சாப்பிட்ட உணவுக்கான கட்டணத்துடன் கூடுதலாக அந்த வரி இந்த வரி என்று பில் போடும் ஹோட்டல் உரிமையாளர்களிடம் இருந்து மாறுபட்டு மனிதநேயத்தோடு நடந்து கொண்டவருக்கு அதே மனிதநேயத்தைக் காட்டிய கேரள ஹோட்டல் உரிமையாளரைப் பற்றிய செய்தி இது.
கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள், பெயர் குறிப்பிடாத ஒரு நபர் நுழைகிறார். அன்றைய நாளின் பணிச் சுமையால் சற்று தளர்வாக ஹோட்டலுக்குள் சென்று சாப்பிட உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு ஜன்னல் பக்கம் திரும்புகிறார்.
அங்கு இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகள் ஹோட்டலில் உள்ள மேஜைகள் மீது பரிமாறப்பட்டிருக்கும் உணவுகளை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த அந்த நபர், குழந்தைகளிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, அவர்கள் மேஜை மீதிருக்கும் உணவுகளைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவர்களை உள்ளே அழைத்து, அவர்களுக்கான உணவுகளையும் சேர்த்து ஆர்டர் கொடுத்து, அவர்களை கைகழுவ வைத்து, அவர்களை சாப்பிட வைத்தார். அண்ணன், தங்கைகள் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துவிட்டு சாப்பிட்டு முடித்தனர். ஆனால், தனக்கான உணவை சாப்பிடாமலேயே சாப்பிட்ட முழு திருப்தியை அடைந்த அந்த நபர், உணவுக்கான பில்லைக் கேட்கிறார்.
அந்த பில்லில் 100, 200 என எண்ணிக்கைகள் இல்லாமல், மலையாள எழுத்துக்கள் மணிமணியாக கோர்க்கப்பட்டிருந்தது.
அந்த பில்லில் கூறப்பட்டிருந்தது இதுதான்,”மனிதநேயத்தைக் கணக்கிட எங்களிடம் எந்த கருவியும் இல்லை. ஒரு நல்ல விஷயம் உங்கள் மூலமாக நடந்துள்ளது.”
இந்த தகவல், பில்லின் புகைப்படத்துடன் சமூக வலைதளமான பேஸ்புக்கில் அதிக நபர்களால் பகிரப்பட்டுள்ளது.
Source……..www.dinamani.com
Natarajan
