ஏரி காத்த அருண்…….!!!

e_1475133384

சென்னை மாம்பலம்வாசிகளுக்கு மேட்லி சாலை சப்வேவை ஒட்டி இருக்கும் கோதண்டராமர் கோயில் குளம் வெகு பிரபலம். அதன் புகழுக்கு தன் அசுத்தமும் ஒரு காரணம். இப்போதுபோய் பாருங்கள். குப்பைகளும் கழிவுகளும் நீக்கப்பட்டு, ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு, கரைகள் உயர்த்தப்பட்டு, திடீரென்று புதுப்பொலிவோடு புனிதமும் காக்கப்பட்டுள்ளது. இந்த அசத்தல் மாற்றத்துக்கு அசல் காரணம், 26 வயதான அருண் கிருஷ்ணமூர்த்தி. கூகுள் நிறுவன வேலையை விட்டுவிட்டு ஏரி, குளங்களைக் காப்பதில் ஒன்பது வருடங்களாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார் அருண். இதற்கெனவே ‘என்விரான்மென்டலிஸ்ட் பௌண்டேஷன் அஃப் இந்தியா’ என்ற அமைப்பை நிறுவியுள்ளார். அவரிடம் பேசினோம்:

மொத்தம் எத்தனை ஏரி, குளங்களை மீட்டிருப்பீர்கள்?
சென்னை, கோவை, ஹைதராபாத், தில்லி, புதுச்சேரி ஆகிய ஊர்களில் மொத்தம் 39 ஏரிகளையும் 41 குளங்களையும் சுத்தப்படுத்தி இருக்கோம். இதை நான் மட்டுமே செய்யலை. என்னோட கிட்டத்தட்ட 900 வாலண்டியர்கள் இருக்காங்க. அவங்கதான் எல்லாத்தையும் செய்யறாங்க…

எப்படி இதையெல்லாம் ஆரம்பிச்சீங்க?
சின்ன வயசிலேர்ந்தே பறவைகள் மீது ஆர்வம் அதிகம். ஆந்திரா பூர்வீகம். ஆனால், சென்னை முடிச்சூரில்தான் வளர்ந்தேன். கீழ்க்கட்டளை பகுதியில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் அழகைப் பார்த்து வளர்ந்தவன். இதற்குக் கீழ்க்கட்டளை ஏரி தான் நீராதாரம். ஏரி நிறைந்து வழியும்போது ஏகப்பட்ட பறவைகளும் மீன்களும் ஆமைகளும் கண்ணில் படும். சின்ன வயதில் பார்த்த காட்சிகள் தற்போது இல்லை. ஏரி இருந்த இடத்தில் குப்பைகள் மண்டிக் கிடக்கின்றன.
இதைச் சுத்தப்படுத்தி மீண்டும் எழில் கொஞ்சும் ஏரியாகப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இயற்கை ஆர்வம் என்னும் முளைவிட்டது. ஹைதராபாத்துல கூகுள் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தப்பவே ஒரு ஏரியைத் தூர்வாரினோம். அப்புறம் அதையே ஏன் எல்லா இடங்களிலேயும் செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. வேலையை விட்டுட்டு நண்பர்களின் உதவியோடு இதைச் செய்யறேன்.

எப்படி திட்டமிடறீங்க?
ரொம்ப மோசமா இருக்கற ஏரி, குளங்களையோ, ஆக்கிரமிப்பு, கேஸுன்னு இருக்கக்கூடிய இடங்களையோ தொடறதில்லை. தூர்வாரி கிளீன் செஞ்சா காப்பாத்த முடியும்னு தோணக்கூடிய ஏரி, குளங்களை எடுத்துக்கறோம். அதுவும் அந்த நீர்நிலைகளைச் சுத்தி இருக்கிற மக்களே எங்ககிட்ட கேட்டாங்கன்னா உடனடியா எடுத்துக்கறோம்.
முதல்ல நேரா போய்ப் பார்த்துட்டு, என்னவிமான வேலைகள் செய்யணும்னு அசெஸ் பண்ணுவோம். அப்புறம், எங்களோட ஃபேஸ்புக் பேஜ்ல, வெப்சைட்டுல, மொபைல் ஆப்கள்ல புதன்கிழமை தோறும் விவரங்களைப் போட்டுடுவோம். யார் யாரெல்லாம் ஆர்வமாக இருப்பாங்களோ, அவங்க எல்லாரும் அந்தந்த ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க.

