
தமிழின் அழகு இதுவே! சூசகமான (மறைபொருள்) பொதிந்த இம்மொழியின் தலைவனே முருகன். நம் உள்ள குகையில் மறைந்திருப்பான். எனவே குகன் என்ற பெயர் ஒரு காரணப்பெயர். காரணமும் காரியமும் பிரிக்கமுடியாததது. ஒரு காரணமாகவே நம்முள் மறைந்துள்ள குகன் செய்யும் காரியம் என்ன? காருண்யம். மறைந்திருந்து தனிப்பெரும் கருணையால் தடுத்தாட்க்கொள்வது.
இது அவனது நான்காவது, ஐந்தாவது தொழில்கள். ஐம்பெரும் தொழில்களில் நான்காவது திரோதானம்(திரோபாவம்) அதாவது மறைத்தல். கடைசியாவது அனுக்கிரகம். நான்காவது தொழில் அவனது பண்பு. ஐந்தாவது அந்தப் பண்பின் பயன். எங்குமே பண்பும் பயனும் பிரிக்க முடியாதது.
முத்தீ
ஒரு கரும்பலகையின் பண்பு கருமை. பயன் எழுதப்பயன்படுவது. அதுபோல மறைத்தல்/மறைந்திருத்தல் என்ற அவனது பண்பினால் நாம் பெறும் பயன் அவன் அருள். அதைப் பெற நாம் செய்யவேண்டியது என்ன? ஞானம், பக்தி, வைராக்கியம் இம்மூன்றையும் வளர்த்தல். அதைத்தான் சூசகமாக அந்த முனிவர் சொல்லி மறைந்தார். மறைந்து நிற்கும் முருகனுள்ளே நாமும் மறைவதே முக்தி எனும் முடிவு நிலை. முத்தீ (முக்தி) என்பது மூன்று “தீ” (நெருப்பு) சேர்க்கை.
ஞானத்தீ, பக்தீ, வைராக்யத் தீ! மூன்றும் சேர்ந்தால் அந்த பெரும் தீயில் நம் தீய வினை யாவும் பொசுங்கி முக்தி பெறலாம். ஞானமும், பக்தியும், வைராக்கியமும் வளர நாம் சில பயிற்சிகளை மேற்கொண்டு பழக வேண்டும். அவைகளே பூசை, தியானம், மௌனம், யோகப்பயிற்சி, பிராணாயாமம், ஏகாதசி விரதம், தீர்த்த யாத்திரை, உண்ணும் உணவில் கட்டுப்பாடு முதலியன. இந்தப் பட்டியலில் கடைசி இரண்டை மட்டும் சற்று விளக்குவோம்.
உள்ளமெனும் குகையில் ஒளிந்திருப்பவன் 
தீர்த்த யாத்திரை செல்லும்போது மிகவும் எளிதான, கொண்டு செல்ல வசதியான, நெடு நாட்கள் கெடாது இருக்கும்படியான, நம் உடலுக்குத் தேவையான சத்து நிறைந்த பொருளே ‘பிடி அவல்”. அவ்வப்போது அதை வெந்நீரில் வெந்து உப்பு சேர்த்து உண்ணலாம் அல்லது வெல்லம் சேர்த்து உண்ணலாம். கண்ணனைப் பார்க்க நெடுதூரம் நடந்த சுதாமா என்ற குசேலரும் அதைத்தான் எடுத்துச் சென்றார். அய்யப்ப பக்தர்கள் இருமுடி எடுத்துச் செல்லுவதில் முன் முடி அய்யனுக்காக, பின் முடி தனக்காக என்றிருப்பதுபோல் குசேலரும் பிடி அவலை இரு பகுதியாக கொண்டு சென்றிருக்கலாம். தெரியவில்லை!
கண்ணன் மாளிகையும் சூழ்நிலையையும் பார்த்தபின் போயும் போயும் அழுக்குத்துணியில் சுற்றிக்கொண்டு வந்த ஆறிய உலர்ந்த அவலைப்போய் அவனுக்குத் தருவதா என்று அவர் சங்கோசப்பட்டது நியாயமே! அதைப் பிடுங்கி உண்டு அவர் வினை அறுத்த வள்ளல் கண்ணன்! கோகுலத்திலும் அதையே செய்தான்! ஒளித்து வைத்த வெண்ணையைத் திருடியாவது கோகுலவாசிகளைக் காக்க சிரமப்பட்டவன் கண்ணன்! நம் வினைகளின் திரட்டே அந்த வெண்ணை. அறியாமையால் அதைக் கட்டிக்காத்து மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறோம். நம்மைவிட அவனுக்குத்தான் அக்கறை அதிகம்! முருகனும் அதையே செய்கிறான். வேலும் மயிலும் எதற்கு?
வெறும் அலங்கார வேஷமா? இல்லை. கிரௌஞ்ச மலையைக் காட்டிலும் அதிகமாகவே இறுகி நிற்பது நமது உள்ளம் எனும் பாறாங்கல். அதை கூர்வேல் கொண்டு துளைத்து, மயில் மீது விரைந்து வந்து உள்ளே புகுந்து உள்ளக்குகையில் மறைந்து அருளும் குகன் அவன். உள்ளேயிருக்கும் அவனை வெளியே காணவே நாம் குன்றுதோறாடி தீர்த்த யாத்திரை செல்கிறோம். செல்ல உதவுவது இந்தப் பிடி அவல். அவலை அவனுக்குத் தந்து, கவலை நீங்கி நம் அவல நிலையிலிருந்து மீள்வோம். வள்ளி தந்த தினைமாவு உண்ட வாயனுக்கு நாம் தரும் அவல் கசக்குமா?
சொல் அவல்
இருப்பவல் என்ற சொல்லை நாம் திருப்புகழில் காண்கிறோம். பயந்த தனிவழிக்குத்துணை திருப்புகழே.! எனவே திருப்புகழும் பிடி அவலும் பிரிக்கமுடியாதது. இரண்டுமே நாம் தனிவழிப் போகையிலே துணையாக நிற்பது. நெல் அவலைவிட சொல் அவலாக விளங்குவது.நமது நீண்ட பயணத்தின் கடைசி கட்டம் முருகனின் திருவடிகளைப் பார்ப்பது. அதை ‘பல்லவி” என்பர். இன்னும் நெருங்கிய நிலை “அனு பல்லவி”. அதனுடன் ஐக்கியமாகும் நிலை “சரணம்’.
நாதவிந்து கலாதீ நமோ நமோ
பூதங்களின் பதி இறைவன். “அனு” என்றால் சமீபம். ஆக, அநுபூதி என்றால் இறைவனருகே கொண்டு செல்வது என்று பொருள். அது மௌன நிலையில் பிறக்கும் என்பதை “பேசா அநுபூதி பிறந்ததுவே” என்கிறார் அருணகிரியார். அகரம் முதல் க்ஷகரம் வரை 51 விந்து எழுத்துக்கள் (பீஜாக்ஷரங்கள்) தரும் சக்தியை திருமூலர் திருமந்திரத்தில் விளக்கியதைப்போல் அமைந்தது 51 பாடல்கள் கொண்ட கந்தர் அநுபூதி. அந்த அநுபூதியைப் பெறும் நமது நீண்ட ஆன்மீகப் பயணத்தில் துணையாக வருவது பிடி அவலும் இருப்பவலான திருப்புகழும். அதைப் பெற்று, ப்ரணவ நாதமும் விந்துவும் (பீஜமும்) சேர்ந்த அரும் பெரும் நிலையை வணங்குவோம்! நாதவிந்து கலாதீ நமோ நமோ!