“இன்று மாலை காஞ்சிபுரம் மகா பெரியவா பிருந்தாவனம் சென்றிருந்தேன். அற்புதமான தரிசனம் (இரவு ஆரத்திக்குப் பின் எடுக்கப்பட்ட படத்தை இணைத்துள்ளேன்). மகா பெரியவா சரணம்.
கடந்த 5.6.2016 ஞாயிறன்று கோவைப்புதூர் பிராமண சேவா சங்கத்தின் சார்பாக அங்குள்ள சுந்தர விநாயகர் ஆலயத்தில் ‘ஷீர்டி பாபா மகிமை’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினேன்.
எனது நிகழ்ச்சிகள் குறித்து முகநூலிலும், மெயிலிலும் முன்கூட்டியே பதிவிடுவது வழக்கம். அந்தந்த ஏரியாவில் உள்ள பக்தர்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும் என்பதால் இப்படி. சமீப நாட்களில் முக்கியமான எனது சொற்பொழிவு விவரங்களை வாட்ஸப்பில் சில குரூப்களிலும் நானே பதிவிடுவது வழக்கம்.
அதுபோல் ஒரு வாட்ஸப் குரூப்பில் கோவை நிகழ்ச்சிகள் குறித்துப் பதிவிட்டேன். அதில் ‘ஷீர்டி பாபா மகிமை’ குறித்து நான் சொற்பொழிவு நிகழ்த்தப் போவது குறித்து அதே குரூப்பில் ஒரு அன்பர் தனது கண்டனத்தைத் குரல் வாயிலாகவே பதிவு செய்திருந்தார். அதன் சாராம்சம் – ‘மகா பெரியவா மகிமை பற்றிப் பேசி வரும் தாங்கள் ஷீர்டி பாபா பற்றி பேசுவது சரியல்ல. இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கண்டனத்துக்குரியது’ என்பது போல் பதிவு செய்திருந்தார்.
நான் இதைக் கேட்டு விட்டு, எல்லாம் மகா பெரியவா லீலையே என்று விட்டு விட்டேன். காரணம் – ஷீர்டி பாபா பற்றிப் பேசுவது இது முதல் முறை அல்ல. மயிலாப்பூர் ஷீர்டி சாய்பாபா ஆலயத்தில் பாபா பற்றிப் பேசி இருக்கிறேன். பொதிகை ‘குரு மகிமை’ நிகழ்ச்சியில் அவ்வப்போது பாபா பற்றிப் பேசியும் வருகிறேன். எனவே, இவரது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டு விட்டேன். என்றாலும், அவர் ஏன் இப்படிப் பேசினார் என்று எனக்குள் ஒரு கேள்வி அவ்வப்போது எழுந்து கொண்டே இருந்தது.
இன்று பெரியவா பிருந்தாவனத்தில் அவரது சந்நிதிக்கு நேர் எதிரில் நான் அமர்ந்திருக்கும்போது இதற்கு பதில் கிடைத்தது, சிலிர்க்க வைத்த ஓர் அனுபவம்.
காஞ்சிபுரத்தில் வசிக்கும் பாரதி என்ற பெண் மகா பெரியவாளின் அத்யந்த பக்தை. இவர் ஒரு மாற்றுத் திறனாளி. என்றாலும், சிரமத்தைப் பற்றிச் சற்றும் பொருட்படுத்தாமல் வீல் சேரில் மடத்துக்கு வந்து விடுவார்.
அவர் இன்று பெரியவா சந்நிதிக்கு எதிரே அமர்ந்திருந்தார். பக்கத்தில் நான் அமர்ந்திருந்தேன். அப்போது, ‘‘உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். இங்கே சின்ன காஞ்சிபுரத்துல அமுதானு என் ஃப்ரெண்டு இருக்கா. அவகிட்ட பெரியவா ஒரு அற்புதம் பண்ணி இருக்கா. தோ, அவளே வந்து சொல்லுவா. இங்கேதான் பிரதட்சிணம் பண்ணிண்டிருக்கா’’ என்று ஆரம்பித்தார் பாரதி.
அடுத்த ஒரு சில நிமிடங்களில், பிரதட்சிணத்தைப் பாதியில் நிறுத்தி விட்டு வந்த அமுதாவும் அருகே அமர்ந்தார். அமுதாவே ஆரம்பித்தார். ‘‘எனக்கு மகா பெரியவாதான் எல்லாம். எங்க வீட்டுல தினமும் பூப்பறிச்சு மகா பெரியவா உள்ளிட்ட எல்லா சாமிங்களுக்கும் வைப்பேன். சமீபத்துல ஒருத்தர் என்கிட்ட ஷீர்டி சாய்பாபா விக்கிரகம் ஒன்றைக் கொடுத்தார். அதையும் வீட்டு பூஜையறையில வெச்சிருந்தேன். ஏனோ தெரியலை… அதற்கு பூ வெச்சதில்லை. ஆனா, பிரார்த்திப்பேன்.
திடீர்னு ஒரு நாள் பெரியவாளே என்கிட்ட ‘தினமும் ஷீர்டி பாபாவுக்கும் பூ வை. அவரும் நானும் வேறில்லை’ சொல்றதைப் போல் இருந்திச்சு. ஷாக் ஆகி அடுத்த நாள் முதல் ஷீர்டி பாபாவுக்கும் பூ வெச்சு பிரார்த்தனை பண்றேன்’’ என்றார்.
வாட்ஸப் குரூப்பில் அந்த அன்பர் கேட்டதற்கான பதிலை, இதைவிட வேறு எப்படித் தெளிவாக மகா பெரியவாளால் தர முடியும்?!
என்னைப் பொறுத்தவரை – மகான்களுக்குள் பேதமே இல்லை. என்னைப் பொறுத்தவரை ஆதி சங்கரரும் ஒன்றுதான். ராமானுஜரும் ஒன்றுதான். காவாங்கரை கண்ணப்ப ஸ்வாமிகளும் ஒன்றுதான். என்றைக்குமே நான் பேதம் பார்த்ததில்லை.
மகா பெரியவா சரணம்.
அன்புடன் .
சுவாமிநாதன் “
Source…. Input from My friend Shri Swaminathan , Chennai thro his mail to me today.
Natarajan