98 வயதிலும் ஓய்ந்துவிடாமல் யோகா கற்பித்துவரும் கோவையைச் சேர்ந்த நானம்மாள் பாட்டிக்கு மத்திய அரசு இந்த ஆண்டின் பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதியைச் சேர்ந்தவர் நானம்மாள். எட்டு வயதாக இருக்கும் போது தன்னுடைய தந்தையிடமிருந்து யோகா கற்றுக்கொண்ட நானம்மாள் அன்றிலிருந்து இன்றுவரை 90 வருடங்களாக தன் யோகா பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். இதுவரைக்கும் சுமார் பத்து லட்சம் பேருக்கு யோகாசனம் கற்றுக்கொடுத்துள்ளவர், 600-க்கும் மேற்பட்ட யோகா ஆசிரியர்களை உருவாக்கியுள்ளார். இதில் 36 பேர் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களே என்பது சுவாரஸ்யத் தகவல். அவர்கள் அனைவரும் இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் யோகா கற்பித்து வருகிறார்கள்.
யோகா பயில ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை நாள் தவறாமல் யோகாசனம் செய்துவரும் நானம்மாள் ஒருநாள்கூட உடல்நிலை சரி இல்லையென்று முடங்கியது கிடையாது. மருத்துவமனை பக்கமே சென்றது கிடையாது. அந்த அளவுக்கு வலுவான உடலையும், மனதையும் யோகாவால் பெற்றிருப்பதாகச் சொல்கிறார் நானாம்மாள்.
காலையில் வேப்பங்குச்சியில் பல்துலக்கி பொழுதை ஆரம்பிக்கும் நானம்மாள், ராகி, கம்பு, மக்காச்சோளம், பாசிப்பயிறு, வரகு, தினை, கோதுமை, சிவப்பு அரிசி, தானியங்கள் என்று ஏதாவதொன்றை வறுத்து அரைத்த மாவில் காய்ச்சிய கூழில் மோர், உப்பு சேர்த்துக் குடிக்கிறார். மதியத்துக்கு சாதம், காய்கறிகள், கீரை, அவற்றோடு கொஞ்சம் மோர் சேர்த்துக்கொள்கிறார். இரவில் ஒரு டம்ளர் பால், ரெண்டு வாழைப்பழம்’ இதுதான் நானம்மாள் பாட்டியின் உணவுப்பட்டியல். காபி, டீயைத் தடைபோட்டிருக்கும் நானம்மாள், கருப்பட்டி கலந்த சுக்குக் காபியைத்தான் குடிக்கிறாராம்.
வீடுமுழுக்க விருதுகளை வாங்கிக் குவித்து வைத்திருக்கும் நானம்மாள் ஏற்கெனவே குடியரசுத் தலைவரிடம் பெண் சக்தி விருதை பெற்றிருக்கிறார். அவருக்கு இப்போது மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்து பெருமைப்படுத்தியுள்ளது.
Source…. M.Punniya Murthy in http://www.vikatan.com
Natarajan
