ஜகத்குரு தரிசனம்
வேப்பம்பூ பச்சடி
(எழுசீர் விருத்தம்: காய் விளம் விளம் தேமா . காய் காய் காய் )

வேப்பம்பூ புளியுடன் வெல்லமும் நாங்கள்
. வேதமுனி அவைதன்னில் சமர்ப்பித்தோம்
வேப்பம்பூ பச்சடி செய்விதம் என்ன
. மேதையவர் எங்களிடம் கேட்டாரே
யாப்பென்றே அவரிடம் ஓர்முறை சொன்னோம்
. யாதுமறி யாதவர்போல் செவிமடுத்தார்
சாப்பாட்டுக் கித்துடன் தேனுடன் நெய்யும்
. சற்றேசேர் பச்சடியில் சுவைகூடும்! … 1
பக்குவமாய்ச் செய்தபின் பச்சடி அம்பாள்
. பாதத்தில் நைவேத்யம் செய்வீரே
முக்கண்ணி நம்மிடம் வசப்படு வாளே
. முன்வந்தே அருள்செய்து காத்திடுவாள்
அக்கணத்தில் கேட்டது சரியெனச் சொல்வார்
. அகமுடையான் பச்சடியை உண்டாலே!
சிக்கலின்றி பணிகளைச் செய்வரே செய்வோர்
. சீர்மிக்க பச்சடியின் மகிமையன்றோ! … 2
பக்குவமாய்ப் பச்சடி செய்திடச் சொல்லிப்
. பணித்தாரே திருமடத்தின் பிரசாதம்!
சிக்கனமாய்ப் பச்சடி தந்தவர் கேட்டார்
. தெரிகிறதா நான்தந்த காரணமே?
தக்கபடிப் பெரியவர் சொல்வது உள்ளம்
. தங்கிடவே என்றுரைத்தாள் ஓர்மங்கை
முக்கண்ணி பக்தியில் எந்நாளும் நீங்கள்
. முழுகிடவே தந்தேன்நான் என்றாரே. … 3
புதுக்கோட்டை பத்தராய்த் தரிசனம் செய்தே
. புண்ணியங்கள் பெற்றோமே நாங்களெலாம்!
எதுசொன்னா லுமதிலோர் தத்துவம் காட்டி
. எங்களுக்கு வழிசொல்லும் காஞ்சிமுனி
பொதுவான அறமென உள்ளதைச் செய்தால்
. பொலிவுடனே வாழ்ந்திடலாம் என்றாரே
எதுநல்ல காரியம் என்றுநாம் தேர்ந்தே
. இறைபக்தி உடன்சேரச் செய்வோமே! … 4
–ரமணி, 13/08/2015
Source…www.periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/thread/9877?page=1&scrollTo=16638#ixzz3ihamzKId