வாலண்டியர்களுக்கு என்ன வசதி செய்து தர்றீங்க?
ஒண்ணுமே இல்ல. விருப்பப்படறவங்க தங்களோட சொந்தச் செலவுல நேரே ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க. அவங்களுக்கு முகத்துல போட்டுக்கிற மாஸ்க், கிளவுஸ், சுத்தப்படுத்தத் தேவையான கருவிகள்தான் நாங்க கொடுக்கறோம். உள்ளூர் அதிகாரிகள் கிட்ட சொல்லி, சுத்தப்படுத்தத் தேவையான பர்மிஷனை வாங்கறது மட்டும்தான் எங்க பொறுப்பு.
காலையில் ஏழு மணியிலேருந்து பதினோரு மணி வரை வேலை, பப்ளிசிட்டி இல்லை, சின்சியரா, கௌரவம் பார்க்காமல், சுத்தமான சேவை மனப்பான்மையோட வர்றவங்க மட்டும்தான் இங்கே இருக்காங்க.

யாரெல்லாம் ஆர்வம் காட்டறாங்க?
நிறைய பேருக்கு இதுபோன்ற வேலைகளில் ஈடுபடணும்கற ஆசை இருக்கு. ஸ்கூல், காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வராங்க; காக்னிஸண்ட், போர்டு நிறுவன ஊழியர்கள் வராங்க, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வராங்க, நம்ம ஊர், நம்ம தண்ணீர், நாமதான் இதைக் காப்பாத்தணுங்கற உத்வேகத்தோட வருவாங்க. பல பேர், வெளியூர்லேருந்தெல்லாம் கூட வந்து வேலை செய்வாங்க. அவங்களுக்குள்ள அப்படியொரு நட்பும் பந்தமும் ஏற்பட்டுப் போச்சு. ஒவ்வொரு ஸ்பாட்லேயும் சுமார் நாற்பது முதல் ஐம்பது பேர் கூடிடுவாங்க.

வெளியூர், வெளி மாநிலங்கள்ளேயும் வேலை செய்றீங்களா?
ஆமாம், முதல்ல, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒரே ஒரு ஏரி அல்லது குளத்தை கிளீன் செய்யற வேலையைப் பார்ப்போம். படிப்படியா, இப்போ ஒவ்வொரு ஊர்லேருந்தும் ஆர்வலர்கள் வந்து எங்களோட இணைஞ்சுக்கிட்டாங்க. இப்ப ஞாயிறு மட்டுமல்லாமல் சனிக்கிழமையும் வேலை செய்யறோம். ஒரு ஊர்ல மட்டுமல்ல, ஒரே சமயத்துல பல ஊர்கள்ல வேலை செய்யறோம். இவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கறதே எனக்கு முக்கிய வேலை.

அரசு ரீதியான உதவிகள் கிடைக்குதா?
தாராளமா, இதோ இந்த மாம்பலம் குளத்துல ஏராளமான ஆகாயத் தாமரைச் செடிகள். சென்னை மாநகராட்சிதான் லாரிகள் கொடுத்தாங்க, அவங்க தான் எடுத்துக்கிட்டுப் போனால்க. அதேபோல் பல ஊர்கள்ல பஞ்சாயத்துப் போர்டுகள் உதவியிருக்கு. தலைவர்கள் உதவியிருக்காங்க.

கிளீன் பண்ணிட்டு வந்துட்டா மட்டும் போதுமா?
போதாது. அதனாலதான், உள்ளூர் மக்களுடைய உதவியை நாடறோம். அவங்கதான் தொடர்ந்து குப்பை போடாமலும், அசுத்தங்கள் சேராமலும் பார்த்துக்கணும். அதுக்கு என்ன செய்யணும்ங்கறதையும் அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கறோம்.

அடுத்தடுத்த திட்டங்கள்?
ஏற்கெனவே இருக்கிற நகரங்களோடு புதிய ஊர்களிலேயும் ஏரி, குளங்களைச் சுத்தப்படுத்த மக்கள் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. தஞ்சாவூர், வல்லம், கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த விவசாயச் சங்கங்கள் எங்களைக் கூப்பிட்டு இருக்காங்க. அவங்க ஒத்துழைப்போட அங்கே இரக்கிற நீர்நிலைகளைக் காப்பாத்தணும். திருவனந்தபுரம், குறிஞ்சிப்பாடியிலேர்ந்தும் அழைப்பு வந்திருக்கு.

பிரச்னைகளைச் சந்திச்சதில்லையா?
அப்படிச் சொல்லமாட்டேன். அதையெல்லாம் தடைகளா நினைக்கிறதில்ல. பாடங்களா எடுத்துக்கறேன். சமூகத்திலிருந்துதான் மாற்றங்கள் ஏற்படணும். அதுவும் நீர்நிலைகளை அசுத்தப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டியது நம்மோட பொறுப்பு பல பள்ளிகள், கல்லூரிகளுக்கப் போய் இதைப் பற்றிப் பேசறேன். தொண்டர்களின் பலம் கூடக்கூட, இன்னும் பல ஏரிகளையும் குளங்களையும் காப்பாற்ற முடியுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு

ஆர். வெங்கடேஷ்  in http://www.dinamalar.com  based  on  an input from Kalki 

Natarajan

 

Leave a comment