” யார் பாக்யசாலிகள் ?….”

Here is a wonderful sketch of Periva’s Viswaroopa Darisanam and an article about His Holiness presented by our respected moderator Sri anusham163

யார் பாக்யசாலிகள் ?

இதோ இந்த நடமாடும் தெய்வம், காலை 3 மணிக்கு விழிப்பது முதல் இரவு 11 மணிக்கு உறங்கச் செல்லும் வரை அவர் கூடவே இருந்து, அவர் செய்யும் எல்லா கர்மங்களுக்கும் வேண்டிய தேவைகளைப் பூர்த்தி செய்து, ‘என் கடன் பணி செய்திருப்பதே’ என்றிருந்த நூற்றுக்கணக்கான அணுக்கத் தொண்டர்கள் அந்த பாக்யசாலிகள்.

அவர், தம் பொற்பாதங்கள் பதித்து, ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து இப்புண்ணிய பூமியை மேலும் புனிதமடையச் செய்த போது, தாமும் அவர் கூடவே நடந்து, பசி, தாகம் களைப்பு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து, அவர் பணியே செய்து கோடி புண்ணியங்களைப் பெற்ற அந்த அணுக்கத் தொண்டர்களே அந்த மாபெரும் பாக்யசாலிகள்.

வேதங்களையும் சாஸ்த்ரங்களையும் நன்கு கற்றறிந்து, அந்த ப்ரத்யக்ஷ தெய்வம் ஒவ்வொரு வருஷமும் நடத்திய ஆகம, சில்ப, விஸ்வ பாரத, வேத சாஸ்த்ர சதஸுகளில் பங்கேற்று அவர் தந்த சம்மானங்களைப் பெற்ற அந்த வேத விற்பன்னர்களே அந்த பாக்யசாலிகள்.

அவருடன் மிக நெருங்கிப் பழகி, அவருடன் சம்பாஷித்து, தர்க்கம் செய்து அவர் அனுக்ரஹத்தால், அவரைப் பற்றிய அரிய விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட, ரா. கணபதி, பரணீதரன் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்களும் சில்பி போன்ற ஓவிய விற்பன்னர்களுமே அந்த பாக்யசாலிகள்.

‘எத்தனை பேர் தன்னை தரிசனம் செய்ய வந்தாலும், அத்தனை பேருக்கும் தீர்த்தப் பிரசாதம் வழங்கி விட்டே பிக்ஷைக்குச் செல்வார்’ என்ற உறுதியான நம்பிக்கையுடன், ‘க்யூ’ வில் காத்திருந்து, அவர் வழங்கும் தீர்த்தப் பிரசாதத்தைப் பெற்ற பின்பே செல்லும், லக்ஷக்கணக்கான பக்தர்களே அந்த பாக்யசாலிகள்.

‘வேதம் காக்கப்படவேண்டும்’ என்ற உன்னதமான குறிக்கோளுடன் நாடெங்கும் நிறுவச் செய்த வேதபடசாலைகளில் படித்து, தாம் கற்றவற்றை, அந்த தெய்வத்திடம் ஓதிக் காண்பித்து, விலைமதிபற்ற அவருடைய அனுக்ரஹத்தையும் சன்மானங்களையும் பெற்ற அந்தப் பால் மணம் மாறாத பாலகர்களே அந்த மஹாபாக்யசாலிகள்.

லௌகீக வாழ்வில் தமக்கு நேர்ந்த எண்ணற்ற துயர்களை, இந்தத் துயர் துடைக்கும் பெம்மானிடத்தில் கொட்டி அழுது, அவருடைய அன்பையும், ஆதரவான சொற்களையும் கேட்டு மனசு லேசாகிச் சென்ற, லக்ஷோப லக்ஷம் பக்த கோடிகளே அந்த பாக்யசாலிகள்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த பாக்யசாலிகளில் நானும் ஒருவனாக இருக்கக் கொடுத்து வைக்கவில்லையே என்ற தாபம் தீரும் வரை அந்த பாக்யசாலிகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்; அவர்களுடைய அநுபவங்களைப் படித்து, கண்களில் நீர் பெருக நம் பாவங்களைக் கழுவிக் கொள்ளலாம்.

தாபமும் தீராது; கண்ணீரும் நிற்காது.

மஹாபெரியவா திருவடிகள் சரணம் !

Read more: http://periva.proboards.com/thread/10436/sri-anusham163#ixzz3qBcC8ZY4

Source…..www.periva.proboards.com

Natarajan

 

Leave a comment