நித்தமும் சுத்தம்; மேகாலயாவின் சொர்க்க பூமி மாவுலிநாங்…”ஆசியாவின் சுத்தமான கிராமம்” !!!…..

நாட்டின் வட கிழக்கில் அமைந்துள்ள, மேகாலயா மாநிலத்தில் உள்ளது, மாவுலி நாங் கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் இங்கு வசிக்கும், காஷி இன மக்கள், 100 சதவீதம் எழுத்தறிவு பெற்றுள்ள போதும், இவர்களின் பிரதான தொழில் விவசாயம் தான்! வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளின் இரு மருங்கிலும் காணப்படும் மூங்கில் வீடுகள், காண்போரின் கண்களை மட்டுமல்லாது நெஞ்சத்தையும் கவர்கின்றன. சாலையின் எந்த ஒரு பகுதியிலும் குப்பையை காண
முடிவதில்லை. காரணம், சாலைகளின் இரு மருங்கிலும் கனிம மற்றும் கரிமக் கழிவுகளை தனித்தனியாக தரம் பிரித்து கொட்டுவதற்காகவே, மூங்கிலால் ஆன குப்பைக் கூடைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சேகரமாகும் குப்பை, உரமாக பயன்படுத்தப்படுகிறது. பெரியவர்கள் மட்டுமின்றி, சிறியவர்களும், தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவதால், கிராமமே சொர்க்கமாகக் காட்சியளிக்கிறது.

பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே, சுத்தம், சுகாதாரம் குறித்து பெற்றோரால் பாலபாடம் நடத்தப்படுகிறது. இங்குள்ள பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்ய யாரும் தயங்குவதில்லை. தவிர, தோட்டங்கள், சாலைகள் மற்றும் பொது இடங்களை பொதுமக்களே சுத்தம் செய்து
பராமரிக்கின்றனர்.
இந்தப் பணி, ஒவ்வொரு நாளும் மாலையில் நடக்கிறது. சீரான, சுத்தமான சாலைகள், திட்டமிட்ட கட்டமைப்பு, தடையில்லா, சுத்தமான குடிநீர் வசதி போன்றவை, மக்களின் நிம்மதியான சுகாதாரமான வாழ்க்கைக்கு வித்திடுகிறது.
கல்வியையும், விவசாயத்தையும் இரு கண்களாய் எண்ணும் இவர்கள், காடுகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். ‘நாடு வளம் பெற காடுகள் தேவை’ என்பதை உணர்ந்துள்ள இவர்கள், அதை போற்றி பாதுகாக்கவும் செய்கின்றனர்.

மேகாலயாவின், கிழக்கு காஷி மலைகள் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவுலிநாங், சிறந்த சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. இயற்கை அன்னையின் அருளை பரிபூரணமாக பெற்றுள்ள இந்த கிராமத்திற்கு, ஆண்டுதோறும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான
சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மலைகள், நீர்வீழ்ச்சிகள், காடுகள், அரிய வகை மரங்கள் என இயற்கை படைப்புகளோடு, தொழில்நுட்ப ரீதியாகவும் இக்கிராமம் வளர்ச்சி அடைந்துள்ளது. ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புடனான வளர்ச்சி’ என்ற வகையில், இக்கிராம மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
சுற்றுலா பத்திரிகையான, ‘டிஸ்கவர் இந்தியா’ மாவுலிநாங் கிராமத்திற்கு, ‘ஆசியாவிலேயே சுத்தமான கிராமம்’ என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது. பரம்பரை பரம்பரையாக இங்குள்ள மக்கள், சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பேணி பாதுகாத்து வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பற்ற வகையில் சுத்தம், சுகாதாரத்தை பேணுவதே இவர்களின் தலையாய கடமையாகக் கொண்டுள்ளனர்.
இங்குள்ள மக்கள், தாய் வழி சமூகத்திற்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதாவது, தாயின் சொத்துகள், அவரின் கடைசி மகளுக்கே சென்று சேர்கிறது.

 

‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, மாவுலிநாங் கிராமத்தை வெகுவாக பாராட்டினார். ‘நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், இக்கிராம மக்களைப் போல் செயல்பட்டால், இந்தியா விரைவில் சுத்தமான நாடாக மாறும்’ எனவும் தெரிவித்தார்.
நாட்டின் பெரும்பாலான நகரங்கள், குப்பையாலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டாலும் சீர்கெட்டுள்ள நிலையில், மாவுலிநாங் கிராம மக்கள், விதிவிலக்காய் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்களை முன்னோடியாகக் கொண்டு, நாட்டின் பிற பகுதியினர் செயல்பட்டால், மகாத்மா காந்தியின், 150வது பிறந்த ஆண்டான, 2019ல், குப்பை அற்ற சுகாதாரமான இந்தியாவை நம்மால் உருவாக்க முடியும். வி.சண்முகநாதன் மேகாலயா கவர்னர்

Source….www.dinamalar.com

Natarajan

Leave a comment