனனொரு முக்கியமான விஷயம்… நீ ஆசைப்பட்ட மாதிரியே மடத்துல இருக்கற எந்தப் பெருச்சாளியும் அந்தப் பழத்தைத் திங்காம பார்த்துண்டாச்சு… போதுமோ?’

மகாபெரியவா சொல்லி முடிக்க, அப்படியே சாஷ்டாங்கமா அவர் காலடியில விழுந்தார் டாக்டர். பரமாசார்யா உபதேசம் பண்ணின பாடத்தைப் புரிஞ்சுண்டுட்டேன்னு சொல்லாம சொல்ற மாதிரி, அவர் கண்ணுல இருந்து நீர் வழிஞ்சு பெருகித்து.

தப்பை உணர்ந்துட்டாலே மன்னிப்புக் கிடைச்சுடும்கறதை உணர்த்தற மாதிரி அவரை எழுந்திருக்கச் சொல்லி, இன்னொருதரம் பிரசாதம் தந்து, ‘அவா வாழ்த்தின மாதிரியே மகாராஜனா இரு’ன்னு ஆசிர்வதிச்சு அனுப்பினார் மகாபெரியவா.

எந்த தெய்வம் தன்னோட நைவேத்யத்தை தானே சாப்பிட்டிருக்கு? அதெல்லாம் தன்னோட பக்தனுக்குக் கிடைக்கணும்கறதுதானே கடவுளோட எண்ணம்? அப்படின்னா, தனக்குக் கிடைக்கறதெல்லாம் தேவை உள்ள மத்தவாளுக்கேன்னு நினைச்ச பரமாசார்யாளை நடமாடம் தெய்வம்னு எல்லாரும் சொன்னது வாஸ்தவமான உண்மைதானே.

Featured Image -- 18848

 

 

 

 

 

 

 

 

 

Source…..input from a friend of mine

Natarajan

Leave a comment